தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!

ஒன்றிய மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க அரசு, மறைமுகமாக அத்திட்டங்களுக்கு துணைநிற்பதோடு கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள், தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை செலுத்திவருகிறது.

டந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இணையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1,144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. மணவாளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான மூலப்பொருட்களை சூறையாடும் நோக்கத்துடனே இந்தச் சுரங்கத்தை அமைக்க பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல், கடந்த நவம்பர் மாதத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து தென்மேற்காக 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் அமைந்துள்ள படுகைக் கரையில் (Wadge Bank) 32,485 சதுர கி.மீ. பரப்பளவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஒன்றிய மோடி அரசு ஏலம் விட்டுள்ளது. சுமார் 200 வகையான மீன்கள் வாழும் இப்பகுதியானது மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதரம் பறிக்கப்படுவதுடன், அங்குள்ள மீன் இனங்கள் முற்றிலும் அழிந்துபோகும்.

எல்லாவற்றிருக்கும் உச்சமாக, நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய மோடி அரசு ஏலம் விட்டது. பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை அழிக்கக்கூடிய இந்த நாசகரத் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக்கொன்ற கொலைகார வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் கனிம வளங்களையும், எரிப்பொருட்களையும் அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கான பாசிச மோடி அரசின் நாசகரத் திட்டங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் தி.மு.க. அரசானது மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விடமாட்டோம்; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது.

ஆனால், அதேசமயம் கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதை தி.மு.க. எதிர்க்கவில்லை. மாறாக, மோடி அரசுடன் சேர்ந்துக் கொண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அக்டோபர் ஒன்றாம் தேதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முயன்றது. மக்கள் எதிர்ப்பினால் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், கன்னியாகுமரி படுகைக் கரையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இன்னும் எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இதன்மூலம் இவ்விரு நாசகரத் திட்டங்களையும் செயல்படுத்த மோடி அரசுக்கு தி.மு.க. துணைநிற்பது அம்பலமாகிறது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கெதிரான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளும் கொலைகார வேதாந்தா நிறுவனம் மீதான தமிழ்நாடு மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போரட்டமும் தங்களுக்கெதிராக திரும்பிடக் கூடாது என்ற அச்சத்தினால்தான் முன்னெடுக்கப்படுகிறது.


படிக்க: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!


தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கும் மோடி அரசின் நாசகரத் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று பேசிக்கொண்டே தி.மு.க. அரசு அதனை நைச்சியமாக செயல்படுத்தி வருகிறது. மற்றொருபுறம், தனது ஆட்சி அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சான்றாக, ஒருபுறம் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் எண்ணூர் பகுதியில் புதியதாக 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தை டிசம்பர் 20 அன்று அறிவித்துள்ளது தி.மு.க. அரசு. ஏற்கனெவே பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நெருக்கமாக வசிக்கும் இப்பகுதியில் தொழிற்சாலைகளினால் ஏற்படும் காற்று மற்றும் நீர்நிலைகள் மாசுபாட்டிற்கு எதிராக மக்கள் போராடிவரும் நிலையில் அதை துளியும் மதிக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது என்று இலக்கு நிர்ணயித்துக்கொண்டு தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கான வேலைகளில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாட்டில் உள்ள பிற மாநில அரசுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரியிறைத்து, நாசகர சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது.

இந்தப் போக்கை மேலும் துரிதப்படுத்துவதற்காக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் 2023-யை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி அரசிதழில் தி.மு.க. அரசு வெளியிட்டது.
கார்ப்பரேட் நல திட்டங்களுக்காக மக்களிடமிருந்து விவசாய நிலங்களை அபகரிப்பதற்காகவும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதற்காகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட இச்சட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எந்தவொரு விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

இருப்பினும் விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பின் காரணமாக ஓர் ஆண்டுகாலமாக சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்த தி.மு.க. அரசு, தற்போது நைச்சியமாக அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நாசகர நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிவரும் மக்களின் மீதும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டுவதற்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களின் மீதும் கடுமையாக ஒடுக்குமுறை செலுத்துகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைவதை எதிர்த்து 400 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தது தி.மு.க அரசு.அதேபோல், பரந்தூரில் விமான நிலையம் அமைவதை எதிர்த்து 800 நாட்களுக்கு மேலாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தும் கூட அம்மக்களின் கோரிக்கைக்கு துளியும் தி.மு.க. செவிமடுக்கவில்லை. மாறாக பரந்தூர் கிராமத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் அம்மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது.


படிக்க: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும் தி.மு.க. அரசு


இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி பகுதியில் மீன்கழிவு ஆலைக்கு எதிராக போராடிவரும் மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் அவர்கள் மீதும் ஒடுக்குமுறை செலுத்தி வருகிறது.

ஒருபுறம் ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. கும்பல் தமிழ்நாட்டிலுள்ள கனிமவளங்களை கொள்ளையடிப்பதற்காக பல்வேறு நாசகரத் திட்டங்களை அறிவித்து வருகிறது. மறுபுறம் ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க. அரசு மறைமுகமாக அத்திட்டங்களுக்கு துணைநிற்பதும், கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள், தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை செலுத்திவருகிறது. நில ஒருங்கிணைப்புச் சட்டம் உள்ளிட்டு தி.மு.க. அரசின் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் என்பது பாசிச பா.ஜ.க. தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சாதகமாகவே அமையும்.

ஏனெனில், பார்ப்பனிய-இந்துத்துவ ஊடுருவல் மட்டுமின்றி மோடி அரசின் கார்ப்பரேட் நாசகரத் திட்டங்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பதும், அதானிக்கு சேவை செய்வதும் பாசிச ஊடுருவலின் ஓர் அங்கமே. ஆகவே, தமிழ்நாட்டில் பாசிச ஊடுருவலை உறுதியாக எதிர்த்துவரும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தி.மு.க-வின் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். ஏனெனில், தி.மு.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதன் மூலம் அல்ல, அதன் காவி-கார்ப்பரேட் சமரச கொள்கை-போக்குகளை கைவிடச்செய்து, மக்கள்நலத் திட்டத்தை ஏற்க வைப்பதன் மூலமே தமிழ்நாட்டில் பாசிசக் கும்பல் வளர்வதை தடுத்துநிறுத்த முடியும்.


சிவராமன்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க