உத்தரப் பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் விவி (Salempur Vivi) கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்த். ராம்லீலா நடைபெற்ற இடத்தில் நாற்காலியில் அமர்ந்ததற்காகப் போலீசால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் சந்தின் மனைவி ராம் ரதி ,“எனது கணவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) இரவு 9 மணிக்கு அருகாமையில் நடைபெற்ற ராம்லீலாவிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த காலியான நாற்காலியில் உட்கார்ந்துள்ளார். ஒரு தலித் நபர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரண்டு கான்ஸ்டபிள்களை கூப்பிட்டு ‘இவனை வெளியே தூக்கி எறியுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.
உடனே இரண்டு கான்ஸ்டபில்கள் அவரின் கழுத்திலிருந்த கம்சாவை இழுத்து கீழே தள்ளி கால்களால் உதைத்து சாதிய சொற்களில் திட்டி கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
பின்னர் அழுதுகொண்டே அங்கே இருந்தவர்களிடம் ‘நான் என்ன தவறு செய்தேன்? என்னை எதற்கு அடிக்கிறார்கள்?’ என்று கேட்டதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. பின்னர் வேகமாக வீட்டிற்கு வந்து என்னிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்ற அவர் திங்கள்கிழமை (அக்டோபர் 7) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை சாதிவெறியில் தாக்கிய கான்ஸ்டபிள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
படிக்க: உத்தரப்பிரதேசம்: பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம்
ஆனால், போலீஸ் அதிகாரிகள் “அந்த நபர் குடிபோதையில் ராம்லீலா மேடையின் மீது ஏறி அமர்ந்திருந்தார். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பார்வையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கான்ஸ்டபிள்களின் உதவியுடன் நாற்காலியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் வீட்டிற்குப் பத்திரமாகச் சென்று காலை 6 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்று கான்ஸ்டபில்களின் சாதிவெறி தாக்குதலை நியாயப்படுத்திப் பேசியுள்ளனர்.
எனவே திங்களன்று ரமேஷ் சந்த் மீது சாதிவெறி தாக்குதல் நடத்தி அவரை தற்கொலைக்குத் தள்ளிய கான்ஸ்டபில்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தினரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவி கும்பலானது அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது இந்துக்கள் அனைவருக்குமான கோவில் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ரமேஷ் சந்த் இராமாயண நாடகத்தைக் காண கோவில் வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார் என்பதற்காக அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram