நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!

டலூர் மாவட்டம், முகதரியாங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் “ஜெய் பீம்” இரவு நேர பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் 03.09.2020 அன்று  கீழ்க்கண்ட கோரிக்கைகளான

  • மருத்துவ மாணவர்களை படுகொலை செய்யும் நீட் தேர்வுக்கு எதிராகவும் !
  • பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்வி கொள்கை முழுவதையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் !

என்ற கோரிக்கையை வலியுறுத்தி இணையவழி போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்திற்கு தோழர் பிரம்மதேவன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு உறுப்பினர்கள் தோழர் பால்ராஜ் , தோழர் மணிகண்டன் மற்றும் புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழர் பிரம்மதேவன் தனது தலைமையுரையில், “புதிய கல்விக் கொள்கையில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மாணவர்கள் மேற்கல்வி பெற முடியாத வகையில் 3,5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு. கலை – அறிவியல் படிப்பில் சேர வேண்டுமானால் நீட் தேர்வை போன்ற நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தால் தான் கல்லூரியில் பயில முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனை ரத்து செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் பால்ராஜ் பேசுகையில் “மாணவி அனிதா மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவு. அவரது தாய் முறையான மருத்துவ வசதி இல்லாமல் இறந்து போனதைத் தொடர்ந்து, அந்த நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது அனைவருக்கும் மருத்துவ சேவை செய்ய வேண்டும், என்ற எண்ணம் கொண்டு போராடி படித்த மாணவி அனிதாவை மத்திய, மாநில அரசுகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்தும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது.

இதன் தொடர்ச்சிதான் இன்று புதுக்கோட்டை மாணவி ஹரிஷ்மா தற்கொலை? நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தால்தான் அது நமக்கான கல்வியாக இருக்கும் இல்லையேல் அக்கல்வி காசு உள்ளவனுக்கு மட்டுமே நிரந்தரம்.” என பேசினார்.

படிக்க:
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!

இறுதியாக தோழர் மணியரசன் தனது கண்டன உரையில், “கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக NLC- நிர்வாகம் தனது இரண்டாம் கட்ட வேலையாக 40 கிராமங்களை அப்புறப்படுத்த கூடிய வேலையை முன்னெடுத்தது. அதற்கு எதிராக அனைத்து கட்சியினர், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் எப்படி நாம் ஒற்றுமையாக இருந்து போராடி தடை பெற்றிருக்கிறோமோ. அதைவிட பேராபத்து தான் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை! இதற்கும் நாம் கிராமம் கிராமமாக இதன் பாதிப்புகளை எடுத்துச்சொல்லி ஒற்றுமையாக நின்று போராடி வெற்றி பெற வேண்டும்.” என பேசினார்.

இந்த இணையவழி போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் கிராம பொதுமக்கள்
மோடி- எடப்பாடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க