“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.

0

டந்த ஆகஸ்ட் 31 அன்று, “செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்தத்தான் நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என்று செய்திகள் பரவத் தொடங்கின. இதனையடுத்து ஒட்டுமொத்த கவனமும் பாசிச பாஜக அரசின் பக்கம் திரும்பி விட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செப்டம்பர் 1 அன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” விவகாரத்தை ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. எட்டு நபர்களைக் கொண்ட அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் செப்டம்பர் 2 அன்று வெளியிடப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. “இக்குழு அமைக்கப்பட்டதே ஒரு கண்துடைப்பு” என்று கூறி அவர் அதில் இணைய மறுத்துவிட்டார்.

ஊடகங்கள் அனைத்திலும், சமூக ஊடகங்கள் உட்பட, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாதப் பொருளாக மாறிவிட்டது. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை கொண்டு வர வேண்டும்; ஆனால் அனைவரிடமும் ஆலோசித்த பின்னர் கொண்டு வர வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” குறித்தான செய்திகள் மங்கி விட்டன.

முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.


படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்


“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை செப்டம்பர் 18 அன்று துவங்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வரப் போகிறார்களா என்பதைத்தான் தற்போது நாம் ஆராய வேண்டியுள்ளது.

முதலில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்த என்னென்ன சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம். பிறகு அதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வோம்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை கொண்டுவரப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இல் திருத்தங்களை மேற்கொள்வது பாசிச பா.ஜ.க அரசுக்கு எளிதானது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் சட்டத்திருத்த மசோதாவைப் போல், இச்சட்டத்தையும் திருத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி விடலாம். ஏனெனில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தைத் திருத்த சாதாரண பெரும்பான்மை (Simple Majority) போதுமானது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதை பாசிச பா.ஜ.க அரசால் இரு அவைகளிலும் பெற்று விட முடியும்.

ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாசிச பாஜக அரசால் அவ்வாறு திருத்த முடியாது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்திற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தது ஐந்து சரத்துகளிலாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்; அதாவது, சரத்துகள் 83, 85, 172, 174, 356 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ள, சரத்து 368-இன்படி, சிறப்பு பெரும்பான்மை (Special Majority) தேவைப்படும். அதாவது நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்; மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதால் 50 சதவிகிதத்திற்கும் மேற்ப்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஆதரவும் தேவைப்படும்.

பாசிச பா.ஜ.க அரசால் அடிவருடிகள் சிலரின் ஆதரவைப் பெற்று மக்களவையில் சிறப்பு பெரும்பான்மையை பெற்றுவிட முடியும். ஆனால் மாநிலங்களவையில் சிறப்பு பெரும்பான்மையை பெற முடியுமா என்பதைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 80-இன்படி மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் வரை (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 238, நியமிக்கப்பட்டவர்கள் 12) இருக்கலாம். தற்போதைய நிலவரப்படி, மாநிலங்களவையின் மொத்த பலம் என்பது 245-ஆக (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 233, நியமிக்கப்பட்டவர்கள் 12) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 7 இருக்கைகள் காலியாக இருப்பதால், மாநிலங்களவையின் தற்போதைய பலம் என்பது 238-ஆக உள்ளது.

சுருக்கமாக கூற வேண்டுமெனில், மாநிலங்களவையில் பாசிச பா.ஜ.க அரசு சிறப்பு பெரும்பான்மை பெற வேண்டுமெனில் 159 வாக்குகளைப் (238-இல் மூன்றில் இரண்டு பங்கு) பெற வேண்டும். ஆனால், அதற்கான சாத்தியம் தற்போது இல்லை என்பதே எதார்த்த நிலை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மொத்த மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 97-ஆக உள்ளது (சுயேச்சை எம்.பி-யான கபில் சிபிலையும் சேர்த்து). சிவசேனா கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரே பக்கம் உள்ளதால் அவர்களையும் இந்தியா கூட்டணியின் கணக்கில் சேர்த்துள்ளோம்.

இந்த 97 உறுப்பினர்களைத் தவிர, மீதமுள்ள அனைத்து உறுப்பினர்களும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தால் கூட அதிகபட்சமாக 141 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே அவர்களால் பெற முடியும். இதில் தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக், ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பா.ஜ.க-வை ஆதரிக்கவில்லை என்றால் 141 என்ற இந்த எண்ணிக்கையும் சரியும்.

கடந்த ஆகஸ்ட் 7 அன்று, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அதிகாரத்தை குறுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட டெல்லி சேவைகள் சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் நடத்தப்பட்டது. அதில் அம்மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. பா.ஜ.க-வால் சாதாரண பெரும்பான்மையை பெற்று அம்மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.

ஆனால் நாம் இங்கு கூற வருவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான சிறப்பு பெரும்பான்மையான 159 என்பதை பா.ஜ.க-வால் பெறமுடியாது என்பதைத்தான். ஏனெனில், 102 உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதுதான் சமீபத்திய நிலவரம்.


படிக்க: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !


மேலும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது குறித்து பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க தற்சமயம் ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் பொதுத் தளங்களில் வைத்து விவாதிக்கப்படும். அது நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படும். இதில் பதட்டப்படுவதற்கு ஏதுமில்லை” என்று கூறினார்.

ஒரு பா.ஜ.க அமைச்சர் பேசியதை வைத்து மட்டும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” தற்போது கொண்டுவரப்பட மாட்டாது என்று நாம் கூறவில்லை. பாசிச பா.ஜ.க தற்போது கையாண்டுள்ள வழிமுறையை வைத்துத் தான் இதைக் கூறுகிறோம். பாசிஸ்டுகளின் வழிமுறை எப்படி இருக்கும் என்பதற்கு காஷ்மீர் துண்டாடப்பட்டது தான் சான்று.

2019-ஆம் ஆண்டில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, மாநிலங்களவையில் கூடியிருந்த எதிர்க்கட்சியினர் யாருக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கப் போவதே தெரியாது. குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ச்சி நிரல் குறித்து அறிவிக்க வேண்டும் என்பது அவையின் விதி. ஆனால், அவை கூடிய பின்புதான் காஷ்மீர் துண்டாடப்படப் போகிறது என்பது நிகழ்ச்சி நிரலில் உள்ளதென்பதே கூடியுள்ள உறுப்பினர்களுக்குத் தெரியவந்தது. அப்போது மாநிலங்களவைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் அனுமதியைப் பெற்று காஷ்மீரை துண்டாடுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னரே அறிவிக்காவிட்டாலும் கூட, அவைத்தலைவர் அனுமதித்தால் எந்த ஒரு மசோதாவையும் தாக்கல் செய்யலாம் என்பதுவும் அவையின் விதிதான். காஷ்மீரை துண்டாடுவது குறித்து படித்து விவாதிக்க ஒன்றரை மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. என்னவொரு ஜனநாயகம்!

மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்கையை பெறுவது கடினம் என்ற நிலையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய பாசிச பா.ஜ.க அரசு கையாண்ட வழிமுறை இதுதான். பாசிஸ்டுகளுக்கே உரித்தான வழிமுறை இது!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேவையான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மேற்கொள்வதற்கான வலிமையை மட்டும் பாசிச பா.ஜ.க அரசு பெற்றிருந்தால், இந்நேரம் அதை அமல்படுத்தி இருக்கும். காஷ்மீரை துண்டாட கையாண்ட அதே வழி முறையைத் தற்போதும் கையாண்டு எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பார்களே தவிர, உயர்நிலைக்குழு அமைத்திருக்க மாட்டார்கள்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று தற்போது விவாதத்தை கிளப்பி விட்டிருப்பது முழுக்க முழுக்க எதிர்க்கட்சியினருக்கு பூச்சாண்டி காட்டுவதற்குத்தான். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி பயங்கரவாத கும்பலின் நிகழ்ச்சி நிரலில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் உள்ளது. ஆனால், நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. மேலும், அத்திட்டத்தைத் தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியமும் இல்லை என்பதுவும் அவர்களுக்குத் தெரியும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க