நேற்று (10.12.2024) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீசு கைது செய்துள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறைக் காரணமாக இசை, கலை, தையல் பயிற்சி, தோட்டக்கலை, உடற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை வாரத்தில் மூன்று நாட்கள் கற்றுகொடுப்பதற்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. ஆட்சியிலேயே ஆசிரியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்திவந்ன. இருந்தபோதும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசானது ஆசிரியர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. இதனையடுத்து தி.மு.க. அரசை கண்டித்தும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
படிக்க: சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவே பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையைப் பற்றி தி.மு.க. வாய்திறப்பதில்லை
எனவே, கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கல்வி செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆசிரியர்களுக்கு எந்தவித உறுதியும் அளிக்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தைக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாபு, “நாங்கள் தற்போது ரூ.12,500 என்கிற தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதிநேரமாக நியமிக்கப்பட்ட 12,000 ஆசிரியர்களில் ஆயிரக்கணக்கானோர் பணிஓய்வு பெற உள்ளனர். எனவே தி.மு.க. அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதி 181-இல் தெரிவித்தப்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 10-ஆம் தேதி தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
அதன்படி நேற்று தலைமை செயலகம் நோக்கிய முற்றுகைப் போராட்டத்திற்கு போலீசு அனுமதி மறுத்ததால் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன்பாக 1,700 பெண் ஆசிரியர்கள் உள்பட 3500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தி.மு.க. அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் குறித்து பேசிய சில ஆசிரியர்கள் தி.மு.க. அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை. எனவே போராட்டக் களத்துக்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
ஆனால், தனது அரசுக்கு எதிரான ஆசிரியர்களின் போராட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க., ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலும் சட்ட ஒழுங்கு சீர்கேடும் ஏற்படுவதாக கூறி போலீசைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்துள்ளது. அமைதி வழியில் போராடிய ஆசிரியர்களை இவ்வாறு கைதுசெய்து ஒடுக்கும், ஒவ்வொருமுறையும் இதனையே தனது அணுகுமுறையாக கொண்டுள்ள தி.மு.க. அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“அரசு நினைத்தால் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையிலேயே பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் கார் ரேஸ் நடத்த முடியும்போது, ஒரு சில மணி நேரங்கள் நடக்கக்கூடிய எங்கள் போராட்டத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காரணம் கூறுவது ஏற்புடையதா? நாங்கள் எல்லாம் என்ன ரவுடிகளா? நாங்கள் ஆசிரியர்கள் அல்லவா? சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் நாங்கள் நடந்து கொள்வோமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் எங்கள் போராட்டம் குறித்த செய்தியை சொன்னபோது போராடுவது உங்கள் உரிமை என்றாரே, அந்த உரிமையைப் பறிப்பது சரியா?” என்று கைதான பகுதிநேர ஆசிரியர்கள் தி.மு.க. அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர்.
படிக்க: சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
அ.தி.மு.க. ஆட்சியின்போது போராடிய ஆசிரியர்களிடம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினையை சரிசெய்வோம் என வாக்குறுதியளித்து ஆட்சியை பிடித்த தி.மு.க., இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் செய்யாத அளவிற்கு தமிழ்நாட்டில் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கல்வியை கார்ப்பரேட்மாயமாக்குகின்ற ஒன்றிய மோடி அரசின் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டே இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டசன் போன்ற தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையிலான திட்டங்களை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த கல்வி கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கையின் ஓர் அங்கம்தான் ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் கொடுக்க மறுப்பதுமாகும். பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கும் பல்வேறு தரப்பு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு தி.மு.க. அரசு செவி சாய்க்காமல் இருப்பதற்கும் கார்ப்பரேட் சேவையே காரணமாகும்.
எனவே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்ற ஆசிரியர்கள் கல்வியை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிராகவும் பிற பிரிவு ஆசிரியர்களை தங்களுடன் இணைத்துக்கொண்டும் போராடுவதன் மூலமே தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram