“உறவு கொஞ்சம் புதிதாகவே இருக்கிறது. தறியில் கோர்த்த நூலினைப்போல, இன்னும் பிணைந்து கொண்டிருக்கிறது. நாம் அதை அன்பாலும் ஒருமித்த மனதாலும் வலுவாக்குவோம். நாம் அனைவரும் சேர்ந்து அந்த உறவினைப் பின்னுவோம். அன்பின் பிணைப்பினால், நாம் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைப்போம். வலுவான பிணைப்போடு அவற்றை ஒன்று சேர்ப்போம்..” என்று பின்னணி குரல் ஒலிக்க கர்ப்பிணியாக இருக்கும் தனது இந்து மருமகளை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறார் ஒரு முஸ்லீம் பெண்.

”அம்மா, இது உங்கள் வீட்டின் வழக்கம் இல்லையே!” என்கிறார் அந்த பெண். அதற்கு அந்த முஸ்லீம் பெண், ”ஆனால், தன் மகளை சந்தோஷமாக வைத்திருப்பது எல்லா வீட்டின் வழக்கம்தானே?” என்று கேட்கிறார். இப்படி இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கச் செய்கிறது டாடா குழுமத்துக்கு சொந்தமான தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம்.

அந்த விளம்பரம், காலங்காலமாக சாதாரண மக்களிடையே நிலவிவரும் இந்து முசுலீம் ஒற்றுமை குறித்து நமக்கு நினைவூட்டுகிறது. அந்தக் குடும்பத்தின் மகிழ்வோடு நம்மை ஐக்கியமாக்குகிறது அந்த விளம்பரம். ஆனால் இந்துத்துவ வெறி நிரம்பி வழியும் சங்கபரிவாரக் கும்பலின் மூளை இதை எப்படி சிந்திக்கும்? இவ்விளம்பரம் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாகவும் கொக்கரிக்கிறது சங்கிகளின் மூளை. தனிஷ்க் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிப்போம் என்று டிவிட்டரில் கூச்சலிடுகின்றனர் சங்கிகள்.

படிக்க:
♦ ஒரு சங்கியின் கேவலமான செயல் !
♦ சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்

மோடியின் குஜராத்தில், ஒரு கும்பல் கட்ச் மாவட்டத்திலுள்ள தனிஷ்க் கடையில் புகுந்து அட்டூழியம் செய்திருக்கிறது. இவ்விளம்பரத்துக்காக கடையின் கிளை மேலாளர் மன்னிப்புக் கேட்பதாக அந்த கடையின் வாயிலில் அக்கும்பலே எழுதியும் வைத்துள்ளது.

மேலும், தனிஷ்கின் மேலாளரான மன்சூர் கான்தான் இந்த விளம்பரம் வெளிவந்ததற்கு முக்கியமான காரணம் என்ற பொய்யான செய்தியும் சங் பரிவார கும்பலால் பரப்பப்பட்டது. தனது (முஸ்லீம்) பெயருக்காகவே மன்சூர் கான் குறிவைத்து தாக்கப்பட்டார். மன்சூரின் சமூக ஊடக கணக்குகள், அவரது புகைப்படம் மற்றும் தொடர்பு எண் ஆகியவை இந்துத்துவா கும்பலால் பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு பல கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளன.

இப்படிப்பட்ட ரகளைகளைத் தொடர்ந்து, தனிஷ்க் நிறுவனம் விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டு விட்டு அவ்விளம்பரத்தை நீக்கியது. அதில், “இந்த சவாலான காலங்களில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள், சமூகம் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடுவதும், அந்த ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதும்தான் ‘ஏகத்வம்’ எனும் பிரச்சாரத்தின் நோக்கம். ஆனால் இந்த விளம்பரமோ ஏற்றுக்கொண்ட நோக்கத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புண்படுத்தப்பட்ட (இந்துக்களின்) உணர்வுகளுக்கு வருந்துகிறோம். எங்களது பங்குதாரர்கள், கடை ஊழியர்களின் நல்வாழ்வினை கணக்கில் எடுத்துக் கொண்டும் இவ்விளம்பரத்தை நாங்கள் நீக்குகிறோம்” என தெரிவித்துள்ளது.

வலதுசாரி இந்துத்துவ கும்பலின் இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள், மனிதவுரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரத்துக்கு பின்னணி குரல் கொடுத்த நடிகையும் எழுத்தாளருமான திவ்யா தத்தா, “ஆமாம், இந்த விளம்பரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது நான்தான். இந்த விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. இது நீக்கப்பட்டது எனக்கு வேதனையளிக்கிறது” என்ற அவரின் பதிவிற்கு, “உங்களுக்கு எதிராக இதில் எதுவும் இல்லை. இருந்தும் இது தவறான விளம்பரம்” என பதிலளித்தவருக்கு, “ஆமாம் ஐயா, ஆனால் நாம் அனைவரும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டாமா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது இந்தியா. இதில்தான் நமது ஆன்மா அடங்கியுள்ளது” என பதிலளித்துள்ளார் திவ்யா தத்தா.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், “ வருந்தத்தக்க முதுகெலும்பற்ற தன்மை மற்றும் தண்டனை..  சமூக ஊடகத்தில் தினசரி ஏராளமான பெண்களும் (ஆண்களும்) கொலை மிரட்டலையும் அச்சுறுத்தலையும் சந்தித்து, எதிர்கொண்டு வருகின்றனர். அவர்க்ள் அதற்கு எதிராக நிற்கின்றனர். ஆனால் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமோ தன்மீது கட்டவிழ்த்து விடப்படும் ட்ரோல்களை சில நாட்கள்கூட தாக்குபிடிப்பதற்கான தைரியம் (மற்றும் சக்திகளை) ஒன்று சேர்க்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது” என பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் அனுராதா ஷர்மா, “தனிஷ்கின் மேலாளரை அம்பலப்படுத்தி, ட்ரோலுக்கும் பெருவெறுப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கி, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விளம்பரத்தை நீக்கும்படி மிரட்டிய நபரை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவர் பிரதமர் நரேந்திர மோடியால் ட்விட்டரில் பின்தொடரப்படும் நபர்” என்று பதிவிட்டுள்ளார்.

வினீத் ஜெயின் என்பவர், “தனிஷ்க் நேர்மையான மற்றும் அழகான விளம்பரத்தை நீக்கியிருக்கக் கூடாது. வேலையில்லாதவர்கள், மூளையில்லாதவர்கள் பரப்பும் ட்ரோல்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும், அவதூறு மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை கைது செய்யவேண்டும். சமூக ஊடகங்களுக்கான தனிச் சட்டங்கள் அவசியமானது” என்கிறார்.

மன்மோகன் சிங் பகுஜா, “தனிஷ்க் விளம்பரம் போன்று, நீங்கள் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பீர்களேயானால், சங் படை உங்களை தாக்கும். ‘ஒற்றுமையை ஊக்குவிக்காதே, பிளவுப்பட்டே இரு’ என்பதையே இது தெளிவுப்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

சரங் என்பவர், “நான் நிச்சயமாக சொல்கிறேன். இது ஒன்றும் நகை விளம்பரம் அல்ல” என ஒரு முஸ்லீம் தம்பதியினர் தனது குழந்தைக்கு கிருஷ்ணன் வேடமணித்து அழைத்து போகும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது இந்துத்துவா கும்பல் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பிவருவது இது முதல்முறையல்ல. மோடி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்னர் தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. சாதி ஒழிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரீ ரோஸஸ் விளம்பரத்திற்கு பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்தது. அதே போல, மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட சர்ஃப் எக்ஸல் விளம்பரத்தையும் சங் பரிவாரக் கும்பல் கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் அந்நிறுவனம் பின்வாங்காமல் உறுதியாக நின்றது. இதனைப் பலரும் கொண்டாடினர்.

தற்போது சங்கபரிவாரக் கும்பல் எதிர்த்து நிற்கும் டானிஷ்க் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாட்டா நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடையாக சுமார் 800 கோடி ரூபாய் படியளந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மத அரசியல் செய்வது அவசியப்படும் சூழலில், டாட்டா-வாவது நன்கொடையாவது என்பதுதான் சங்கிகளின் நடைமுறை.

வரலாற்றுரீதியாகவே, தனது சனாதனக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையிலேயே, முசுலீம்கள் மீதான இந்துக்களின் வெறுப்பை தனி செயல்திட்டமாக வைத்து திட்டமிட்டு பரப்பிவருகிறது. இந்து முசுலீம் மக்களிடையே இயல்பாக இருக்கும் ஒற்றுமையுணர்வை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் சமயத்தில் இந்து முசுலீமுக்கு இடையிலான மகிழ்ச்சிகரமான குடும்ப உறவை உயர்த்திக் காட்டினால், சங்கிகளுக்கு கோபம் வராதா என்ன ?


ஷர்மி

 

3 மறுமொழிகள்

  1. முன்பு உங்கள் மேடையில் தாேன்றிய பழ கருப்பையா இப்ப தந்தி டிவியில் ரஜினிய வரலாற்றுக் கடமை ஆற்ற அழைக்கிறாரே…. எப்படி உங்கள நம்பறது.

  2. மாற்று மதத்தினர் மதம் மாற சொல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் மாண்பு இசுலாத்தில் உள்ளது . ஆனால் இந்து கோவில்களில் மதம் மாறாமல் திருமணத்தை பதிவு செய்துவிட கூட முடியாது . திருமணத்திற்கு வரும் யாரும் , பெண் எப்போ மதம் மாறுவாள் ? மாரியாச்சா இல்லையா என்பதே கேள்வியாக இருக்கும் . இப்படிப்பட்ட நிலையில் இசுலாத்தின் உயர்ந்த மாண்பை பார்த்து வெட்கிய காவிகள் கதறுகிறார்கள் என்பதே உண்மை .

    சிறப்பான தெளிவான கட்டுரையை வெளியிட்ட வினவுவை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை . தமிழர்களை காவிகள் ஏமாற்ற முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க