சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த ஜனநாயகத்திற்கானப் போராட்டம் தி.மு.க. அரசின் துரோகத்தால் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.

ட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம், தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் சுமார் 1400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அதாவது 80% தொழிலாளர்கள்) நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையும் அதன் அவசியத்தையும் இந்திய தொழிலாளர் வர்க்கத்துக்கு எடுத்துரைத்தது.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த ஜனநாயகத்திற்கானப் போராட்டம் தி.மு.க. அரசின் துரோகத்தால் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் போராட்டத்தை விரும்பாத  கம்யூனிச வெறுப்பு கொண்ட சாம்சங் நிறுவனம் இட்டக் கட்டளையை தி.மு.க. அரசு சிரமேற்கொண்டு செய்திருக்கிறது. இரவோடு இரவாக போராட்டப் பந்தல் பிரிப்பு, நள்ளிரவில் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது, தனியார் இடத்தில் போராடிய தொழிலாளர்களை பலவந்தமாகக் கைது செய்தது, தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்துவது, எங்கு கண்ணில் பட்டாலும் கைது செய்வோம் என்று குடும்பத்தினரை மிரட்டுவது  என போலீசு அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, “இதுபோன்று போராட்டங்களை நடத்தினால், முதலமைச்சரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட அந்நிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிடும்” என்றும், “தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு கம்யூனிஸ்டுகள் வேட்டு வைத்துவிட்டனர்” என்றும் “சி.ஐ.டி.யூ. ஒரு ஆலைக்குள் நுழைந்து விட்டாலே அந்த ஆலை நல்லபடியாக இயங்காது” என்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக  தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைக்கானப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினர், தி.மு.க. இணைய குண்டர் படையினர். தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவான மனநிலையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறப்போவதாக ஊடகங்களில் பொய் செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

போராடிய தொழிலாளர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது தங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதாகும். சாம்சங் ஆலை நிர்வாகமோ, சி.ஐ.டி.யூ-வின் தலைமையின் கீழ் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்ததோடு, தனது கைப்பாவையாக உள்ள தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் இணைந்து கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறது.

மேலும், தனது கையாளான மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் கமலக்கண்ணன் மூலம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை அங்கீகரித்து பதிவு எண் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மீறி சங்கத்தை கலைக்கும் நோக்கத்தில் நிர்வாக ரீதியாக ஒரு ஆட்சேபனை மனு ஒன்றை கொடுத்து தாமதப்படுத்தியுள்ளது. வேறு வழியில்லாத நிலையில் 86-வது நாள்தான் சங்கம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இந்த நிலையில்தான், தொழிலாளர்கள் தங்களது சங்கத்தை ஏற்க வைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் தொடங்கியதிலிருந்தே போராட்டத்தை பல்வேறு முனைகளில் ஒடுக்கியது தி.மு.க. அரசு. போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்ற தொழிலாளர்களை அராஜகமான முறையில் கைது செய்தது போலீசு. சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டத்தை முடித்துவைப்பதற்காக அமைச்சர்களைக் கொண்டு ஆறுகட்டப்  பேச்சுவார்த்தைகளை நடத்தியது தி.மு.க. அரசு.

அக்டோபர் ஏழாம் தேதி தி.மு.க-வின்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு தொழிற்சங்கத் தலைமையிடமும் சாம்சங் நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியது.


படிக்க: சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்


அத்துடன் நில்லாமல், சாம்சங் நிறுவனத்தின் பிழைப்புவாத கருங்காலி தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் உருவாக்கிய தொழிலாளர் கமிட்டியிடமும் தனியே பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொழிலாளர்களின் எல்லா கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையில் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. அத்துடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறினார். ஊடகங்களிலும் போராட்டம் முடிவடைந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால் போராடும் தொழிலாளர்களோ இந்தப் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன்பிறகு அக்டோபர் 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் தலைமையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சாம்சங் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையிலும் சாம்சங் நிறுவனம் இறங்கி வரவில்லை என்பதே உண்மை. “நிர்வாகம் தரப்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.  தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமான பதில் உரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்” என்ற அம்சங்களை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை திரும்பப் பெற்றிருக்கிறது சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம்.

