மகாராஷ்டிரா: சட்டமன்றத் தேர்தலுக்காக கலவரம் செய்யும் பாசிச சக்திகள்

உள்ளூர்வாசிகள், ”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்குத் தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ளது விஷால் காட் கோட்டை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோட்டையின் அடிவாரப் பகுதியில் சுற்றுலா வருமானத்தை நம்பி  பொதுமக்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், “விஷால் காட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கம்” என்ற அமைப்பை நடத்தி வரும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 13ஆவது நேரடி வழித்தோன்றலான கோலாப்பூரின் ராஜர்ஷி சத்ரபதி ஷாஹுவின் கொள்ளுப்பேரன் சம்பாஜி ராஜே, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜூலை 14 அன்று விஷால்காட் கோட்டைக்கு வர வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஜூலை 13 அன்று இரவு முதலே சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்களும், இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களும் கோட்டை நுழைவாயிலில் முகாமிட்டனர். ஜூலை 14 அன்று காலை சம்பாஜி ராஜே ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் விஷால் காட் கோட்டையின் அடிவாரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்களிடம்,”நீங்கள் சட்ட விரோத இடத்தில் வசிக்கிறீர்கள். உடனடியாக இந்த வீட்டை காலி செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் வீடுகள் இடிக்கப்படும்” என மிரட்டியுள்ளனர்.

ஆனால் உள்ளூர்வாசிகள், ”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்குத் தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். மசூதி மீதும் தாக்குதல் தொடுத்து கோட்டையில் உள்ள ரகுமான் மாலிக் தர்கா மீதும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் கற்களை வீசியும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கியும், மசூதிக்கு வெளியே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று  கோஷமிட்டும் தாக்குதல் தொடுத்தனர்.


படிக்க: தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்


இதனால் முஸ்லிம் மக்கள் வன்முறையாளர்களை எதிர்கொள்ள முயன்றதால் மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள காஜாபூர் பகுதிக்கும் வன்முறை பரவிய நிலையில், அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன; தீ வைத்து கொளுத்தப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கோலாப்பூர் போலீசு இதுவரை 21 பேரை கைது  செய்துள்ளது. 500 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பாஜி ராஜே முன்னாள் பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி என்பதால் விஷால் காட் கோட்டை மசூதி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அவர்மீது மகாராஷ்டிரா போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

சீட் கொடுக்காத அதிருப்தியில் பா.ஜ.க-வை விட்டு விலகியதாகக் கூறப்பட்டாலும், அவர் இன்னும் பா.ஜ.க-வுடன் நேரடி தொடர்பில் தான் உள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதமே உள்ள நிலையில், மதக் கலவரத்தை உருவாக்குவதென்பது பாசிச பா.ஜ.க-வுக்கு தேர்தலில் நல்ல வாக்கு அறுவடையைத் தரும் என்று அக்கட்சி நினைக்கிறது., அதனால் தான் மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசாங்கம் சம்பாஜி ராஜேவுக்கு கலவரம் நடத்த பச்சைக் கொடி காட்டியுள்ளது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க