டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைந்த ஏ.பி.வி.பி கயவர்கள் – மாணவர்கள் போராட்டம்

இந்துத்துவா விஷமக் கருத்துகளை பரப்பி, அதன் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்ற ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்.

ஜூலை 4 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைந்து மாணவர் மத்தியில் விஷமக் கருத்துகளை பரப்ப முயன்ற ஏ.பி.வி.பி (ABVP) கயவர்களை கைது செய்யக்கோரி சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை தரமணி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்குள்  இந்துத்துவா விஷமக் கருத்துகளை பரப்பி, அதன் மூலம் கலவரத்தை உண்டாக்க ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் சேர்ந்த இரண்டு கயவர்கள் உள்ளேப் புகுந்து மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசிவந்தனர். கேட்கச் சென்ற மாணவர்களில் ஒருவரை அந்த ஏ.பி.வி.பி  கயவர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது சமூக ஊடங்களில் விவாதமாகியுள்ளது

அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்ததற்காகவும், மாணவர்களிடம் விஷமக் கருத்துகளை பரப்பியதற்காகவும் ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் கயவர்களை தரமணி J-13 போலீசை வரவைத்து அவர்களிடம் ஒப்படைப்பதாக கல்லூரி நிர்வாகம் கூறியிருந்ததை அறிய முடிகிறது. ஆனால், புகார் ஏதும் தராமல் வெறுமனே போலீசை வரவைத்து ஏ.பி.வி.பி  கயவர்களை பத்திரப்படுத்த நிர்வாகம் செயல்படுவதை மாணவர்கள் அறிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகம் தரப்பில் கண்துடைப்பிற்காக மட்டும்  மாணவர்களை அழைத்துப்பேசி கமிட்டி அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அனைத்து ஆதாரங்கள் இருந்தும், கயவர்கள் கையும் களவுமாக சிக்கியும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்கியுள்ளது தெரியவருகிறது.


படிக்க: நீட்டுக்கு எதிராக நாடு முழுவதும் பற்றிப்படரும் மாணவர் போராட்டங்கள்!


எனவே, மதியம் 2:30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மாணவர்கள் போராட்டம் தொடர்ந்துள்ளது. அதன் பிறகு ஏ.பி.வி.பி  கயவர்களை பல்கலைக்கழக மகிழுந்தில் ஏற்றி போலீசு பாதுகாப்போடு எங்கோ பத்திரப்படுத்த முயன்றுள்ளார்கள். மாணவர்கள் வாகனத்தை மறித்துப் போராடியுள்ளார்கள்.

அதன்பிறகு பல்கலைக்கழகத் துணைவேந்தர் வந்து, அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மூலம் விசாரித்து 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாளித்துள்ளார். அதையும்மீறி வாகனத்தை வழிமறித்துப் போராடிய மாணவர்களை போலீசைக் கொண்டு அடக்கி ஏ.பி.வி.பி  கயவர்களை பல்கலைக்கழக மகிழுந்திலேயே ஏற்றிக்கொண்டு எங்கோ பத்திரப்படுத்தியிருக்கிறார்கள். சன் டிவி, பாலிமர் டிவி மற்றும் பேரலை (வலையொளி) ஆகிய ஊடகங்கள் இவற்றை பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு போலீசு ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விரைந்து அந்தக் கயவர்களை திமுக அரசு கைதுசெய்ய வேண்டும் என்பது சீர்மிகு சட்டப்பள்ளி (SOEL) மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமோ சங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யாமல், “இனிமேல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சீர்மிகு சட்டப் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்ற அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களை அச்சுறுத்தியுள்ளது.


ராஜா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க