சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம்:
சாம்சங் நிர்வாகத்தின் அராஜகம்
திருபெரும்புதூர் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த, 36 நாட்கள் நீடித்த, மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் நடந்ததை அறிவீர்கள். இறுதியாக தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதாக ஏற்று அப்போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்று கடந்த ஜனவரி 27 அன்றுதான் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தைத் தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவிலேயே தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பிய பின் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் இப்பொழுது சாம்சங் நிர்வாகம் அற்பமான காரணங்களைக் கூறி தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவர்களான மோகன்ராஜ், சிவநேசன், குணசேகரன் ஆகிய மூன்று பேரையும் பிப்ரவரி 5 அன்று பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இதனைக் கண்டித்து அன்றைய நாளே 1,400 தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தலைவர்கள் மூன்று பேரும் பணியிலிருந்தபோது விதிகளை மீறியது, இடைவேளையில் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக எடுத்துக் கொண்டு பணிக்கு வர தாமதம் செய்தது போன்ற சாதாரண காரணங்களைக் காட்டி இந்த இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது சாம்சங் நிர்வாகம்.
இதுகுறித்து சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் முத்துக்குமார் கூறும்பொழுது, “இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்பது முத்தரப்பு பேச்சுவார்த்தையிலேயே முடிவு செய்யப்பட்டு, அப்பிரிவானது ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுக் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் நிர்வாகம் அதை மதிக்காமல் வேண்டுமென்றே இந்த பணியிடை நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. மேலும் பல முன்னணியாளர்களை, அவர்கள் நீண்ட காலம் பணியாற்றி வந்த இடங்களை விட்டு இதுவரை செய்திராத புதிய பணிகளுக்கு மாற்றியிருக்கிறது. இப்பொழுது நீங்கள் பழைய இடங்களுக்குப் போக வேண்டும் என்றால் தொழிற்சங்கத்தை விட்டு விலகி, முந்தைய வேலைநிறுத்தத்தின்போது தொழிற்சங்கத்துக்கு மாற்றாக நிர்வாகம் சார்பாக உருவாக்கப்பட்ட ஊழியர் கமிட்டியில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். (நிர்வாகம் அமைத்த ஊழியர் கமிட்டியில் நிர்வாகத்துடன் ஆதரவு போக்கு உள்ள 150 தொழிலாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்).
படிக்க: சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு!
மேலும், “இவ்வாறு தொழிலாளர்கள் பலரையும் சந்தித்து அவர்களை அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தொழிற்சங்கத்திலிருந்து விலகச் செய்து, ஊழியர் கமிட்டியில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கென்றே 25 ஊழியர்களை ஒதுக்கி எதிர்வேலை செய்கிறது நிர்வாகம். அவ்வாறு நிர்வாகத்தின் ஊழியர் கமிட்டியில் சேர்ந்தால் மூன்று லட்சம் வட்டியில்லாக் கடன் தருவதாக ஆசை காட்டுகின்றனர். ஊழியர்களைத் திட்டமிட்டு மனரீதியிலான சஞ்சலத்துக்கு ஆட்படுத்துகின்றனர். உண்மையில் தொழிற்சங்க அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின்னர் இந்த ஊழியர் கமிட்டி என்பது கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாகத் தொடர்ந்து நிர்வாகத்தின் ஊழியர் கமிட்டிக்கு ஆதரவாகவும் பெரும்பான்மை தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைப் பகைமையான போக்குடனும் அணுகுகின்றது நிர்வாகம். மேலும் ஹெச்.ஆர். ஊழியர்கள் வேண்டுமென்றே தொழிலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் தரக்குறைவாகவும் கோபத்தைத் தூண்டும் விதமாகவும் இழிவுபடுத்திப் பேசுகின்றனர். எவ்வளவுதான் பொறுமை காத்தாலும் நிர்வாகத்தின் இந்த மரியாதைக் குறைவான பேச்சுகளும் செயல்பாடுகளும் எல்லை மீறுகின்றன” என்று அம்பலப்படுத்துகிறார், தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார்.
தொழிலாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கம் என்ற முறையில் நிர்வாகம் தொழிற்சங்க முன்னோடிகளை எந்த வகையிலும் மதிப்பதோ எந்த பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதோ இல்லை என்பது முக்கிய பிரச்சினையாகும். எப்பொழுதும் ஊழியர் கமிட்டிக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறது. இப்பொழுது கூட ஊழியர் கமிட்டி சார்பில் ராணிப்பேட்டையில் நடக்கும் ஒரு கூட்டத்திற்குத் தொழிற்சாலையின் பேருந்துகளில் ஆட்களை ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறது நிர்வாகம்.
இந்நிலையில்தான், தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிர்வாக இயக்குநரைச் சந்திப்பது; தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஹெச்.ஆர். ஊழியர்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஊழியர் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துச் சொல்வது, மனு அளிப்பது என்கிற முறையில் நிர்வாக இயக்குநரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. 15 நாள் கழித்து ஜனவரி 31 என்று நிர்வாக இயக்குநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கினர். ஆனாலும் அதுவரை பொறுமையுடன் காத்திருந்து ஜனவரி 31 அன்று உணவு இடைவேளையின்போது நிர்வாக இயக்குநரைச் சந்திக்கத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சென்றபோது காத்திருக்கச் செய்துவிட்டுச் சந்திக்க விடாமலேயே திருப்பி அனுப்பினர்.
படிக்க: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!
இதனைத்தான் பணி நேரத்தில் விதிகளை மீறியதாகவும் உணவு இடைவேளை முடிந்த பின்னரும் வேலை இடத்திற்கு வராமல் காலதாமதம் செய்ததாகவும் கூறி அடாவடித்தனமாகத் தொழிற்சங்கத் தலைவர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். இந்தப் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவும், ஊழியர் கமிட்டியின் அராஜகமான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளவும், தொழிற்சங்கத்தின் மீதான பகையான போக்கை மாற்றிக்கொள்ளக் கோரியும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் யாஸ்மின் பேகம் அவர்கள் முன்னிலையில் பிப்ரவரி 5 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் பணியிடை நீக்கத்தை இரத்து செய்ய முடியாது என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் நிர்வாகம் கூறிவிட்டது. மேலும் தாங்கள் யாரையும் தொழிற்சங்கத்தை விட்டு விலகும்படி கூறவில்லை என்றும் இவர்கள் தொழிற்சாலையில் கலகம் விளைவிக்க முயல்கிறார்கள் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தியது. அதனால் பேச்சுவார்த்தை முறிந்தது. இந்தப் பணியிடை நீக்கத்தில் விசாரணை, அதன்பிறகு தண்டனை என்று தொடர்ந்தால் ஒரு ஆண்டுக் காலம் கூட அப்படியே பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியும். மேலும் இதே நடவடிக்கைகள் இனியும் தொடரும் என்பதை அறிந்துதான் நிர்வாகத்தின் வஞ்சகப் போக்கை முறியடிக்கத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்தில் கூடியிருக்கும் இடத்திற்கு அருகிலிருந்த கழிப்பறைகளை உடனே இழுத்துப் பூட்டியிருக்கிறது சாம்சங் நிர்வாகம். சாம்சங் நிர்வாகம் எந்தவிதமான இழி செயலையும் செய்யத் தயங்காது என்பதற்கு இது சான்றாகும். பின்னர் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொழிற்சாலை சுகாதார இயக்குநரகத்தில் (Directorate of industrial health) புகாரளித்து, அதன் இயக்குநர் எஸ்.ஆனந்த் அவர்களின் தலையீட்டின் பேரில்தான் கழிப்பறைகள் திறந்துவிடப்பட்டன.
1,400-க்கும் மேற்பட்ட பெரும்பான்மை ஊழியர்கள் இந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் பத்து நாட்களாக ஈடுபட்டிருப்பினும் தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காமல் நிர்வாகம் 1,500-க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உற்பத்தியைத் தொடர்கிறது. இது சட்டவிரோதமான வழிமுறை என்று தொழிலாளர் நலத்துறைக்கு தொழிற்சங்கம் புகார் அனுப்பி இருக்கிறது.
பிப்ரவரி 14 அன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் தொழிலாளர்கள் சிக்கல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் தொழிலாளர் பேரணி நடத்தப்பட்டது. மேலும் வருகின்ற பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பங்கு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதையடுத்து சாம்சங் ஷோரூம் வாசல்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும். இதற்கிடையில் இந்த பகுதியில் உள்ள பிற தொழிற்சாலைகளிலும் வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெறும் என்று தொழிற்சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்!
தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram