Friday, June 21, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுமதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

சேலம் அருகே ஆசிரியர்கள் இல்லாத வேளையில் ஒரு வகுப்பறையில் 5 மாணவிகள் மட்டும் கூடி கேக் வெட்டி பீர் பாட்டிகளோடு பிறந்தநாள் கொண்டாடங்களில் ஈடுபட்டுள்ளனர்.

-

டந்த 15-ம் தேதி சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் உள்ள பெண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடந்துள்ளது. அதே நாளில் தங்கள் தோழி ஒருவரின் பிறந்த நாளையும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் கொண்டாடி உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத வேளையில் ஒரு வகுப்பறையில் 5 மாணவிகள் மட்டும் கூடி கேக் வெட்டி பீர் பாட்டில்களோடு விழாவைச் சிறப்பித்துள்ளனர். அதோடு, கையில் பீர் பாட்டிலுடன் செல்பி எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அவ்வேளையில் குறிப்பிட்ட அந்த வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் கொண்டாட்ட நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே நடந்த விசயங்களை அப்படியே தலைமை ஆசிரியரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், தலைமை ஆசிரியரும் மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து பெற்றோருடன் வீட்டுக்குச் சென்ற மாணவி ஒருவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசார் மற்றும் உறவினர்கள் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மாணவியின் சடலத்தை இரவோடு இரவாக தகனம் செய்துள்ளனர். எனினும், மறுநாள் காலை மாணவியின் இறப்பு குறித்த தகவல் வெளியே கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவிகளை தலைமை ஆசியரும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் விசாரித்தது மற்றும் கண்டித்தது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரித்து வருவதாக தினசரிகளில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவியின் மரணம் காவல்துறையில் வழக்காக பதிவானதா, விசாரிக்கப்படுகின்றதா, முடிவு என்ன என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும்.

படிக்க:
குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !
♦ தீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் !

***

மாணவிகள் மதுபாட்டில்களுடன் எடுத்துக் கொள்ளும் செல்பிகள், டிக்டோக் வீடியோக்கள் வைரலாவது புதிதல்ல. இது போன்ற வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் ஏற்படுத்தும் கலாச்சார அதிர்ச்சியை நோக்கி, “ஏன் ஆண்கள் மட்டும் குடிக்கலாமா?” என பெண்ணியவாதிகள் கேள்வி எழுப்புவதும் கூட புதிதல்ல. யாரெல்லாம் குடிக்கலாம் யாரெல்லாம் குடிக்க கூடாது என்கிற ஆராய்ச்சி நமக்கு அநாவசியம். விசயம் என்னவென்றால் கடந்த பத்தாண்டுகளில் குடி சகஜமாகியுள்ளது என்பது தான்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ரூபாய் 385 கோடிக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது அரசு. இந்த இலக்கை அடைவதற்காக 15 நாட்களுக்கான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்க உத்தரவிட்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் அமைச்சர்களும் அதிகாரிகளும். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிசயம் இது. மற்ற நாடுகளில் அந்த அரசு எவ்வளவு தான் சர்வாதிகாரமாக இருந்தாலும், ஊழல் அரசாக இருந்தாலும் குறைந்தபட்சம் தம்முடைய மக்கள் குடிப்பழகத்திற்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பார்கள். ஆனால், உலகிலேயே தனது குடிமக்களின் குடிப்பழக்கத்தை நம்பி வியாபாரம் பார்க்கும் ஒரே அரசு நமது தமிழ் நாடு அரசு தான்.

ஒருபக்கம் அரசே குடியை ஊக்குவிக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழர்களின் ஒரே கலை மற்றும் கலாச்சார அடையாளமாக விளங்கும் சினிமாக்கள் குறித்து தனியே விளக்க வேண்டியதில்லை. வில்லன்களை குடிகாரர்களாக காட்சியப்படுத்திய காலம் மலையேறி போய் விட்டது; இப்போது நாயகர்களும் சதா நேரமும் வார்னிஷ் வாசனையோடே அலைகின்றனர்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெருவில் ஒன்று அல்லது இரண்டு குடிகாரர்கள் இருப்பார்கள். குடித்து விட்டு தெருவில் சலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்போது அனேகமான வீடுகளில் குடிப்பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் நிலை உள்ளது.

இந்தக் கலாச்சார மாற்றத்திற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் விதிவிலக்காகிட முடியாது. “மாணவி குடிக்கலாமா?” என்கிற அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, சாராயம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அவல நிலை குறித்தும் இதற்கு அரசே தூண்டுதலாக இருப்பதைக் குறித்தும் அக்கறை கொள்ள வேண்டும். சேலத்தில் இறந்து போன மாணவி உணர்த்தும் உண்மையும் இது தான்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம்: தினகரன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க