மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு,  நாக்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவருகிறார்,  பேராசிரியர் சாய்பாபா.  கடந்த ஒரு மாத காலமாக தனக்கு படிப்பதற்கான நூல்கள், பத்திரிகைகள், மருந்து மாத்திரைகள்,  மற்றும் உடைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக வரும் அக்டோபர் 21 லிருந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க  முடிவு எடுத்துள்ளார்.

இந்து பத்திரிகையின் ஒரு  செய்தி அறிக்கையின் படி, சாய்பாபாவின் மனைவி ஏ. எஸ் வசந்த குமாரி தனது கணவருக்கு படிப்பதற்கான புத்தகங்கள், செய்திதாள்கள், மருந்து மாத்திரைகள், உடைகள் முதலியவை மறுக்கப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

“2014-லிருந்து சிறை வைக்கப்பட்டுள்ள சாய்பாபாவிற்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக என்னிடமிருந்து அனுப்பப்படும் கடிதமோ, தொலைபேசி அழைப்புக்களோ அவருக்கு கொடுக்கப்படுவதில்லை” என்கிறார் அவர்.

படிக்க :
♦ டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?
♦ தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !

சிறையில் அவர் சந்திக்கிற அவருடைய இயலாமை, அவருக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் அவர் மீது விதிக்கப்படும் நியாயமற்ற கட்டுபாடுகள்  குறித்து மகாராட்டிர சிறைத்துறையின்  கூடுதல் இயக்குனர் சுனில் ராமானந்திற்கும் சிறைத்துறை கண்காணிப்பாளர் அனுப்குமார் கும்ரே அவர்களுக்கும்  பல கடிதங்கள் அனுப்பியிருக்கிறார், வசந்த குமாரி.

“சிலநேரங்களில் அவருடைய வழக்கறிஞர்களால் அவருக்கு வழங்கப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் நாக்பூர் சிறை நிர்வாகம் அவருக்கு வழங்குவதில்லை. அவர் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்.  அவரது உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை அவருக்கு அன்றாடம் கொடுக்கவேண்டிய அவசியம் உள்ளது” என்று தி டெலிகிராப் பத்திரிகையிடம் வசந்த குமாரி தெரிவித்துள்ளார்.

அன்றாடம் மருந்து மாத்திரைகளையும் உடைகளையும்  சாய்பாபாவுக்கு வழங்கிவருகிற வழக்கறிஞர் ஆகாஷ் சரோட், கடந்த மாதம் அவருக்கு ஒரு சட்டை, உள்ளாடைகள், மாத்திரைகள், நான்கு புத்தகங்கள் மற்றும் இரு நோட்டுகள் ஆகியவற்றை  கொடுக்க சென்றதாக கூறினார். . “எனினும் அவற்றில் ஒன்றை கூட சிறை அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை.  இதற்கு அவர்கள் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. மீண்டும் இரு வாரம் கழித்து அவற்றை கொடுக்க சென்றேன்.  மீண்டும் அவற்றை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அக்டோபர் 21-ற்கு முன்பாக ஒருமுறை மீண்டும் முயற்சிப்பேன்,” என்கிறார், சரோட்

சிறை கண்காணிப்பாளர் கும்ரே,  தி இந்துவின்  செய்தி அறிக்கையின் அந்த  “அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை’’ மறுத்த போதிலும் அக்டோபர் 21 அன்றிலிருந்து சாய்பாபா உண்ணா நிலை போராட்டத்தை தொடங்க உள்ளார் என்பதை உறுதிபடுத்தினார். “கொரானா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து செய்தி தாள்களை சிறைக்குள்ளே எடுத்து கொள்வதை நிறுத்தியிருக்கிறோம். மற்றபடி சொல்லப்படுகிற அந்த புத்தகம் மற்றும் கடிதங்களை நாங்கள் படித்த பின்னர் அவரிடம் ஒப்படைத்து வருகிறோம். அவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ன தேவை எது உரிமை என்பதை பொறுத்து தீர்மானித்து செய்கிறோம்,” என்கிறார்.

பேராசிரியர் சாய்பாபா அவரது மனைவியுடன்

எது “உரிமை” என்று தெளிவுபடுத்திய கும்ரே, (எஸ்.பி., கூடுதல் எஸ்.பி, மற்றொரு சிறை அதிகாரி உள்ளிட்ட) நிர்வாகம் அவருக்கு கொடுக்கப்படும் புத்தகங்கள் “நல்லவைதானா” என்பதைச் சரிபார்க்கும். மேலும் இதுகுறித்து கூறும் அவர், காந்தி, சுதந்திர போராட்ட வீரர்கள், புராணங்கள் பற்றிய புத்தகங்களை வழக்கமாக அனுமதிக்கிறோம். “சிறைவாசிகளுக்கு ஒரு பத்திரிகையோ அல்லது படிப்பதற்கான மற்றவைகளோ “சரியானதாக” இருக்க வேண்டியிருக்கிறது. உடைகளை பொறுத்தவரை கொரானா காரணமாக வெளியிலிருந்து வரும் உடைகள் கொரானாவை பரப்புவதால் அவற்றை அனுமதிப்பதை நிறுத்தியுள்ளோம்,” என்றார்.

சிறைத்துறை ஏடிஜி நாக்பூர் சுனில் ராம்னாத் கூறுகையில், ” நாக்பூர் சிறையை ஆய்ந்தறிய நாளை டி.ஐ.ஜி போகிறார்” என்றார்.

மார்ச் 2017-ல் மகாராட்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தின் அமர்வு நீதிமன்றம் சாய்பாபாவுக்கும்  ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு டெல்லி ஜவகர்லால் பல்கலை கழக மாணவன் உள்ளிட்ட மற்ற  நான்கு பேருக்கும் மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருப்பதாகவும் ”இந்தியாவிற்கு எதிரான போரில்” ஈடுபட்டதற்காக தண்டனை வழங்கியது.

அந்த நீதிமன்றம் சாய்பாபாவையும் மற்றவர்களையும் கடுமையான ஊபா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.

உடல்நலக் குறைவால் துன்புறும் சமூக செயற்பாட்டாளர் சாய்பாபா,  மருத்துவ காரணங்களை கூறியும், அதே போல் ஹைதராபாத்தில் புற்றுநோயால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற தன் தாயை பார்க்கவேண்டும் என்றும் கூறி சமீபத்தில்  பிணை வழங்க கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அவருடைய தாயார் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் மும்பை  உயர்நீதி மன்றத்தில் அந்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தி வயர் 
தமிழாக்கம் : முத்துகுமார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க