முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

-

“இடது கண்ணால் அவன் பார்க்க முடியாது. பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போல தோன்றும் அவனது இன்னொரு கண்பார்வையும் கூட பெல்லட் குண்டுகள் பார்வை நரம்பை சிதைத்து விட்டதால் இனி மங்கிவிடும். இது ஒரு கையறு நிலை” என்று மாணவன் மைசார் மீரை ஆய்வு செய்த ஸ்ரீநகரைச் சேர்ந்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் (SMHS) மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

அக்டோபர் 14 –ம் தேதி மாநகரின் நொவ்காம் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களுக்கிடையே 10–ம் வகுப்பு மாணவரான மீர் சிக்கிக்கொண்டான். அவனது மாமா பாசிர் அகமது கூற்றின் படி, ஒரு காவல்காரர் நேரடியாக பெல்லட் குண்டுகளால் மீரைத் தாக்கினார். பெல்லட் குண்டுகள் அவரது முகத்தைக் காயப்படுத்தின, கண் இமைகளை நொறுக்கின மற்றும் குருதிப்போக்கை ஏற்படுத்தின. மீர் இப்போது முழுமையான பார்வைக்குறைப்பாட்டின் வாயிலில் நிற்கிறான்.

மீரைத் தவிர, நவாப் பஜாரை சேர்ந்த சோனு மற்றும் சான்போராவின் டஃபெயில் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் கண் காயங்களுடன் அதே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எப்படியானாலும் மீரைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சிறு அளவில் மட்டுமே ஊடக கவனத்தைப் பெற்றது. பெல்லட் குண்டுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்று சென்ற ஆண்டு பரப்புரை நடத்திய ஜம்மு காஷ்மீர் குடிமை சமூக கூட்டணியிடமிருந்து (JKCCS) இம்முறை எவ்விதமான எதிர்வினையும் இல்லை. பேரளவிலான மனித இழப்புகள் இருந்த போதிலும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதை மாநில அரசாங்கம் ஆதரிப்பதுடன் காஷ்மீரின் புதிய நெறிமுறையாகவும் இது மாறிவிட்டது. பெல்லட் குண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக குறைந்தபோதிலும் இது தான் நிலைமை.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான புர்ஹான் வானி 2016 -ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டது மாநிலத்தில் ஒரு பெரும் எழுச்சியைத் தூண்டியது. மருத்துவமனையின் பதிவுகளின்படி அதன் பிறகு பெல்லட் குண்டுகளால் இரு கண்களும் பாதிக்கப்பட்ட 75 -வது நபர் மீர்.

“எனது மகன் ஒரு அரும்பு போல இருந்தான். கண்பார்வையற்ற ஒருவனாக அவன் வாழ நேருமோ என்று கற்பனை செய்ய கூட நான் அஞ்சுகிறேன்” என்று மீரின் தந்தை முஹம்மது ரம்சன் “தி வயரிடம்” கூறினார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக பெல்லட் துப்பாக்கிகளை 2010 -ம் ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது. போராட்டக்காரர்களுக்கெதிராக பாதுகாப்புப்படையினரின் முதற்கட்ட ஆயுதங்களாக அவை இன்று காஷ்மீரில் மாறிவிட்டன. பள்ளத்தாக்கிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கண்களை அவை பறித்துக்கொண்டன. கண் மருத்துவத்துறையால் கடந்த 13 மாதங்களில் நடத்தப்பட்ட சிகிச்சைக்குப் பிறகும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,091 பேர் ஒன்று பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ பார்வையை இழந்துவிட்டனர்.

மருத்துவமனையின் பதிவுகளின் படி பாதிக்கப்பட்ட 1,091 பேரில் 171 பேர்களுக்கு காயமடைந்த கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. இரண்டு கண்களில் காயமடைந்த 76 பேரில் 50 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் இல்லை. இன்னொரு கண்ணின் குறைந்தபட்ச பார்வைத்திறனும் 10 – 40 விழுக்காடு வரை மட்டுமே இருக்கிறது. மேலும் காயத்தின் கடுமை காரணமாக பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ஒன்று அல்லது இரண்டு கண்களும் அகற்றப்பட்டன.

பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு எழுச்சியின் போது குறைந்தது 100 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 15,000 பொதுமக்கள் பெல்லட் குண்டுகளால் தங்களது கண்களில் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்தது.

படுகொலைகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் அளவிற்கு பலப்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கு மாவட்ட அளவிலான சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) உருவாக்க இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்புபா முஃப்தி இந்த ஆண்டு ஜனவரி 10 -ம் தேதி மாநில சட்டமன்றத்தில் அறிவித்தார். அறிவிப்பு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விசாரணைப் பற்றி அரசாங்கத்திலிருந்து ஒருவார்த்தை கூட இதுவரை இல்லை.

பெல்லட் குண்டுகளால் பார்வை பறிக்கப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வியையும் வேலை வாய்ப்பையும் அளிப்பதாக முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதியும் கூட இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பார்வையிழந்தவர்களுக்கு வழங்குவதாக அறிவித்த 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையில் கூட வெறும் 34 பேருக்கு அதுவும் 1 லட்சம் மற்றும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவருக்கும் வேலை ஏதுவும் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சினைகளுக்கு கவலை தெரிவித்த அம்னெஸ்டி இண்டர்நேஷனல் பெல்லட் துப்பாக்கிகளை முழுமையாக தடை செய்யுமாறு செப்டம்பர் 23 ம் தேதி அழைப்பு விடுத்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தற்காக பயன்படுத்தப்படும் என்று மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் கூறப்பட்ட பெல்லட் துப்பாக்கிகளே காஷ்மீர் மக்களின் கண்பார்வை இழப்பிற்கும், படுகொலைக்கும் காரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கடுமையாக சாடியது.

“பள்ளிக்கூடம் செல்லும் சிறார்கள் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழந்துவிட்டனர் … மேலும் கல்லூரி மாணவர்களும் மேற்ப்படிப்பிற்கான அவர்களது கனவுகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இளைஞர்களும் குடும்ப பொறுப்பாளர்களும் குடும்பங்களுக்கு தாங்கள் சுமையாகிவிட்டதாக கூறுகின்றனர்” – பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான நிலைமையை அந்த அறிக்கை வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பார்வையை மீண்டும் பெறவில்லை என்பதை அது மேலும் அழுந்தக் கூறியது. பாதிக்கப்பட்டவர்களில் சிலரது கண்களில் இன்னும் பெல்லட் குண்டுகள் புதைந்திருப்பினும் அவற்றை அகற்றுவது மருத்துவமுறைப்படி மிகவும் ஆபத்தானது.

அம்னஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை வெளிவந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தெரு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட 21,000 சுற்றுகள் நெகிலித் தோட்டாக்களை காஷ்மீருக்கு அனுப்பியதாக மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) அக்டோபர் 8 ம் தேதி தெரிவித்தது. மேலும் பெல்லட் குண்டுகளை விட இது ஆபத்து குறைவானது என்றும் கூறியது.

கடந்த ஆண்டை விட எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தபோதிலும் கண் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வந்துக்கொண்டிருப்பதாக SMHS மருத்துவமனையில் ஒராண்டிற்கு மேலாக பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மூத்த கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் பலரது வாழ்க்கையை பெல்லட் குண்டுகள் அழித்துவிட்டிருக்கின்றன. பெல்லட் குண்டினால் தாக்கப்பட்ட பின்னர் கண்பார்வையை மீண்டும் பெறுவது என்பது நிச்சயமல்ல. மேலும், நீண்ட கால சிகிச்சை நோயாளி மற்றும் அவரது குடும்பத்தை உடல் மற்றும் பணரீதியாக சோர்வடையச் செய்கிறது” என்று அந்த மருத்துவர் தி வயரிடம் கூறினார். அனைத்து காயங்களும் இயல்பில் பார்வையை “முடக்குகின்றன”. அதுவே மருத்துவத்துறையின் படி காட்சி புலம் 20 பாகைக்கு குறைவாகவும், பார்வைக்குறைபாடு 6/60-க்கு குறைவாகவும் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் “மருத்துவரீதியாக பார்வையற்றவர்கள்” என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டேனிஷ் இராஜப் ஜாட் ஸ்ரீநகரின் இரெயினவரியைச் சேர்ந்தவர். ஜூலை 17, 2016 அன்று பாதுகாப்பு படையினரால் அருகிலிருந்து சுடப்பட்ட குண்டுகள் அவரது முகம் மற்றும் கண்களில் இரத்தக்கசிவை ஏற்படுத்தின. அந்தத் துப்பாக்கிச்சூட்டின் தாக்கம் மிகவும் வலுவானது. ஒரு முழு குண்டும் அவரது இடது கண்ணில் துளைத்து சிக்கியிருந்ததால் கண்ணை நீக்க வேண்டியிருந்தது. விளைவாக குடும்பப்பொறுப்பை தன்னந்ததனியாக சுமந்த அந்த 24 வயதான இளைஞர் வேலையிழந்தார். ஓராண்டிற்குப் பின்னரும் டேனிஷிற்கு நடப்பதற்கு இன்னும் துணை வேண்டும்.

“என் வலது கண்ணில் சற்று பார்வை இருந்தது. ஆனால் மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் அதுவும் போய்விட்டது. இப்போது என் கண்களுக்கு முன்னால் ஒரு நிழலை மட்டும் என்னால் பார்க்க முடிகிறது” என்று டேனிஷ் கூறினார். அவருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டது. டேனிஷுடைய இடது கண் குழியில் ஒரு செயற்கைக்கண் பொருத்தப்பட்டிருக்கிறது. அவரது வலது கண்ணிலும் கூட மீண்டும் பார்வை வரும் என்று மருத்துவர்கள் நம்பவில்லை.

பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்த பின்னர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடைச்செய்யக் கோரி ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஒருவேளை இந்த ஆயுதம் தடை செய்யப்பட்டால் நேரடியாக சுடுவது மட்டுமே தங்கள் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு என்றும் இன்னும் அது கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் மத்திய ரிசர்வ் படை பதில் கூறியது. பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது “தவிர்க்க முடியாதது” என்று நீதிமன்றமும் அதை நியாயப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதை இத்தீர்ப்பு கட்டாயப்படுத்தியது. வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் காஷ்மீரில் போராட்டம் ஒவ்வொரு முறை வெடிக்கும் போதும் பாதுகாப்புப்படையின் பெல்லட் குண்டுகளால் புதிய பலி எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுகிறது

“எங்களைப் பற்றி யாரும் எதுவும் பேசாதிருப்பது அச்சமூட்டுகிறது. அரசாங்கம் எங்கள் நிலைமைக்கு பொறுப்பாளியாக இருந்தாலும் மக்களும் எங்களை மறந்துவிட்டனர்” என்று புல்வாமாவின் கரீமாபாத்தைச் சேர்ந்த 22 வயதான அதில் ரெஹ்மான் கூறினார். அவரது இரண்டு கண்களிலும் ஜூன் மாதம் ஏற்பட்ட காயங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும்படி அவரைக் கட்டாயப்படுத்தியது. இரு வாரத்திற்கொருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்.

“என் வாழ்க்கை இப்போது இப்படி ஆகிவிட்டது. நான் ஒரு ஆசிரியராக வேண்டுமென்று விரும்பினேன் ஆனால் இந்த பயங்கரம் என் கனவை நசுக்கிவிட்டது” என்று ரஹ்மான் தி வயரிடம் கூறினார். “நாங்கள் எதிர்கொண்ட பயங்கரத்திற்கு என்றைக்குமான குறைந்தபட்ச நினைவூட்டலாக பார்வையற்ற இந்த நிலைமை இருக்கும். இல்லையா? ”

(டை செய்யப்பட பெல்லட் குண்டுகளால் காசுமீர் மக்களின் பற்றியெரியும் விடுதலை தாகத்தை தணிக்க இந்திய அரசு துடிக்கிறது. ஆயிரக்கணக்கான சாவுகள். நூற்றுக்கணக்கில் கண்பார்வை பறிப்பு. காஷ்மீர் மக்களின் கண்பார்வையைப் பறிப்பதுடன் பொருளாதார ரீதியாக பெரும் சுமையை அவர்கள் மேல் சுமத்துகின்றன பெல்லட் குண்டுகள். “தி வயரில்” வெளி வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழாக்கம்: சுந்தரம்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க