டந்த செப்டம்பர் மாதம் 17, 2022 அன்று, பெரியார் பிறந்தநாளில் சென்னை பூவிருந்தவல்லி, குமணன் சாவடியில் உள்ள EVP இராஜேஸ்வரி மண்டபத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக “ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

***

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் மாநாடு தொடங்கியது. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமை உரையில், காவி – கார்ப்பரேட் பாசிசம் என்பதை மக்களுக்கு நெருக்கமாக புரியும் வகையில், நேரடியாக “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்று தலைப்பிட்டு மக்கள் மத்தியில் இந்த இயக்கத்தை இரண்டு மாதம் காலம் கொண்டு சென்றோம்.

முதலாளித்துவம் பழைய முறையில் ஆள முடியாது, சுரண்ட முடியாது என்னும்போது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சொல்லில் கூட இல்லாமல் நேரடியாக பாசிசம் அரங்கேறுகிறது.

மறுகாலனியாக்க கொள்கைகளான, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கேடுகெட்ட பொருளாதார கொள்கையில் அமல்படுத்திய பிறகு பாலாறும் தேனாறும் ஓடும் என முதலாளித்துவ அறிவுஜீவிகள் அன்று கூறினார்கள். ஆனால், உலக முழுக்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் என அனைத்தும் சுரண்டப்பட்டு ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் மாறியுள்ளனர். மக்கள் வாழ்க்கை மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்படுகிறது.

அமிர்தா

இந்தியாவிலும் அதே நிலைதான். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் உலக பணக்காரர்கள் வரிசைக்கு சென்றுவிட்டார்கள். மக்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இன்று தனியாரமய கொள்கைகளை ஆதரித்து பேச முடியாது. அதனால் பாசிசத்தை கொண்டு வருகிறார்கள்.

உலக பன்னாட்டு முதலாளிகளுக்கு யார் தேவையோ அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். மன்மோகன்சிங் அண்டர் பர்பாமர் என்று கூறிவிட்டு மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். ஏஜமானின் விசுவாசமான நாயைபோல மோடி கும்பல் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 8 கால் பாய்ச்சலில் விசுவாசமாக வேலை செய்கிறது.

காவி – கார்ப்பரேட் கும்பலின் ஹைபிரிட் பாசிசத்தை வீழ்த்த -களத்தில்- செயல்பாட்டில் இருக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். அதற்கான முதல் படிதான் இந்த மாநாடு என்பதையும் மாநாட்டு மைய நோக்கத்தையும் விளக்கி பேசினார்.

***

மாநாடு முகப்பில் பகத்சிங், ராஜ்குரு

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின்  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் பேசிய உரையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்பது வெறும் தொழிலாளர்களையோ, விவசாயிகளையோ பாதிக்கும் பிரச்சினை இல்லை, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

துணைவேந்தன்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி கும்பலை நாம் வீழ்த்த வில்லை என்றால் நாம் வீழ்ந்து விடுவோம் என்றும் மாணவர்களுக்கு கல்வியில் நீட் தேர்வு, சூத்திரன் என்றால் நீ படிக்கக் கூடாது என்ற மனுதர்மத்தை புகுத்துகிறார்கள். மெத்த படித்தவர்களுக்கும் இங்கு வேலை இல்லை, அக்னிபத் போன்ற திட்டத்தை எதிர்த்து வடக்கில் நடந்த போராட்டங்கள் வேலையில்லாத் திட்டங்களை உணர்த்துகின்றன.

இப்படி வேலை இல்லா திண்டாட்டம் பெருகி வரும் சூழலில்தான் கஞ்சா போன்ற சீரழிவு கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பி சிந்திக்கவிடாமல் செய்கிறார்கள். எப்படி சீனாவில் அபினி யுத்தம் நடந்ததோ அதுபோல அதானி துறைமுகத்தில் கஞ்சா கடத்தப்படுகிறது. இது மாணவர்களை சீரழித்து போராடவிடாமல் தடுகிறது. இவற்றை மாற்ற வேண்டுமென்றால் களத்தில் நின்று அனைவரும் போராட வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்களின் பிரச்சினைகளை அம்பலப்படுத்தி பேசினார்.

***

ராமலிங்கம்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் பேசிய உரையில், இன்று மீண்டும் மனுவிற்கு அங்கீகாரம் கொடுத்து மோடி கும்பல் வேலை செய்கிறது. பாபர் மசூதி இடிப்பிற்கு இந்துகளே வாங்கள் என்று ஆர்.எஸ்.எஸ் – பாஜக அழைத்த போது யாருடா இந்து என்று கேள்வி எழுப்பி கருவறை நுழைவு போராட்டத்தை ம.க.இ.க மற்றும் மக்கள் திரள் அரங்குகள் அனைவரும் இணைந்து நடத்தினோம். பெரும்பான்மை இந்துக்கள்தான் இவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் மூலம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கூறி மோடி கும்பலை அம்பலப்படுத்தி பேசினார்.

***

கர்நாடகா மாநிலத்தின், திராவிட சிட்டி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அபிகவுடா அவர்கள் பேசிய உரையில், பிஜேபி கட்சி என்பது நேரிடையாக ஆட்சிக்கு வருவதில்லை. மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்கிறார்கள். மொத்த இந்தியாவில் தமிழ்நாடு எல்லா வகையிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

அபிகவுடா

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. எங்க திராவிட சிட்டி இயக்கத்தின் நோக்கம் என்றால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற திராவிட நாடுகளின் நட்பை வளர்ப்பது. நம்முடைய உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும். பார்ப்பனர்களை ஜெயிக்கவிடாதீர்கள். காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற தேசிய கட்சிகள்தான் கர்நாடகவில் ஆட்சிக்கு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மாநில கட்சிகள் ஆட்சிக்கு வருகிறது நீங்கள் தமிழர்கள் புத்திசாலிகள். நாம் ஒற்றுமையை பேணுவோம் என்று பேசினார்.

***

தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்கள் பேசிய உரையில், உங்கள் அமைப்பின் நகர்வு வரவேற்கத்தக்கது. இந்திய அரசு அதானியை வாழ வைக்கிறது. சமுதாய உரிமைகள் அழிக்கப்படுகின்றன, அரசியல் உரிமைகள் அழிக்கபடுகின்றன, பொருளாதாரம் அழிக்கப்படுகிறது, கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன. நெய்வேலியில் நிலக்கரி பல லட்சம் டன் எடுத்து செல்கின்றான். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் இயற்கை வளங்களை சூறையாடுகிறது ஒன்றிய அரசு.

எடுக்கின்ற நிலக்கரிக்கு ஒரு விழுக்காடு கூட ராயல்டி இதுவரை தருவதில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு 1992-யில் ஒரு டன்-க்கு 50 பைசா கொடுக்கிறான். எவ்வளவு இழிவு. ஆசாம் மாநிலத்தில் எடுக்கும் பெட்ரோலுக்கு 15% ராயல்டி, குஜராத் இருந்து எடுக்கும் பெட்ரோலுக்கு 15% ராயல்டி தருகிறான். தமிழ்நாட்டில் தஞ்சை, நரிமனம் பகுதியில் பெட்ரோல், சேலத்தில் இரும்பு என தமிழ்நாட்டின் கனிமவளங்கள் சூறையாடப்படுகிறது.

திருப்பூரில் புதிய திருப்பூர் என்ற பெயரில் கார்ப்பரேட் கூடி குலாவி நம்முடைய அடிப்படை தொழில் உரிமையை நசுக்கும் வேலையை செய்கிறார்கள். சிவகாசியில் உலக தரத்தில் தீப்பட்டி தொழிற்சாலைகள் எல்லாம் மார்வாடிக்கு போய்விட்டன.

சாகர் மாலா என்ற பெயரில் நம்முடைய கடல் வளம் சூறையாடப்படுகிறது. அடிப்படை உரிமைகளை இழந்துவிட்டோம். பாசிச வெறி பிடித்த பார்ப்பன ஆட்சி நம்மை சூறையாடுகிறது.

பொழிலன்

தமிழ்நாடு என்பது கல்வி பெற்ற சமூகம். மொழியின் அதிகாரத்தை இழக்கிறோம். வழிபாட்டு உரிமையில்லை. தமிழில் வழிபாடு செய்ததால் தீட்டு கழிக்கிறான். நீஷ மொழி என்கிறான். தமிழை, தேவடியாள் மக்கள் பேச கூடிய மொழி என்று சொல்கிறான் சங்கராசாரி. அவன் மீது தீண்டாமை வழக்கு போட முடியாதா? தமிழில் பாடு, இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு என்று மக்கள் கலை இலக்கியக் கழகம், பார்ப்பனர்களை திருவையாரில் ஓட ஒட விரட்டினார்கள்.

நாம் தொடர்ந்து போராடவில்லை என்றால் அவன் மீண்டும் நம் தலை மீது ஏறி உட்காருவான். தமிழநாட்டின் உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டு உரிமைகள் வழியாக போராட வேண்டும், 32 தீர்மானங்கள் வழியாக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என்பது முன் மொழியப்பட்டுள்ளது, நாங்களும் கைக்கோர்த்து இந்திய பாசிச அதிகார வெறியை, பார்ப்பனிய அதிகார வெறியை, இந்த பன்னாட்டு நிறுவனங்களின் அதிகார வெறியை அழிக்க அனைத்து முயற்சிகளையும் தோளோடு தோள் கொடுப்போம் என்று கூறினார்.

மாநாட்டில் பங்கேற்ற மக்கள் கூட்டம்

***

ம.ஜ.இ.க-வின் வழக்கறிஞர் தோழர் சேல்முருகன் பேசிய உரையில், நாட்டின் ஒட்டு மொத்த பட்ஜெட் மூன்றாக பிரிக்கலாம், மூன்றில் ஒரு பாகம் கடனுக்கு, ஒரு பாகம் ராணுவதற்கு, ஒரு பாகம்தான் தொழில் மற்றும் மற்றவைக்கு.

கடன் யாருக்காக வாங்கப்பட்டது என்றால்? அதானிக்காக 30 மில்லியன் டாலர் அரசே கடனாக வழங்கியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி, மானியம், ஊக்கத்தொகை என்ற பெயரில் தள்ளுபடி, வாராகடன் என்று பெயரிலே தள்ளுபடி, மக்களின் சொத்துகளை சூறையாடி முதலாளிகளின் கைகளின் சொத்துகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

சேல்முருகன்

இங்கு போடும் அனைத்து ஒப்பந்தங்களும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்காகத் தான். இந்த பாராளுமன்றத்தின் மூலமே பாசிச ஆட்சியை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். நிதி மூலதனத்தை நெருக்கடியை மக்கள் மீது சுமத்த தான் பாசிச ஆட்சியே தேவைப்படுகிறது.

இந்த பாசிசத்தின் இலக்கு இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் மீதும் தலித் மக்கள் மீதும், பழங்குடிகள் மீதும் இருக்கிறது. இதை முறியடிக்க அனைத்து ஓரணியில் திரள வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்போடு கூடிய பாசிச கூட்டமைப்பில் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று பேசினார்.

***

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் பரசுராமன் அவர்கள் பேசிய உரையில், கள்ளக்குறிச்சியில் மக்கள் ஒரு சரியான தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள். இந்திய சமூக மாற்றத்திற்கு ஒரு விடியல். இந்த போராட்ட களத்தில் நாம் என்ன செய்ய போகிறோம்?

2019 ஆண்டு பொருளாதார மந்தம் கார்ப்பரேட்களுக்கு 1,50,000 கோடிக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வரிச்சலுகையை வாரி கொடுக்கிறது. கொரோனா காலத்தை பயன்படுத்தி உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. வேலைபளு, வேலை நேரம், வேலை நாட்கள் குறைப்பு, சம்பளம் வெட்டு, தொழிற்சங்கம் அமைக்க முடியவில்லை. கூட்டுப்பேர உரிமைக்கு இடமில்லை.

