சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் மட்டும் தான் பெரியார் இருக்கிறார்; நிர்வாகமோ தங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை சங்கப் பரிவார கும்பல்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. பல்கலைக்கழகப் பணியாளருக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாதது, அரசியல் பேசக்கூடாது என்றும் பட்டமளிப்பின் போது கருப்பு நிற உடை அணியக்கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியது, முதுகலை வினாத்தாளில் எது தாழ்ந்த சாதி என்று வினா கேட்டது, பல்கலைக்கழக வளாகங்களில் சங்கப் பரிவாரத்தினரைக் கொண்டு ‘ஆய்வு’க் கூட்டங்கள் நடத்துவது என தொடர்ந்து காவி மயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.
இதன் நீட்சியாக, “மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்”, “பெரியாரின் போர்க்களங்கள்” ஆகிய நூல்களை வெளியிட்ட இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா. சுப்ரமணி அவர்களுக்கு குறிப்பாணை அனுப்பியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். அந்தக் குறிப்பாணையில், பல்கலைக்கழகத்தின் முன் அனுமதி பெறாமல் நூல்கள் வெளியிட்டதற்காக விளக்கம் கேட்டிருக்கிறது. அரசு பணி செய்யக் கூடிய ஒருவர் கல்வி, அறிவியல், இலக்கியம், பண்பாடு தொடர்பாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அனுமதி பெறத் தேவையில்லை என்பதுதான் விதி. இந்த விதிக்கு முரணாக, சட்ட விரோதமாக பல்கலைக்கழக நிர்வாகம்தான் பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியிருக்கிறது.
இப்பேராசிரியர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதத்தில், இப்பேராசிரியர் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கபட்டது சங்கப்பரிவார கும்பலுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது என்பதை இந்த பழிவாங்கும் நடவடிக்கை நிரூபிக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மெக்காலே என்ற நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு, ”மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்” என்ற பெயரில் இவ்வாண்டு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெரியாரின் போராட்டங்களைத் தொகுத்து, ”பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவ்விரு நூல்கள் மட்டுமின்றி மேலும் ஏழு நூல்களையும் எழுதியுள்ளார்.
தந்தை பெரியாரின் போராட்டங்களை நூலாக ஆவணப்படுத்தியதும், சாதியின் பெயரால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வியுரிமையை மறுத்த பார்ப்பனிய குலக் கல்விக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி முறையை வரலாற்று ஆவணங்களிலிருந்து தொகுத்து எழுதியதுமே காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறையில் உயர்த்திப்பிடிப்பவராக இருந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகளை கண்டிப்பதில் முன்நிற்பவராக இருக்கிறார் பேராசிரியர் முனைவர் இரா. சுப்ரமணி. இக்காரணங்களால்தான், இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெறி கொண்டு அலைகிறது காவிக் கும்பல்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயலை, பேராசிரியருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டை குஜராத் போலவோ, உ.பி போலவோ அணுக முடியாது என்று அனுபவத்தால் உணர்ந்திருக்கின்றனர் காவி பாசிஸ்ட்டுகள். எனவே பாசிச உளவாளியான ஆளுநரின் துணைகொண்டு, தங்களது சித்தாந்தத்திற்கு ஆதரவானவர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது, பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, பல்கலைக்கழக வளாகத்தில் முற்போக்கு செயல்பாடுகளை முடக்குவது என்ற செயல் உத்தியின் ஒரு அங்கமே இது. கடந்த 2019 ஆம் ஆண்டு, சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து, பகவத் கீதையை பாடத்திட்டத்தில் நுழைக்க முயற்சித்ததை இத்தருணத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முற்போக்கு, ஜனநாயகம், மனிதாபிமானம், உண்மை வரலாறு பேசக்கூடிய பேராசிரியர்கள், மாணவர்களை பழிவாங்குவது என்ற வகையில் வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது காவிக் கும்பல். பெரியார் படம் வைத்ததற்காக ஜே.என்.யு-வில் பயிலும் தமிழக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும், பாலஸ்தீனம் குறித்து மாணவர்களிடம் உரையாடியதற்காக பேராசிரியர் ஒருவரை ஹரியானாவில் உள்ள ஜிண்டால் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவிக்கக் கூறியதும் அண்மைச் சான்றுகளாகும்.
எனவே, ‘சமூக நீதி’ பேசும் திராவிட மாடல் அரசு, இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடந்த கால ஊழல் முறைகேடுகள், காவிமயமாக்க நடவடிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருவதை இனியும் தொடருமானால் பல்கலைக்கழகத்தின் பெயரில்கூட பெரியாரை விட்டுவைக்கமாட்டார்கள் காவி பாசிஸ்ட்டுகள்.
வாகைசூடி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube