24.08.2024

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த
மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

மாணவர் போராட்டத்தை ஒடுக்கி பல்கலைக்கழகத்தை
ஒழித்துக்கட்ட துடிக்கும் பாசிச கும்பல்!

டந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதியிலிருந்து 13 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கம் முன்னெடுத்து வந்தது. இந்தப் போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

ஜே.என்.யூ-விற்கான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மறுசீரமைக்க வேண்டும்; மாணவர்களுக்கான தங்கும் விடுதியான பராக் விடுதியை திறக்க வேண்டும்; பல்கலைக்கழகத்தின் முக்கிய சொத்துக்களை அரசு – தனியார் கூட்டு என்ற அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கும் செயலை உடனே நிறுத்த வேண்டும்; எம்.சி.எம் உதவி (ஸ்காலர்ஷிப்) தொகையை ரூ.5000-யாக உயர்த்தி வழங்க வேண்டும்; மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு குழு அமைக்க வேண்டும்; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்தது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையான மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர்.

இது பி.ஜே.பி-யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கும்பலுக்கு விழுந்த சவுக்கடி. இந்த ஏ.பி.வி.பி கும்பல் இது ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகத்திற்கான போராட்டம் அல்ல என அறிவித்து மாணவர்களுக்கு எதிராக சதி வேலைகளை செய்து வந்தது. இது பல்கலைக்கழக மாணவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பாசிச கும்பல் மாணவர்களுக்கு எதிரான துரோக கும்பல் என பகிரங்கமாக அம்பலப்பட்டுப்போனது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட் (ஆர்.எஸ்.எஸ் சங்கி) பேச்சு வார்த்தை என்ற போர்வையில் மாணவர் போராட்டத்தை ஒழித்துக்கட்டும் சதி வேலையில் ஈடுபட்டார்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதுவரை மூன்று மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டங்களை முன்னெடுத்து மாணவர் உரிமையை நிலைநாட்டுவோம் என்ற வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து உறுதியாக இருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில்தான், ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு. அவர்களின் நிலையை வெளியில் சொல்லாமல் தொடர்ந்து அடக்குமுறையை ஏவி வருகிறது. போலிசுத்துறையின் இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவர் உரிமைகளுக்காக போராடும் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தொடர் உண்ணவிரதப் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். மேலும், மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தை விடாப்பிடியாக முன்னெடுக்கும் ஜே.என்.யூ மாணவர் சங்கத்தினரின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • ஜே.என்.யூ நிர்வாகமே, மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்து!
  • மாணவர்களே, ஜே.என்.யூ மாணவர் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
  • உயர்கல்வித் துறையில் மாணவர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!


மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க