05.10.2023

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்
கைது செய்யும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

கண்டன அறிக்கை

டந்த ஏழு நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வந்த ஆசிரியர்களை இன்று காலை தமிழ்நாடு போலீசு கைது செய்துள்ளது.

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராடி வந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆசிரியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிதி இல்லை, நிதிப் பற்றாக்குறை என்ற காரணங்களைக் காட்டி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்காமல் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர்களுக்கான தொகுப்பு ஊதியத்தை ரூ 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆராய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், டெட் தேர்வு எழுதி காத்திருப்போர் வயது வரம்பை 55 வரை உயர்த்தி உள்ளதாகவும், ஆசிரியர்கள் அனைவரும் கேட்காத ஒரு கோரிக்கையான 10 லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை என்பதையும் நிறைவேற்றவுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.


படிக்க: DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ


சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் என்ற தகுதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ் காலத்தில் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ நீங்கள் எல்லாம் செத்த பிறகு ரூ 10 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகளை ஏற்க முடியாது என்று தொடர்ச்சியாக போராடி வந்த ஆசிரியர்கள் தான் இன்று காலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை பல்வேறு தீர்ப்புகளின் வழியாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளுக்கு பல லட்ச ரூபாய் சம்பளம் கொடுப்பதும் தமிழ்நாடு ஆளுநருக்கும் அவர் பரிவாரங்களுக்கும் கோடிக்கணக்கில் செலவழிப்பதும் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தினாலே நிதி சேமிப்பு செய்ய முடியும். அது எல்லாவற்றையும் தாண்டி ஆசிரியர்களை வெறும் இயந்திரமாக மாற்றும் கல்வி தனியார் மயத்தின் விளைவாகவே ஆசிரியர்கள் வெறும் வேலை ஆட்களாக மாற்றப்படுகின்றனர்.

கல்விக்கு போதிய நிதி ஒதுக்காமலும், பள்ளிகளை சீரமைக்காமலும், அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் வழங்காமலும் இருப்பது மிகக் கேடானதாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிப்பதுடன் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க