பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வித்துறை சார்ந்த பிற பிரச்சினைகள் தொடர்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் தி.மு.க. அரசிற்கு நெருக்கடி கொடுப்பது சரியா? இப்போது தி.மு.க-வை அம்பலப்படுத்துவதைவிட பா.ஜ.க-வை அம்பலப்படுத்துவதானே பொருத்தமாக இருக்கும்?
இக்கேள்விக்கு புதிய ஜனநாயகம் ஏற்கெனவே நேர் பொருளில் பதிலளித்துள்ளது. இருப்பினும், தேர்தல் சமயத்தில் பொருத்தமான ஒரு பதிலைச் சொல்லலாம் என்று கருதுகிறோம்.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, தேர்தல் சமயத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி நெருக்கடி கொடுப்பது தவறு என்று தி.மு.க. ஆதரவாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, கல்வியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் என பல தரப்பினரும் தங்களது நீண்டகால கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை,செவி சாய்க்கவில்லை என்று போராடிகொண்டுதான் இருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால்தான் தி.மு.க-வை நிர்பந்திக்க முடியும்; தேர்தல் முடிந்தால் தங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று மக்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து புரிந்து வைத்துள்ளனர். இந்தாண்டு, சரியாக பொங்கல் சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதன் வெளிப்பாடுதான்.
ஆகையால், உழைக்கும் மக்கள் தங்களது உரிமைகளுக்காக தேர்தல் நேரத்தில் போராடுவதும், தி.மு.க. அரசை நிர்பந்திப்பதும்தான் சரியானது.
தேர்தல் நேரத்தில் தி.மு.க-விற்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று புரட்சிகர அமைப்புகளுக்கும் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கும் வகுப்பெடுப்பவர்கள், அந்த வகுப்பை முதலில் காங்கிரசிற்கும் தி.மு.க-விற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும்தான் எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில், தொகுதிப் பங்கீட்டுக்காக ஏன் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? ஏன் இந்தியா கூட்டணியை உடைக்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்க வேண்டும். ஒரு சீட்டுக்காக தொகுதி பங்கீடு இழுபறியில் இருப்பதும், கூட்டணியே உடையும் நிலைக்குப் போனதையும் நாடே பார்த்தது.
எனவே, அந்தந்த வர்க்கங்கள் தத்தங்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றன என்பதுதான் எதார்த்தம். உழைக்கும் மக்களையும் புரட்சிகர இயக்கங்களையும் மட்டும் பார்த்து, “பாசிசம் வருகிறது, எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்” என்று வகுப்பெடுப்பது அயோக்கியத்தனமானது.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube