திமுக அரசின் போலீசு சாம்சங் தொழிலாளர்கள் போராடும் இடத்தில் நேரடியாக இறங்கி போராட்டத்தைக் கலைத்து தொழிலாளர்களைக் கைது செய்து வருகின்றது. போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று வழக்கமான ஒரு பொய்யைச் சொல்லி தொழிலாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து கிரிமினல்களைப் போல் கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். இன்னும் பல மோசமான அடக்குமுறைகளை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்திற்கு அடியாளாக நின்று உண்மையில் அந்நிய மூலதன வளர்ச்சிக்கு திமுக அரசு சேவை செய்கிறது.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக அந்நிய மூலதனத்தை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்ததையும் இந்தத் தருணத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.

“அந்நிய தொழில் முதலீடுகள் வருகின்றன. இதனால் வேலை வாய்ப்பு உருவாகும். அதன் வழியாக தொழிலாளர்கள் வளர்வார்கள். நாடும் பொருளாதாரமும் வளரும்” என்றே பொது புத்தியில் ஒரு புரிதல் உள்ளது.

உண்மையில் அந்நிய தொழில் மூலதனம் தொழிலாளர்களுக்கு இந்திய தொழிற்சங்க சட்டங்கள் வழங்கியிருக்கும் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மறுக்கும் விதத்திலான நிபந்தனையுடன்தான் இங்கு வருகின்றன. அதன்படிதான் தமிழ்நாடு அரசுடனும் இந்திய அரசுடனும் ஒப்பந்தம் போடப்படுகின்றது.

இந்த உண்மையைப் பற்றி மட்டும் ஆட்சியாளர்கள் வாய் திறந்து பேசுவதே இல்லை. இதற்குப் பெயர் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!


தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை வளங்களைச் சூறையாடுவது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது, அரசின் வரி விலக்குகளையும் சலுகைகளையும் பெறுவது போன்ற போன்ற சலுகைகளோடு வருகின்றன இந்த அந்நிய மூலதனங்கள்.

சிப்காட், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற கொட்டடிகளை அரசே உருவாக்கிக் கொடுத்து இங்கு தொழிலாளர்கள் கசக்கி பிழியப்பட்டு சக்கையாகத் தூக்கி வீசப்படுகின்றனர்.

அந்நிய மூலதன வருகை என்பது தொழிலாளர்களுக்கும் நாட்டிற்குமான வளர்ச்சி அல்ல. அந்நிய மூலதனமானது நமது தொழிலாளர்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டி தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளவே இங்கு வருகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட திமுக அரசிற்கு இது நன்றாகவே தெரியும் ஆனால் இந்த உண்மையை மக்களிடம் சொல்ல முடியாது.

இந்தியச் சட்டங்களை மதிக்காமல் சட்டவிரோதமாகச் செயல்படும் சாம்சங் நிறுவனத்தைப் பாதுகாத்து, சட்டப்படியான உரிமைகளுக்காகப் போராடும் சொந்த நாட்டின் தொழிலாளர்களை திமுக அரசின் போலீசு கிரிமினல்களைப் போல் நடத்துவதிலிருந்தும், ஒடுக்குவதிலிருந்தும் புரிந்து கொள்ள முடியும்.

நிதி மூலதன கும்பல்களுக்கான உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற நிறுவனங்களோடு நமது ஆட்சியாளர்கள் நமது நாட்டுக்கும் தொழிலாளர்களுக்கும் கேடு விளைவிக்கும் ஒப்பந்தங்களைப் போடுகின்றன. இந்த நிதி மூலதன கும்பல்கள்தான் நம்மை ஆட்சி செய்கின்றன. நாம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் அரசியல் பிரதிநிதிகளும், அரசும் நமக்கு ‘ஜனநாயகம்’ வழங்குவதாகக் கூறிக்கொண்டு நிதி மூலதன கும்பல்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அடிபணிந்து வேலை செய்கின்றனர்.


வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க