பரசுராமன்

ஆக தொழிலாளர் வர்க்கத்தின் இயல்பான வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொள்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் மோடி ஆட்சி, தொழிலாளர்களை எப்படி ஒடுக்கியிருக்கிறது என்று தொகுத்து பார்க்க வேண்டும். தொழிலாளர்கள் கழுத்தில் கத்தியிருக்கிறது. சிறு வியாபாரிகள், சிறு பட்டறை நடத்துபவர்கள் மேலும் ஒடுக்குமுறை. 2021 ஆண்டு 164000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் 40,000 பேர் தொழிலாளர்கள். இப்படி அடுக்கடுக்கான விபரங்கள், மக்களின் துயரங்களை காட்டுகின்றன.

இதற்கு மேல் இங்கே வாழ முடியாது என்ற நெருக்கடி வந்துவிட்டது. தொழிலாளர்களை அரசியல்படுத்த வேண்டும். அரசியல் தெரியாத அணிகளை வைத்து கொண்டு பாசிசத்தை வீழ்த்த முடியாது. இந்த அரசு மக்களுக்காக எதுவும் செய்யாது. வடமாநிலங்களில் பார்த்தால் கல்வி கிடையாது, நாடோடிகளாக மாற்றிவிட்டது.

மறுமுனையில் அதானி, அம்பானியை சர்வதேச பணக்காரர் வரிசையில் அமர வைத்துவிட்டது. பாசிசத்தை முறியடிக்க வேண்டுமென்றால் சாதாரண பணியல்ல, 32 தீர்மானங்கள் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம், பாசிசத்தை முறியடிப்போம் என்று பேசினார்.

***

SKM-யின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையில், உங்கள் மாநாடு சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது. எங்கிருந்து தொடங்குவது, நிலை கைமீறி போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து துறைகளும் சீரழிந்துவிட்டது. இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் தரைமட்டமாகிவிட்டது. இந்த பொருளாதார சீரழித்தது இந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட நம் பண்பாட்டை சிதைத்து, மனித குலத்திற்கு விரோதமான சனாதன பண்பாட்டை இன்று புகுத்திக் கொண்டிருக்கிறது இந்த காவி – கார்ப்பரேட் கும்பல்.

கே.பாலகிருஷ்ணன்

இந்தியாவின் நீதித்துறை, ரிசர்வ் வங்கி, போன்றவற்றையெல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டார்கள். இந்தியாவில் உள்ள எதிர்கட்சியை அழிப்பது, கார்ப்பரேட்களிடமும் இலஞ்சத்தை வைத்து எதிர்கட்சியை அழிப்பது. வருமானவரித்துறையை ஏவிடுவது. சமூக நல்லிணக்கம் என்பது இந்தியா பாரம்பரியமிக்க கோட்பாடு, அதை அழித்து மொழி, இனம், சாதி மோதல்களை ஏற்படுத்தி ரத்தக்காடாக இந்தியாவை மாற்றியுள்ளார்கள்.

இவற்றை அம்பலப்படுத்த வேண்டும்.  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தனிநபர்கள் விரும்பினால், கௌரி லங்கேஷ் போன்றோர் கொலை செய்கிறார்கள். அமைப்பாக இருந்தால் கைது செய்து வெளியே வர முடியாமல் செய்கிறார்கள். பாசிச கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மோடியை எப்படி ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பதை அம்பலப்படுத்தினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுக்கு சாலை, விமான நிலையம், வங்கிகள், எல்.ஐ.சி என எல்லாவற்றையும் விற்கிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் விளக்கி கூறினார். அனைவரையும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.

***

ம.ஜ.இ.மு அமைப்பின் தோழர் ஞானம் அவர்கள் பேசிய உரையில், பாசிச எதிர்ப்பை முன்னுறுத்தி வீழ்த்த வேண்டுமென்ற ஆர்வதோடு வந்திருக்கும் அனைவருக்கும் செவ்வணக்கம் தோழர்களே!

ஞானம்

பாசிசத்தை யாருக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. அம்பானி அதானிகளுக்கு, அவர்கள் யார் கார்ப்பரேட் முதலாளிகள். கார்ப்பரேட் முதலாளிகளின் பின்னால் இருக்கும் வல்லரசுகளின் நலனுக்காக இந்த நாட்டின் மக்கள் மீது கொடுங்கோன்மை ஆட்சி நீர்மானிக்கப் படுகின்றது. இவர்களை இலாபத்திற்காக கொள்ளையை நடத்ததான் பாசிசம் இங்கே வருகிறது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கை உலக வர்த்தக கழகத்தால் உருவாக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளில் வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.

