2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியை பிடித்த பாசிச பா.ஜ.க. கும்பல், தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயுதமாக கட்டிமுடிக்கப்படாத இராமர் கோவில் திறப்பை எடுத்துள்ளது. அதன்விளைவாக, ஒரு மதத்தை சார்ந்த கடவுளின் கோவில் திறப்பை அரசே ஏற்று நடத்துவது; இந்தியாவின் பிரதமரான மோடியை சிறப்பு விருந்தினராக அழைப்பது; கோவில் திறப்பிற்கு யார் வர வேண்டும் யார் வரக் கூடாது என்று பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் முடிவு செய்வது என ராமர் கோவில் திறப்பை இந்தியாவின் அரசு தினத்தை போல கொண்டாடுகின்றது.
கோவில் திறப்பை ஒட்டி ஜனவரி 22 நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது பாசிச மோடி அரசு. அத்தினத்தில், அனைத்து வங்கிகளும் அரை நாள் மூடப்பட வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வுத்தரவின்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகள் (PSB), காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் பிற்பகல் 2:30 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
மேலும், மாநில அளவிலும் பா.ஜ.க. மற்றும் அதன் அடியாள் படையினர் ஆளும் பசு வளைய மாநிலங்கள், வடக்கிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் ஒருநாள் அரசு விடுமுறை அல்லது அரை நாள் அறிவித்துள்ளன. இவை, இந்த இராமர் கோவில் திறப்பு என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலுக்கான ’வெற்றி’ விழாவேயன்றி இந்தியாவில் உள்ள ‘இந்து’க்களுக்கானது கூட அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.
குஜராத்
குஜராத் மாநிலத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்
உத்தரபிரதேச மாநில முதல்வரான காவி பாசிஸ்ட் யோகி ஆதித்யநாத், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஜனவரி 22-ம் தேதி மூட உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசம்
மத்தியப்பிரதேட மாநிலத்தில் ஜனவரி 22ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் உலர் தினமும் (dry day) கடைப்பிடிக்கப்படுகிறது.
ராஜஸ்தான்
அண்மையில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள்கிழமை மதியம் 2:30 மணி வரை விடுமுறை என அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 22 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா
ஹரியானாவிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாலத்திலும் உலர் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட்
உத்தராகண்டில் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அரசு அலுவலகங்களும் மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
அசாம்
காவி பாசிஸ்டான ஹிமாந்த பிஸ்வா சர்மா ஆட்சி செய்யும் வடக்கிழக்கு மாநிலமான அசாமில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா
திரிபுரா முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலமான நவீன் பட்நாயக் ஆட்சி செய்யும் ஒடிசாவில் அனைத்து அரசு அலுவலகங்களும், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களும் மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா
கோவாவில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்
சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் அதன் அனைத்து அலுவலகங்களையும் ஜனவரி 22 அன்று மூடுவதாக அறிவித்துள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்று முதல்வர் என் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube