சிவகங்கை: 20 மாதங்களாக ஊதியம் வழங்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசு!

தங்களின் கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தாலும் அரசானது பேச்சுவார்த்தை என்கிற பெயரில் போராட்டத்தைக் கலைத்து விடுகிறது. அதன் பிறகு ஆசிரியர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவது இல்லை.

டந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள துவரணன்கண்மாய் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோன்று பகையஞ்சான் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பணி இடமாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எனவே பதவி உயர்வு மற்றும் பணி இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு நிலுவை வைத்த 20 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி காளையார்கோவிலில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த 19 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியை கூறுகையில், “நான் வேறு ஒரு பள்ளியில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவிட்டு பகையஞ்சான் கிராமத்தில் உள்ள RC பள்ளிக்கு பணிக்கு வந்தேன். ஆனால் வேலைக்கு வந்ததிலிருந்து 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவச் செலவிற்குப் பணமில்லாமல் வாழ்வாதார பிரச்சனையில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.


படிக்க: தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு


இந்நிலையில் போலீசு அதிகாரி வெங்கடேஷ பெருமாள் மற்றும் துணை வட்டாட்சியர் தர்மராஜ் ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வருகிற 25 ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இதுபோன்று தங்களின் கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தாலும் அரசானது பேச்சுவார்த்தை என்கிற பெயரில் போராட்டத்தைக் கலைத்து விடுகிறது. அதன் பிறகு ஆசிரியர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவது இல்லை.

திமுக அரசானது பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், எண்ணும் எழுத்தும் திட்டம், வானவில் மன்றம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மறுபுறம் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தாலும் போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை, ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது, நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இருப்பது என்பதெல்லாம் கார்ப்பரேட்மயமாக்கத்தின் ஒரு அங்கமே.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க