“பெல்லட் குண்டுகள் உங்கள் உடலில் நுழையும்போது உங்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் பற்றி எரிவது போன்று உணர்வீர்கள். அவை துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் போது மிகவும் சூடாக இருக்கும். உங்கள் கண்களிலோ அல்லது மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டு உங்கள் உடலில் அவை நுழைந்தால் அவை மிகவும் ஆபத்தானவை. உங்கள் கால்களிலோ அல்லது பின்பக்கமோ அவை மோதியிருந்தால் முதலுதவி மூலம் அந்த தாக்குதலை சமாளிக்கலாம்.” என்கிறார் அகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அகமது மருத்துவரோ அல்லது மருத்துவ மாணவரோ அல்ல. வணிகவியல் படிக்கும் மாணவர். கடந்த சில வாரங்களாக, அன்ச்சார் பகுதியின் பெல்லட் குண்டு தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் மருத்துவராக செயல்பட்டுவருகிறார்.

Pellet-victims
கோப்புப் படம்

ஸ்ரீநகரில் இருக்கும் சவுராவைச் சேர்ந்த அன்ச்சார் பகுதி, காஷ்மீர் முடக்கப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்தே போராட்டத்தின் விளைநிலமாக உள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரே முடக்கப்பட்டு, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதில் இருந்து அந்தப் பகுதி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சவுராவை ஒட்டிய புச்புராவைச் சேர்ந்த அஸ்ரர் அகமது கான் எனும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பெல்லட் குண்டுகளின் கொடுங்காயங்களின் விளைவாக மரணமடைந்தார். ஆனால் அவர் கல்லடி பட்டதனால்தான் இறந்தார் என்று கூறியது போலீசு. பெல்லட் குண்டு தாக்குதலால் படுகாயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் பலவும் மறைக்கப்பட்டுவருகின்றன. போலீசு அதிகாரிகள் மருத்துவமனையில் மாறுவேடமிட்டு போராட்டத்தில் பங்கு பெற்று சிகிச்சைக்கு வருபவர்களைக் கண்காணித்து வருகிறது. பல சந்தர்ப்பங்களில் காயமடைந்த இளைஞர்கள் கைது நடவடிக்கைக்குப் பயந்து மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை.

காஷ்மீரின் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்ட பிறகு அன்ச்சார் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத வழிபாட்டிற்குப் பின்னர் போராட்டம் நடைபெறுகிறது. முதல் வெள்ளிக்கிழமை போராட்டம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. அன்ச்சார் பகுதி மக்கள் பேரணியாக ஸ்ரீநகரின் நகர்ப்பகுதி நோக்கி வந்தபோது சூனிமார் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

படிக்க:
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
♦ பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

“குறைந்தபட்சம் 18 பேராவது அன்று சூனிமார் பகுதியில் படையினரால் காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் அருகில் உள்ள ஷெரி காஷ்மீர் மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் அன்று மாலையே நாங்கள் அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஏனெனில் போலீசு அவர்களைத் தேடி வரும் என்று எங்களுக்குத் தெரியும்.” என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த பெல்லட் குண்டு நீக்கு மருத்துவர்கள்.

ஆகஸ்ட் 9 சம்பவத்திற்குப் பின்னர், அப்பகுதி மக்கள் சாலைகளை தோண்டியும், தடுப்பரண்களை ஏற்படுத்தியும் படையினர் தங்களது குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தனர். பல நாட்களுக்கு அவர்களை இரவுநேர வேட்டையை நடத்த விடாமல் நுழைவாயிலிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் மக்கள்.

ஆனால் ஆகஸ்ட் 23 அன்று, படையினர் அன்ச்சர் பகுதியில் நுழையும் நிலைக்கு முன்னேறினர். ஜம்மு காஷ்மீர் போலீசு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு உள்ளிட்ட படையினர் தடை ஏற்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

Pellet-victim
கோப்புப் படம்

“அன்று தொழுகை முடிந்து வந்த சமயத்தில் படையினருடனான மோதல் அன்ச்சார் முழுவதும் தொடங்கியது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில சிறுவர்களுக்கு கண்களுக்குள் பெல்லட் குண்டுகள் பாய்ந்தன.” என்கிறார் அகமது.

காயமடைந்தவர்கள் ஜெனாப் சாஹிப் ஆலயத்தின் ஒரு நீண்ட ஹாலில் கூடினர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. “அந்த சூழல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களுக்கு உதவ மருத்துவர்கள் குழுவை வரவழைத்தனர். அவர்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்களைப் பார்த்தனர். எங்களைப் போன்ற உள்ளூர் வாசிகள், குறைவான காயம்பட்டவர்களுக்கு உதவி புரிந்தோம். கண்களில் காயமடைந்த சிலரைத் தவிர வேறு யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை” என்கிறார் அகமது.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று அங்கு வீடியோ எடுத்த ஒரு புகைப்பட பத்திரிகையாளர், மக்கள் வரிசையாக சிறு சிறு குழுக்களாக ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து வந்தனர் என்கிறார்.

அன்ச்சரை சேர்ந்த பெல்லட் குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த தங்களது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள், பிளேடு, டெட்டால் முக்கப்பட்ட பஞ்சு ஆகியவையே ஆகும்.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

பெயர் சொல்ல விரும்பாத பெல்லட் குண்டு காய சிகிச்சை அளிப்பவர் பெல்லட் குண்டுகளை எடுக்கும் வழிமுறைகளைப் பற்றி கூறுகி்றார். “பெல்லட் குண்டுகளை மனித உடலில் இருந்து வெளியேற்ற இரண்டு வழிமுறைகள் உண்டு. அவை தோலின் மேல்புறத்திற்கு அருகே பொதிந்திருந்தால், காயத்தின் இருமுனைகளையும் அழுத்தி பிதுக்கி அந்தக் குண்டை வெளியேற்றிவிடலாம். ஒரு வேளை அது தோலின் உள்ளே ஆழமாகப் பதிந்திருந்தால், முதலில் விரல் முனையைப் பயன்படுத்தி, குண்டு பொதிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்போம். பின்னர், அதன் அருகில் உள்ள தோலை பிளேடால் கீறி பெல்லட் குண்டுகளை வெளியில் எடுப்போம். அதன் பிறகு அந்தக் காயத்தை டெட்டால் முக்கிய பஞ்சால் துடைப்போம். இவை அனைத்தும் மயக்கமருந்து இல்லாமல் செய்யப்படும் சிகிச்சையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இவை அனைத்திற்கும் வெகு நேரம் பிடிக்கும்” என்கிறார் அவர்.

சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து இவ்வகையில்தான் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர் என்கிறார் ஒரு உள்ளூர்வாசி. பெல்லட் குண்டு சிகிச்சை அளிப்பவர்கள் முந்தைய காலகட்ட போராட்டத்தில் பங்குகொண்டு இது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்.  கடந்த 2016-ம் ஆண்டு, புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்தனர். புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த எழுச்சியில் காயமடைந்தவர்களில் சுமார் 15 சிறுவர்களுக்கு நானே தனியாக மருத்துவம் பார்த்தேன் என்கிறார் அகமது. அந்த ஆண்டுகளில் அவரது நண்பர்கள் சிலரும் பெல்லட் நீக்குவதில் வல்லுனர்கள் ஆகியிருக்கின்றனர்.

கைது பயம், மக்களை மருத்துவமனைக்குச் செல்வதில் இருந்து விலக்கிவைக்கிறது. அன்ச்சார் பகுதி மக்கள், பொதுவான காயங்களுக்கு கை வைத்தியங்களையே சார்ந்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருகின்றனர்.

“டைபாய்டிலிருந்து – சளி காய்ச்சல் வரை நாங்களே எங்களுக்கான சிகிச்சையை செய்து கொள்கிறோம். அன்ச்சார் பகுதிக்குள் அதிகபட்சமாக நாங்கள் பெறும் மருத்துவ வசதி, உள்ளூர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் மூலம் மட்டும்தான் கிடைக்கிறது” என்கிறார் அன்ச்சார் பகுதியில் குடியிருக்கும் ஒருவர். அன்ச்சார் பகுதியில் இருந்து வெளியேற ஒருவரும் தயாராக இல்லை.

அன்றாட வாழ்க்கைப் பிழைப்பிற்குச் செல்லும் குடியானவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் உள்ளூர் போலீஸ் வித்தியாசம் பார்ப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த செபடம்பர் 14 அன்று, அன்ச்சார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சவுரா போலீசு நிலையத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு இளம்பெண்ணை தடுப்புக்காவலில் போலீசு வைத்ததை எதிர்த்து அந்த போராட்டம் நடத்தப்பட்டது. சவுரா பகுதியின் பிரதான சந்தையிலிருந்து மருந்துகள் வாங்கச் சென்ற அப்பெண்ணை போலீசு கைது செய்தது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

படிக்க:
ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

சவுரா போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசோ, “அப்பெண் கைது செய்யப்பட்டதை மறுத்ததோடு, சவுரா பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிகளிடம் கடையை மூடும்படி கூறினார்” என்கிறது. காஷ்மீர் முழுவதும் ஆகஸ்ட் 5 முடிவுகளுக்கு எதிராக உள்ளூர் கடையடைப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிலர், கடையடைப்பு செய்யாத வியாபாரிகளை கடையை மூடக் கூறி தாக்கியிருக்கின்றனர்.

சில பத்தாண்டுகளாக மொகரம் அனுசரிப்பு ஊர்வலம் காஷ்மீரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் சிறிய அளவிலான ஊர்வலங்கள், பகுதிகளுக்குள் நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. இத்தகைய மொகரம் ஊர்வலத்தில் மருத்துவ உதவிகள் செய்வதற்காக தன்னார்வலர்கள் பலரும் உடன் செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 10 அன்று நடத்தப்பட்ட சிறிய அளவிலான மொகரம் ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. “அமைதியாக நடைபெற்ற ஊர்வலங்களின் மீது பெல்லட் குண்டு தாக்குதல்களைத் தொடுத்தது போலீசு.” என்கிறார் சடிபால் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.

கடந்த செப்டம்பர் 10 அன்று சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு சடிபால் முகாமில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்.

பெல்லட் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எக்ஸ்-ரே படங்கள். (கோப்புப் படம்)

“தீவிரவாதம் அதிகமாக இருந்த 1990 காலப்பகுதியில் கூட இப்படி பெண்கள் மீதும் முதியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை.

இந்த முறை மொகரம் பண்டிகைக்கு மருத்துவத் தன்னார்வலர்களாக வந்தவர்கள் அனைவரும் பெல்லட் குண்டுகளை நீக்கும் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஆட்கள் அதிகமாக அடிபட்டிருக்கையில், இருக்கும் தன்னார்வ மருத்துவர்கள் போதுமானவர்களாக இல்லை. போதுமான உபகரணங்கள் இல்லை. அச்சமயத்தில்தான் நான், சைக்கிள் சக்கரக் கம்பியை எடுத்து வந்து அதன் ஒரு முனையைக் கூராக்கி, தீயில் காட்டி கிருமிநாசம் செய்து அதனைக் கொண்டு பெல்லட் குண்டுகளை உடலில் இருந்து வெளியே தோண்டி எடுத்தேன். நான் மட்டுமே 12 -க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன்” என்கிறார் ஒரு தன்னார்வலர்.

மருத்துவர்கள் இவ்வகைச் சிகிச்சையில் பொதிந்திருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறுகின்றனர். இவ்வகை முறையற்ற சிகிச்சைகளின் காரணமாக தோல் மூலமாக பாதிப்புகள் ஏற்படுவதில் தொடங்கி, முக்கிய உறுப்புகள் பாதிப்படைவது வரை ஏற்படக் கூடும் என்கின்றனர். “பொதுவாக நாங்கள் கால் மற்றும் பின்பக்கத்தில் புகுந்த பெல்லட்களை வெளியே எடுக்க மாட்டோம். காயமடைந்தவர்களுக்கு முதலில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத்தான் கொடுப்போம். தோலுக்கு உட்புறம் இருக்கும் இரும்புத் துகள்கள் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல்பகுதி ஆகியவற்றிற்கு அருகில் ஏற்பட்டிருக்கும் பெல்லட் குண்டுகளை மட்டுமே உடனடியாக வெளியே எடுப்போம்” என்கிறார் ஸ்ரீ மஹராஜா ஹரிசிங் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர்.

காயமடைந்த யாராக இருந்தாலும், அவர் ஆயுதமேந்திய குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மருத்துவ உதவி பெறுவதற்குத் தகுதியானவர், “பாலினம், இனம், தேசியம், மதம், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் மருத்துவ உதவி செய்ய வேண்டும்” என்று, 1949 – ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பிரிவு 12 கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது


சுருக்கப்பட்ட தமிழாக்கம் :
நந்தன்
நன்றி : ஸ்க்ரால்.