உலக வர்த்தக கழகம், உலக வங்கி வகுத்து கொடுத்த கொள்கைகள்தான் மக்களை அழிக்கிறது. புதிய காலனியப் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து வர்க்க ரீதியாக ஒரு அணியில் திரண்டு போராடுவோம். வெற்றி பெறுவோம். என்று பேசினார்.

***

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் பேசிய உரையில், பாசிச அரசமைப்பு மக்கள் ஒடுக்குகிறது. யாருக்கு சேவை செய்கிறது. இந்த மாநாட்டின் 32 தீர்மானங்கள் இந்த ஆட்சியின் ஒடுக்குமுறையை எடுத்து கூறுகிறது. நீதித்துறையின் நடவடிக்கைகளும், பாராளுமன்றத்தின் கொண்டுவரும் சட்ட மசோதாக்களும், நடக்கும் கைதும், ஒடுக்குமுறைகளும் பாசிசம் வளர்ந்து ஆட்சியை கைப்பற்றி நாட்டிற்கு ஒரு பேரிடரை தோற்றுவித்து கொண்டிருக்கிறது என்பதை கண்ணுற்று வருகிறோம்.

பாலன்

கடந்த 30 ஆண்டுகாலமாக உங்கள் அமைப்பு எதிர்த்து வந்திருக்கிறது. பல்வேறு தீவிர பிரச்சாரங்களையும் செய்து வந்துள்ளீர்கள். கருவறை நுழைவு போராட்டம் முதல் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறீர்கள்.

பார்ப்பன பாசிச பயங்கரவாதம் இன்று நடைமுறையில் இருக்கிறது. அரச கட்டமைப்பு இயக்கும் சித்தாந்தமாக இருக்கிறது. இந்துத்துவ தேசியமாக மாறியுள்ள சூழலில் மிகவும் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை ஏன் முறியடிக்க முடியவில்லை என்பதை நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி?

இஸ்லாமிய இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் தனித்தனியாகதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பொது மேடை ஏன் நாம் உருவாக்க முடியவில்லை? இதற்கான கேள்வியை எழுப்பி விடைக்காணும் வகையில் மக்கள் மத்தியில் சென்றால்தான் அவர்களை முறியடிக்க முடியும். சில குறிப்பிட்ட முதலாளிகளுக்குதான் மோடி கும்பல் வேலை செய்கிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் கைக் கோர்ப்போம்! பாசிசத்தை முறியடிப்போம்! என்று பேசினார்.

***

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய உரையில், இந்தியாவை சூழ்ந்துள்ள பிரச்சினையை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி அடையாளப் படுத்துகிறோம். இந்துத்துவ கருத்துதான் பேராபத்து என்கிறோம். பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.யும் வீழ்த்த வேண்டும். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்.க்கு துணையாக இருக்கும் அம்பானி – அதானியையும் வீழ்த்த வேண்டும் என்பதை மக்களுக்கு புரிய வைக்கதான் இந்த மாநாடு.

பாசிசம் என்பது என்ன? இந்துத்துவம் தானா? இந்துராஷ்டிரம் தானா? சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவர்கள் பரப்பும் அரசியல் தானா? முஸ்லீம் எதிர்ப்பு, கிறிஸ்துவ எதிர்ப்பு? இவை அனைத்தும் உண்டு.

தொல்.திருமாவளவன்

சனாதனம் என்பது தான் பாசிசம். இந்தியாவை பொருத்தவரை பாசிசம் என்றால் சனாதனம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சனாதனம் தானே? எப்படி பாசிசம் என்று கேட்கலாம். ஹிட்லர், ராஜபக்சே, மோடி பின்பற்றும் பாசிசம் எல்லாம் ஒன்று தான்.

ஒரே இனம், ஒரே மொழி அதுதான் ஹிட்லர் வைத்தது. ராஜபக்சே முன் வைத்ததும் அதுதான். சிங்கள மக்களுக்குரியது அதுதான் ஒற்றை ஆட்சி என்றனர். அதுவும் இன அடிப்படையிலான, மத அடிப்படையிலான பாசிசம்.

இவர்களை பின்பற்றிதான் மோடியின் ஆட்சியும் பாசிசம் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி பன்மைத்துவத்திற்கு இடமில்லை. பாகுபாடுகள் நீடிக்கும் அது இறைவன் கட்டளை. பிறப்பின் அடிப்படையில், பாலினடிப்படையில் உள்ள பாகுபாடுகள் நீடிக்கும் என்பவர்கள்தான் இவர்கள். இதை கட்டிக்காப்பது தான் சனாதனம்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிதான் அடிப்படை கொள்கை. பாட்டளி வர்க்கத்தின் விடுதலைதான், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம்தான் அடிப்படை கொள்கை. இது நமக்கு கருத்தியல் முரண் இல்லை, கருத்து முரண்தான்.

மார்க்சிய இயக்கங்களும், தேர்தலில் ஈடுபடும் கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் ஈடுபடாத கட்சிகளாக இருந்தாலும் நமது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, நமது உடனடி பகை, நிறைய முரண் இருக்கலாம், நிறைய பகை இருக்கலாம். அடிப்படை முரணாகவும், பிரதான முரணாகவும் சனாதனமே இருக்கிறது என்பதை கூறினார். பாசிச எதிர்ப்பில் உங்களோடு கைக்கோர்த்து நிற்போம் என்ற உறுதியை தந்து விடைப்பெறுவதாக கூறினார்.

***

மாநாட்டில் பங்கேற்ற மக்கள் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்கள் பேசிய உரையில், தமிழகத்திலே பாசிசத்திற்கு எதிராக, கார்ப்பரேட் கொடுங்கோன்மைக்கு எதிராக தொடர்ச்சியாக, சிறப்பான பரப்புரைகளை, மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து பல்வேறு போராட்டங்களை உங்கள் அமைப்புகளின் சார்பாக எடுத்துள்ளீர்கள்.

ம.க.இ.க-வின் சார்பாக வெளியிடப்பட்ட காவி இருள், அசுரகானம் ஆகிய ஒலிப்பேழைகளை மறக்க முடியாது. உங்கள் அமைப்பின் மாநாட்டில் பேச வாய்ப்பளித்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இங்கு பாசிசம் என்றால் என்ன? பாசிசத்தின் வடிவம் என்றால் என்ன? என்றும் இங்கே பேசியவர்கள் பேசியுள்ளனர். “பிரதமர் நரேந்திர மோதியும் அம்பேத்கரும்” என்ற புத்தக வெளியீடு விழாவில் ராம்நாத்கோவித் பேசுகிறார். அதில் பிரதமர் மோடிதான் உண்மையாக பின்பற்றுபவர் என்று நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சான்றிதழை கொடுக்கிறார்.

பாசிசம் பொய்மைகளை உண்மையாக நம்ப வைத்து மக்களை தன் வயப்படுத்த கூடிய ஒரு செயல்திட்டம் உடையது. பாபா சாகேப் அம்பேத்கர் வர்ண பேதங்களுக்கு எதிராக போராடினாரோ, அதற்கு நேரதிரான கொள்கையை மோடியை உண்மையிலேயே பின்பற்ற கூடியவர் என்று சொல்கிறார்.

ஜவாஹிருல்லா

மோடி அவர்களின் ஆட்சியில் 2021 ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் 7818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என  தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. உ.பி.யில் மட்டும் தலித்துக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை வழக்குகள் 61,000 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றது. ஹத்ராஸ் 19 தலித் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நிதியில்லை. அப்படிப்பட்ட மோடியை அம்பேத்கரை பின்பற்றக் கூடியவர் என்று சொல்கிறார்கள் சங்கிகள்.

தமிழ்நாடு என்பது பெரியார் மண்தான். மாற்று கருத்தில்லை. ஆனால், கிராமங்கள் வரை பாசிசம் ஊருடுவியிருக்கிறது. விழுப்புரத்தில் ஆய்விற்கு சென்றபோது, ஒரு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் உங்களுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கிறது என்று விசாரித்தோம். 100 வேலைத்திட்டத்திற்கு பெயர் என்ன? யார் கொண்டு வந்தது என்று கேட்டால்? அந்த பெண்கள் மோடி கொண்டு வந்தார் என்கின்றனர். அவர்கள் எப்படி கிராமப்புறங்களில் கூட ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

பாசிஸ்டுகளின் நோக்கம் உயர்சாதி, ஆதிக்கச் சாதிகளை தவிர மற்றவர்களை அடிமையாக்குவதுதான். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்ட வேண்டும். பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் களைந்து நன்கு ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும். மனித நேய மக்கள் கட்சி உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம் நன்றி என பேசினார்.

***

நூல் வெளியீடு

புதிய ஜனநாயகம் இதழின் சார்பாக புதிய வெளியீடு “இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்” என்ற புத்தகத்தை தொல்.திருமாவளவன் வெளியீட, தோழர் ஜவஹிருல்லா பெற்று கொண்டார்.

***

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய போது, சமூகத்தில் பாசிசம் ஊடுருவியிருக்கிறது. பாசிசம் நம்மை சுற்றி பற்றி பரவியிருக்கிறது. தொழிலாளர் இடம்பெயர்ந்து வேலை செய்வது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நாடுவிட்டு நாடு, மாநிலம் மாநிலம் இடம்பெயர்ந்து வேலை செய்கிறார்கள். வட மாநிலங்களிலிருந்து இங்கே வருகிறார்கள். தொழிலாளர்களை நாம் குற்றம் சாட்டவில்லை. வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு தமிழகம் சொர்க்கமாக இருக்கிறது. எல்லா தொழில் நிறுவனங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

வெற்றிவேல் செழியன்

கிராமப்புறங்களில் ஒரு 20 தொழிலாளர்கள் காவி உடைப்போட்டிருக்கிறார்கள் என்றால் அவர் பலியாகியிருக்கிறார்கள் என்றுதான் யோசிக்க வேண்டிருக்கிறது. காளியம்மன் கோயிலில் ஸ்ரீராம் ஜெயம் என்று எழுதுகிறார்கள். அங்குள்ள மாணவர்களுக்கு இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அரசியல் தெரியாது. நாட்டார் தெய்வ வழிப்பாட்டு முறைகளில் இன்றைக்கு பார்ப்பனிய கருத்துகள், இந்து மதவெறி கருத்துகள் ஊடுருவியிருக்கிறது.

கல்வி என்பது தனியார்மயமாக்கப் பட்டிருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் சாகா பயிற்சி நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஒரு மாணவி இறந்த பிறகுதான் அந்த பள்ளியில் சாகா பயிற்சி நடந்தது நமக்கு தெரிந்தது.

ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் எங்கே இருக்கிறார்கள். மாணவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்து கூட ABVP-யில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். இங்கு இருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் நாம் யோசிக்க வேண்டும். இந்து மதவெறி பயங்கரவாதிற்கு சாதகமாக இருக்கிறது.  இந்த அரசு இயந்திரம் என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வழிநடத்துவது என்ற நிலையில் இருக்கிறது.

தேர்தல் அரசியலில் இவர்களை வீழ்த்த முடியாது. இந்தியாவில் உள்ள கட்சிகள் எல்லாரும் சேர்ந்து வீழ்த்தினாலும் நிலையாக ஆட்சி நடத்த முடியாது. இந்த அரசு என்பது எவ்வளவு கார்ப்பரேட் நலன் கொண்ட அரசாக இருக்கிறது. இவர்களை களத்தில் நின்று முறியடிக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கட்டி இவர்களை முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.

மாநாட்டில் சங் பரிவாரங்களை அம்பலப்படுத்தும், இந்துத்துவத்தை எதிர்க்கும் பல்வேறு நூல்கள் விற்பனைக்கும் வைப்பபட்டது.

***

சிவா

தோழர் சிவா அவர்களால தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ரவி அவர்கள் நன்றியுரை கூறினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.


இதையும் பாருங்கள்:

மாநாடு நேரலை நிகழ்வு பாகம் – 1

மாநாடு நேரலை நிகழ்வு பாகம் – 2

பாருங்கள்! பகிருங்கள்!!