அரசு ‘அனைவருக்கும் கல்வி’ என்று சொல்லிக்கொண்டே கல்வியை கொடுக்கும் ஆசிரியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறது. அதன் தவிர்க்க முடியாத வெளிப்பாடு தான் டிபிஐ அலுவலகத்தில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், போதிய ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரியர்களுக்கான நியாயமான ஊதியத்தை வழங்குதல் போன்றவற்றிலிருந்து அரசு படிப்படியாக வெளியேறத் தொடங்கி விட்டது.
“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற நியாயமான கோரிக்கைக்கு 14 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தியும் இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களின் நிலையை எண்ணிப் பார்த்தால் இந்த அரசு கட்டமைப்பின் கோர முகம் வெளிப்படும்.
கடந்த 2009 மே மாதம் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஜூன் ஒன்றாம் தேதி பணியில் சேர்ந்தவர்களுக்குமான ஊதிய வேறுபாடு என்பது தற்போதைய சூழலில் 15 ஆயிரம். 14 ஆண்டுகளாகப் போராடியும் இதனைக் களையாமல் அரசு வஞ்சித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போராடிய ஆசிரியர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
வாக்குறுதி வெற்றுறுதியாக தான் நீடிக்கிறது. தற்காலிக ஆசிரியர்களும் பகுதி நேர ஆசிரியர்களும் தங்களை நிரந்தரமாக்கக் கோரி நடத்தும் போராட்டத்தை அவர்களின் பொருளாதாரக் கோரிக்கை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதனால் இப் போராட்டத்தின் பின்னுள்ள கல்வி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் வீரியத்தை பலரும் உணரவில்லை.
படிக்க: ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!
தற்போதைய சூழலில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பமானது. பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதும் போதிய அனுபவம் இல்லாத ஆசிரியர்களை கொண்டு வழங்கப்படும் கல்வியும் முழு பயனை அடைய உதவாது. அரசினுடைய தற்காலிக மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி என்பது அரசு பள்ளியின் மீது அரசின் அக்கறையற்ற செயல்பாடுகளையே வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதும் நியமிக்கப்பட்டவர்களுக்கு சம ஊதியம் தர மறுப்பதும் மறுபக்கம் பள்ளி உட்கட்டமைப்புக்கு பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிதி திரட்டி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகளை அள்ளி வீசுவதும் கல்வி வழங்குவதிலிருந்து அரசு வெளியேறி வருவதையே குறிக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் அனைத்துமே தனது ஓட்டு சீட்டு அரசியலுக்காக ஏழை எளிய மக்களிடம் விதைக்கப்படும் விதை போன்றது. ஆளும் வர்க்கமும் அரசியல் கட்சிகளும் கல்விக்கான அடிப்படை கட்டமைப்புகளான ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றை புறக்கணித்துவிட்டு, விலையில்லா பொருட்கள் மூலம் வழங்கப்படும் சலுகைகளால் மட்டுமே கல்விக்கான முழு இலக்கை எட்ட முடியும் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.
அரசு மக்களிடமிருந்து பெரும் வரிப்பணத்தில் கல்விக்கு ஏன் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை? தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பை அரசு பள்ளிகளில் உருவாக்க முடியாத ஒரு சூழல் ஏன் நிலவுகிறது? பள்ளிக்கூடங்கள்தான் எதிர்கால ஆளுமைகளை உருவாக்கக் கூடியது. அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் அரசாலும் ஆளும் வர்க்க்த்தாலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.
திமுக அரசின் சமத்துவம் சமூக நீதி என்ற பிரச்சாரமும் விளம்பரமும் வீச்சாக பரப்பப்பட்ட அளவுக்கு அதன் செயல்பாடுகள் இல்லை என்பதே ஆசிரியர் போராட்டம் உணர்த்தும் உண்மை.
ஆசிரியர்கள் போராட்டம் என்பது திமுக அரசு தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
படிக்க: DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ
”இந்த அரசாவது நம் பிரச்சினையை தீர்க்கும்” என்று நம்பிய ஆசிரியர்களுக்கு, குழு அமைக்கிறோம் ஆய்வு செய்கிறோம் அறிக்கை வரட்டும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அரசு தரப்பில் கூறப்படுவதெல்லாம் வெறும் திசைத்திருப்பல். இதை எல்லாம் உணர்ந்த காரணத்தினால்தான், ஆசிரியர்கள் போராட்ட களத்தில் உறுதியோடு நின்றார்கள்.
திமுக அரசின் விளம்பர வாய்ஜாலங்கள் பலனளிக்கவில்லை என்பதால் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றியுள்ளது. கைது செய்த ஆசிரியர்களை குழு குழுவாக பிரித்து பல சமுதாயக் கூடங்களில் அடைத்து வைத்துள்ள போலீசு, அங்கு அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளைக்கூட ஏற்பாடு செய்யவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் போலீஸ் வாகனத்திலேயே ஒரு நாள் முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு மீண்டும் போராடக் கூடாது என்று மிரட்டப்படுகிறார்கள்.
சமூகத்திற்கான நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சமூகத்தில் பெரியளவிற்கான ஆதரவுக் குரல்கூட வரவில்லை என்பது மேலும் கொடுமையான ஒன்றாக உள்ளது. இன்று நாம் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், நாளை அரசு கல்வியை வழுங்குவதை ஒட்டுமொத்தமாக கைவிடுவதைக் கேள்விக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.
சௌந்தர்