மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்

2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ந்தியாவின் அரசியல் களத்தில் ‘பசு பாதுகாப்பு’ மற்றும் “பிங்க் ரெவல்யூஷன்” (இறைச்சிப் புரட்சி) ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து முழங்கி வரும் பாரதிய ஜனதா கட்சி, நாட்டின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து கோடிக்கணக்கில் நிதி பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. ஸ்கிரால் (Scroll.in) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இர்பான் அலானா என்பவரால் வழிநடத்தப்படும், 160 ஆண்டுகள் பழமையான “அலானா குழுமம்” (Allana Group), 2024-25 நிதியாண்டில் மட்டும் பா.ஜ.க-விற்கு ₹30 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்துத்துவ அமைப்புகள் மாட்டிறைச்சி விற்பனைக்கும் நுகர்வுக்கும் எதிராக வன்முறையான வெறுப்புப் பிரச்சாரங்களையும், பசு ‘பாதுகாவலர்கள்’ (Cow Vigilantes) என்ற பெயரில் கும்பல் தாக்குதல்களையும் முன்னெடுத்து வரும் சூழலில், பசு இறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் ஒரு நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 15 மடங்கு கூடுதல் நிதியைப் பெற்றிருப்பது அதன் அரசியல் முரண்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, அலானா குழுமத்தின் கீழ் இயங்கும் அலானாசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Allanasons Private Limited), ஃபிரிஜிரியோ கன்சர்வா அலானா (Frigerio Conserva Allana Private Limited), ஃபிரிகோரிஃபிகோ அலானா (Frigorifico Allana Private Limited) மற்றும் இந்த்டாக்ரோ ஃபுட்ஸ் (Indagro Foods Private Limited) ஆகிய நான்கு முதன்மை நிறுவனங்கள் வாயிலாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான பின்னணி என்னவென்றால், 2019-ஆம் ஆண்டில் ₹2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையின் சோதனையை இக்குழுமம் சந்தித்தது. இந்தச் சோதனைக்குப் பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, 2019-இல் வாங்கிய ₹7 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில், ₹5 கோடியை அன்றைய மகாராஷ்டிர மாநில மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த சிவசேனா-பா.ஜ.க கூட்டணியினருக்கு வழங்கியது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.


படிக்க: குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!


பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இறைச்சித் தொழிலை ஊக்குவிப்பதாகக் கூறி “பிங்க் ரெவல்யூஷன்” என்று கடுமையாகச் சாடினார். ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில்தான் இந்திய மாட்டிறைச்சி (எருமை இறைச்சி – Carabeef) ஏற்றுமதி 2025-இல் 4 பில்லியன் டாலர் எனும் வரலாற்றுச் சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, வியட்நாம் சந்தையில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, மோடி அரசு எகிப்து, துருக்கி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்தி அலானா போன்ற நிறுவனங்களுக்குப் பேருதவி புரிந்தது. 2023-இல் ஹலால் சான்றிதழ் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி இத்தொழில் தடையின்றி வளர அரசு வழிவகை செய்தது. இதன் விளைவாக, அலானாசன்ஸ் நிறுவனத்தின் வருவாய் 2024-25-இல் முதல்முறையாக ₹10,320 கோடி என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தியில் 40 சதவிகிதம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (12%), ஆந்திரா (8.83%), தெலுங்கானா (8.53%) மற்றும் கேரளா (8%) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. அலானா குழுமத்தின் முக்கிய உற்பத்தி அலகுகள் அமைந்துள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில்தான் பசுக் காவலர்கள் என்ற பெயரில் கும்பல் வன்முறைகள் அதிகம் அரங்கேறுகின்றன.

சாதாரண வியாபாரிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் இறைச்சி விவகாரத்தில் குறிவைக்கப்படும் நிலையில், அதே தொழிலில் கோடிகளை ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் ஆதரவோடு செழித்து வளர்வதும், அதற்குப் பிரதிபலனாக ஆளும் பா.ஜ.க-விற்கு கோடிகளில் நிதி கிடைப்பதும் இந்துத்துவ அரசியலின்  கதையாடல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பொருளாதார நலன்களுக்காகச் சித்தாந்தங்களையும் மத உணர்வுகளையும் ஆளும் தரப்பு எவ்வாறு சமரசம் செய்துகொள்கிறது என்பதற்கு இந்தத் தரவுகள் ஒரு துலக்கமான சான்றாகும்.

செய்தி மூலம்: மயீஷத்


அஜிதா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க