முத்துலட்சுமி: நீட் எனும் தூக்குக்கயிறுக்கு பலியாகிய மற்றொரு மாணவி

மாணவி முத்துலட்சுமியின் மரணத்தை நாம் தற்கொலை என்று கூறுவதை விட, பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். 2017-ஆம் ஆண்டில் அனிதாவில் தொடங்கிய இந்தப் படுகொலை இன்றுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

முத்துலட்சுமி இந்த பெயரைக் கேட்டவுடன் நமக்கு இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்பது நினைவுக்கு வரும். ஆனால் இன்று அதே முத்துலட்சுமி என்ற பெயரைக் கொண்ட மாணவி ஒருவர் தன்னுடைய மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியாததால், உயிரை மாய்த்துக் கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 19 வயதான முத்துலட்சுமி என்ற மாணவி, நீட் தேர்வுக்கு விடுதியில் தங்கிப் பயிற்சி பெற பணவசதி இல்லாத காரணத்தால், ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த நவம்பர் ஆறாம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களக்காட்டின் ஆற்றங்கரைத் தெருவில் வசித்துவரும் பாத்திர வியாபாரியான மணிகண்டன் என்பவரின் மகள்தான் முத்துலட்சுமி. இவருக்கு முத்துலட்சுமி தவிர, ஒரு பையனும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் நால்வரையும் மணிகண்டன் பாத்திர வியாபாரத்தில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில்தான் படிக்க வைத்து வருகிறார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த முத்துலட்சுமி, கடந்தாண்டு களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு நெல்லையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்தாண்டு எழுதிய நீட் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதுவதற்காக இந்த ஆண்டும் முத்துலட்சுமி வேறொரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால், விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க பணம் இல்லை என்று மணிகண்டன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்துலட்சுமி நவம்பர் ஆறாம் தேதியன்று, மணிகண்டன் வெளியூருக்கு வேலையாக சென்றவுடன் வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தாய் கூச்சலிடவே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு முத்துலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாணவி முத்துலட்சுமியின் மரணத்தை நாம் தற்கொலை என்று கூறுவதை விட, பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். 2017-ஆம் ஆண்டில் அனிதாவில் தொடங்கிய இந்தப் படுகொலை இன்றுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்திலும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்ற புனிதா என்ற மாணவி மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்துக் கொண்டார்.


படிக்க: புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!


இவ்வாறு தமிழ்நாட்டில் நீட் எனும் தூக்குக்கயிறுக்கு பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் போதிலும் தி.மு.க. அரசானது நீட் தேர்வை சட்டப்போராட்டத்தின் மூலமே ரத்து செய்துவிடலாம்; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் மூலம்தான் பாசிச மோடி அரசை பணிய வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைக்க முடியும் என்பதை அறிந்திருந்த போதிலும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு அஞ்சுகிறது. நீட் படுகொலைகள் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாகி, தன்னுடைய அரசுக்கு எதிராக அதிருப்தி உருவாகும்போது மட்டும் அடையாளப் போராட்டங்கள் நடத்துவதோடு தி.மு.க. நிறுத்திக் கொள்கிறது.

ஆனால், இதுநாள் வரை தமிழ்நாட்டில் நடந்து வந்த நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள், இன்று நாடு முழுவதும் பற்றி பரவியுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த மோசடிகள் அம்பலமாகி நாடு முழுவதும் மாணவர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வந்தது. நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிரான இப்போராட்டங்களை,  நீட் தேர்வை ரத்து செய்வதை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அதற்கான முன்னெடுப்பை மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் எடுக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க