தொழிற்சங்க அங்கீகாரத்திற்காகவும், ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் என தொடங்கப்பட்ட போராட்டம் எந்தக் கோரிக்கைகளையும் சாதிக்காமல், தி.மு.க. அரசிற்கும் சி.ஐ.டி.யூ. நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட சமரசத்தால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த சமரசத்தை, சந்தர்ப்பவாதமாக மூடி மறைக்க மார்க்சிய முலாம் பூசப்பட்ட வார்த்தைகள் மூலம் ‘போராட்டம் வெற்றி, வெற்றி’ என்று தொழிலாளர்களை திசைத்திருப்புகிறது சி.ஐ.டி.யூ.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கப் பதிவு குறித்து கடந்த அக்டோபர் 22-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சங்கப்பதிவிற்கு தமிழ்நாடு அரசு மூன்று வார கால அவகாசம் கேட்டிருக்கிறது. இதற்கு காரணமாக, தொழிற்சங்கத்துக்கும், சாம்சங் நிர்வாகத்திற்குமான கோரிக்கை மனுவின்  மீதான சமரச பேச்சுவார்த்தை நவம்பர் ஏழாம் தேதி நடைபெறவிருக்கிறது என்கிறது. மேலும், இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் ஒரு வாதியாக தன்னை சேர்த்துக்கொள்ள முன்வைத்ததை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் அமைத்துக் கொள்ளலாம், 45 நாட்களுக்குள் தொழிலாளர் நலத்துறை சங்கத்தைப்  பதிவு செய்ய வேண்டும் என்ற விதிகளை நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் காலில் போட்டு மிதித்திருக்கின்றன. இதிலிருந்து கார்ப்பரேட் என்று வந்தால், அரசியலமைப்புச் சட்டமே காகிதமாகிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமையைக் காலில் போட்டு மிதிக்கிற தி.மு.க. அரசு, சாம்சங் நிறுவனத்தின் 100 பில்லியன் டாலர் (8,40,747 கோடி ரூபாய்) வருமானத்தில் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற வர்க்கப்பாசத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது என்ற உண்மை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.


படிக்க:அந்நிய மூலதன நலனைப் பாதுகாக்க சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்கும் திமுக அரசு!


மேலும், தொழிலாளர்கள் மீது நிர்வாக ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பது பேச்சுவார்த்தையின் ஒரு முடிவாகும், உண்மை நிலைமையோ அதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேரடியாக பணியில் ஈடுபடுத்தப்படவில்லை,  பல சிறு குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்கப்படும், அந்தப் பயிற்சி எப்பொழுது என்பதை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது நிர்வாகம். இது தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் இனி தொடரும் என்பதற்கான முன்னறிவிப்புமாகும். இவ்வாறு  தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவது குறித்து வாய் திறக்காமல் தி.மு.க. அரசும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர்களும் கல்லுளிமங்கன்களாக இருக்கின்றனர்.

12 மணி நேர வேலைச் சட்டம், பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கியது என தி.மு.க-வின் தொழிலாளர் விரோதப் போக்கில் புதியதாக சாம்சங் தொழிலாளர் போராட்டம்  இணைந்திருக்கிறது. தி.மு.க-வின் பாசிச எதிர்ப்பும், ஜனநாயக உரிமையும்  உழைக்கும் மக்களான தொழிலாளர்களுக்கு இல்லை என்பதை இப்போராட்டம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

எனவே, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த வேலை நிறுத்தப்போராட்டம் என்பது வரவேற்புக்குரியது. ஆனால், அதை தி.மு.க. அரசும் சாம்சங் நிர்வாகமும் கூட்டுசேர்ந்து சதித்தனமாக முடித்துவைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி, இப்போராட்டத்தில் கிடைத்த படிப்பினைகளை எடுத்துக்கொண்டு தொழிலாளார்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்டப் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அதைத்தான் தற்போது, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கப் பதிவு குறித்து நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், சாம்சங் நிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசின் அணுகுமுறைகள் எடுத்துக்காட்டுகிறது.


ஆதி

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க