10.10.2024
சாம்சங் தொழிலாளர்கள் மீதான
திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!
சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம்!
கண்டன அறிக்கை
கடந்த 32 நாட்களாக சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் சிஐடியு சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று போராட்டப் பந்தலை பிரித்து எறிந்த தமிழ்நாடு போலீஸ், நள்ளிரவில் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து அராஜகமாகக் கைது செய்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
சங்கம் வைப்பதற்கும் போராடுவதற்கும் அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமை வழங்கி இருக்கும் சூழலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்ற இல்லாத ஒரு காரணத்தைக் காட்டி சாம்சங் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அடியாள் வேலை பார்த்திருக்கிறது திமுக அரசின் போலீஸ்.
இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் செயல்படுவதற்கு அனைத்து விதமான உரிமைகளும் உள்ளன. ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனியான சாம்சங் அதை ஏற்க மறுக்கிறது என்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நாட்டின் அரசமைப்புக்கு கட்டுப்படாத ஒரு நிறுவனத்தை எப்படி இங்கே அனுமதிக்க முடியும் என்ற கேள்வி தான் எழ வேண்டும்? அதைவிடுத்து விட்டு சாம்சங் வேறு மாநிலத்துக்கு சென்று விடும் என்று புரளி கிளப்புவது அயோக்கியத்தனமானதாகும்.
சமூகநீதி, சமத்துவம் என்று பேசிய திமுக அரசு, சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுப்பது உழைக்கும் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தொழிற்சங்கங்களின் போராட்டங்களை சீர்குலைத்து, பிளவு படுத்தி பெரும் போலீஸ் படையைக் குவித்து அச்சுறுத்தி கார்ப்பரேட் கம்பெனிக்கு அடியாள் வேலை பார்ப்பதே போலீஸின் முதன்மை வேலையாக இருக்கிறது.
போராடுகின்ற தொழிலாளிகளின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று கைது செய்வது சிறைப்படுத்துவது, போராட்டப் பந்தலைப் பிரித்து எறிவது, போராடுகின்ற நபர்களை யாரும் சந்திக்க விடாமல் கைது செய்வது, தொழிற்சங்கத்தை உடைப்பது – பிளவுபடுத்துவது ஆகிய செயல்களை மேற்கொண்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு அடியாள் வேலை பார்க்கக் கூடிய இந்த போலீசின் நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த 32 நாட்களாகப் போராடிவரும்
சாம்சங் தொழிலாளர்களுக்குத் தோள் கொடுப்போம்!
அடிப்படை உரிமையான போராடும் உரிமையும்
தொழிற்சங்க உரிமையையும் நிலைநாட்டுவோம்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram