மோடியின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் போலீசு, இராணுவம், நீதிமன்றம், கல்வி, மருத்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் நிறுவனங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி வருகிறார்கள். அதில் முக்கியமாக நாட்டிற்கான தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்களை பாசிஸ்டுகள் கைப்பற்றும் அபாயகரமான போக்கு உருவாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை துணைவேந்தர்களாக, பேராசிரியர்களாக, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களாக நியமிப்பதன் மூலமும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர் படையை வளர்த்துவிடுவதன் மூலமும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை பாசிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மைக்காலமாக, புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடந்துவரும் நிகழ்வுகள் பல்கலைக்கழகங்கள் எப்படி காவிகளின் கூடாரங்களாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஜே.என்.யு. மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல்!
கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் “மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் முறையான நடத்தை விதிகள்” (Rules of discipline and proper conduct of students) என்ற தலைப்பில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டது. அதில் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் தர்ணா, உண்ணாவிரதம் மற்றும் குழுவாக சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, வளாகங்களின் நுழைவாயில்களை முற்றுகையிடுவது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் விடுதி அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஓராண்டுக்கு வெளியேற்றப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘தேசத்திற்கு எதிரான கருத்துகள்’ மற்றும் சாதி, மத வன்முறைகளைத் தூண்டும் கருத்துகளைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தாலும் சுவரொட்டிகளை ஒட்டினாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகம் செயல்படுவதற்கு இடையூறு அளிக்கும் விதமான எந்த செயலும் தண்டனைக்குறியதாகவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே தண்டனை குறித்த இறுதி முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்
போராடுகின்ற மாணவர்களை அச்சுறுத்துவதற்காக, அபராதம் செலுத்தாத வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தண்டனைகளின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் வலைதளப்பக்கத்தில் பதிவேற்றப்படுவதோடு, பெற்றோருக்கும் தெரிவிக்கப்படும் எனவும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக சேரும் மாணவர்கள் அரசியல் பேசும் மாணவர்களிடம் அறிமுகமாகிவிடக்கூடாது என்பதற்காகவே அனுமதி இல்லாமல் வரவேற்பு நிகழ்ச்சி (Fresher’s party) நடத்த தடை விதித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
பல்கலைக்கழக நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய விதிகள் ஏதோ மாணவர்களை நன்னெறிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதல்ல. அப்படியிருந்தால் ராமநவமி போன்ற இந்து பண்டிகைகளில் விடுதிகளில் புகுந்து மாணவர்களை தாக்குவது; பெரியார், காரல் மார்க்ஸ் படங்களை உடைத்து நாசம் செய்வது, அதனை தடுக்கச்சென்ற மாணவர்களின் மண்டையைப் பிளப்பது; கூட்டங்கள் விவாதங்களை நடத்தவிடாமல் தடுப்பது; போராடும் மாணவர்கள் மீது கல்லெறிந்து தாக்குவது; கல்வி வளாகங்களில் சாதி-மத மோதல்களை ஏற்படுத்துவது போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஏ.பி.வி.பி. குண்டர்களைதான் முதலில் வெளியேற்ற வேண்டும். மாறாக, ஏ.பி.வி.பி-யுடன் கூட்டுசேர்ந்துள்ள ஜே.என்.யு. பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விதிகளை கொண்டுவந்திருப்பது, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மாணவர்களையும் மாணவர் அமைப்புகளையும் ஒடுக்குவதற்காகவே.
பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்(JNUSU), “கையேட்டில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக ஜே.என்.யு-வில் நிலவிவரும் துடிப்பான கலாச்சாரத்தை முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எங்கள் பல்கலைக்கழகத்தின் ஆன்மாவிற்கு அடிப்படையாக உள்ள வெளிப்படையான விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் அறிவுசார் ஆய்வுகளை ஊக்கமிழக்க வைக்கும் வகையில் உள்ளன” என்று விமர்சித்துள்ளது.
உண்மையில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜே.என்.யு-விற்கென்று தனி அடையாளம் உள்ளது. அங்கு நடக்கும் ஊக்கமான விவாதங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொள்வதற்காகவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தில் சென்று சேருவார்கள். உலகில் எந்த மூலையில் மக்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தப்பட்டாலும் அதனை கண்டித்து போராட்டம் நடத்தும் ஜனநாயக சிந்தனையை தன்னகத்தே கொண்டதுதான் ஜே.என்.யு. பல்கலைக்கழகம். ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது.
பெயரில் மட்டும் பெரியார், பல்கலைக்கழகமோ காவிகளின் பிடியில்
“பெரியார் மண்” என திராவிட அமைப்புகள் பெருமையாகப் பேசும் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காவிகளின் பிடியில்தான் உள்ளன. பெரியாரின் பெயரில் உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகமே சங்கப் பரிவாரங்களின் கூடாரமாகவே உள்ளது என்பது வேதனைக்குரியதாகும்.
கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பெரியார் குறித்து நூல் எழுதி வெளியிட்டதாகக்கூறி இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பணிபுரியும் இரா.சுப்ரமணி என்ற இணைப்பேராசிரியருக்கு “தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளது, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்.
பேரா.சுப்ரமணி கடந்த 2022-ஆம் ஆண்டு பெரியாரின் போராட்டங்களைத் தொகுத்து “பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். மேலும் 2007-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட “மெக்காலே” என்ற நூலின் மறுபதிப்பு “மெக்காலே: பழைமைவாதக் கல்வியின் பகைவன்” என்ற பெயரில் இவ்வாண்டு வெளியானது. எப்போதோ எழுதி வெளியிட்ட இந்நூல்களுக்குதான் இப்போது காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.
இந்த குறிப்பாணை அனுப்பியதற்கான உண்மையான காரணம், பேரா.சுப்ரமணி கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு அரசால் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பதுதான். பெரியார் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்குவதில் காவி பாசிஸ்டுகள் தீவிரமாக ஈடுப்பட்டுவரும் சூழலில், முற்போக்காளராகவும் பெரியாரிய சிந்தனையாளராகவும் இருக்கும் இப்பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான சிண்டிகேட் குழுவில் வந்து அமர்ந்திருப்பதை சங்கப் பரிவாரக் கும்பலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, பிற வழிகளில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கும்பல்.
படிக்க: காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!
இப்போது மட்டுமல்ல, பெரியார் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகவே காவி பாசிஸ்டுகள் மேற்கொண்டு வருகின்றனர். உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான தேர்வில் பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை பொதுப்போட்டி பிரிவுக்கு ஒதுக்கியது; பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியது; ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக வரவிருந்த பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்துவரக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியது; முதுநிலை கல்விக்கான வினாத்தாளில் “எது தாழ்ந்த சாதி?” என்று கேள்வி கேட்டது ஆகியவை அதற்கான சான்றுகளாகும்.
தமிழ்நாட்டிற்குள் ஒரு ‘இந்து பனாரஸ் பல்கலைக்கழகம்‘!
தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு மத்தியப் பல்கலைக்கழகமான தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி “தீபோத்சவ்-2023” என்ற பெயரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியின் மேடையில் ஆக்கிரோசமாக வில்லேந்திய காவி நிற இராமன் உருவப்படமும் ஆங்காங்கே “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர்களும் இடம்பெற்றிருந்தது. காவி நிறத்தில் போடப்பட்ட கோலங்களில் அயோத்தி இராமர் கோவிலும் “ஜெய் ஸ்ரீ ராம்” வாசகங்களும் வரையப்பட்டிருந்தன. பார்ப்பனிய முறைப்படி யாகம் வளர்த்து பூஜை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தரும் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்துகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 23 அன்று பல்கலைக்கழக வாயிலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் இந்திய மாணவர் சங்கமும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு எதிர்வினையாக பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தந்தைப் பெரியாரை, “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர்” எனவும் “இந்த மண்ணின் இருண்ட இருள்” எனவும் மிகவும் இழிவாகக் குறிப்பிட்டிருந்தது.
தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி அறிக்கை வெளியிடுவதற்கு ஏ.பி.வி.பி.-க்கு துணிச்சல் கொடுத்தது அப்பல்கலைக்கழக நிர்வாகம்தான். பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசியுடன் ஏ.பி.வி.பி. குண்டர்படை ‘குடியரசுத் தினம்’, ‘சுதந்திரத் தினம்’ ஆகிய நாட்களில் காவிக் கொடியை ஏந்திக்கொண்டு “பாரத் மாதா கி ஜெய்” என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு தைரியமாக உலாவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்கள் அன்றாடம் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மாணவர் அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்
மேற்கூறிய மூன்று பல்கலைக்கழங்களைத் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காவிகளின் பிடியிலேயே உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் நேரடியாக இந்துமதவெறி கருத்துகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் அப்பல்கலைக்கழகத்தில் இந்து ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ்.-யின் செயலாளர் பாரத் பூஷன் அழைக்கப்பட்டிருந்தததை பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள் அம்பலப்படுத்தி விமர்சித்திருந்தனர்.
கேரள பல்கலைக்கழகத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை மீறி நான்கு ஏ.பி.வி.பி. மாணவர்களை செனட் சபைக்கு பரிந்துரைத்தது தற்போது அம்பலப்பட்டு போயுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஆளுநரின் பரிந்துரைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, கேரள உயர்நீதிமன்றம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி போராடிய மாணவர்களை, மிரட்டி இனி போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என கையெழுத்து வாங்க முயற்சித்தது பல்கலைக்கழக நிர்வாகம். இது பொதுவெளியில் அம்பலமாகி எதிர்ப்புகள் கிளம்பவே அம்முயற்சியை கைவிட்டது.
இவ்வாறு நிர்வாகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளை ஊடுருவவிடுவதன் மூலம் புராணக் குப்பைகளை கல்வியில் புகுத்துவது, பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை திரிப்பது, புதிய கல்வி கொள்கை போன்ற கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது, முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர் அமைப்புகளை ஒழித்துக்கட்டுவது, பாசிச மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒழித்துக்கட்டுவது போன்ற வேலைகளை நரித்தனமாக செய்துவருகிறார்கள், காவி பாசிஸ்டுகள்.
இந்த அபாயகரமான போக்கை உடனடியாக அம்பலப்படுத்தி பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அமைப்பாக திரட்டி ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவதற்கு எதிராகவும் ஏ.பி.வி.பி. குண்டர் படையை கல்வி நிறுவனங்களில் தடை செய்யக்கோரியும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். முற்போக்கான பேராசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து காவிக் கும்பலின் பிடியிலிருந்து பல்கலைக்கழகங்களை மீட்க போராட வேண்டும்.
அமீர்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube