ப்போது நான் நம்பிக்கையற்றவளாக உணர்கிறேன். அப்படி இருக்கும்போது மற்றவர்களுக்கு நான் எப்படி நீதி வழங்குவேன். எனக்கு இனி வாழ விருப்பமில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் நடை பிணமாக இருக்கிறேன் எனவே கண்ணியமாக சாக அனுமதி கொடுங்கள்”, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு உத்தர பிரதேச பெண் நீதிபதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் இவை.

இந்தக் கடிதம் நம்மில் பலரையும் உலுக்கி எடுத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக அந்த பெண் நீதிபதி பல்வேறு புகார்களை அளித்துள்ளார். ஆனால், கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை எந்த அசைவையும் அவரது புகார் ஏற்படுத்தவில்லை.

உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் பெண் சிவில் நீதிபதிக்கு அதே மாவட்டத்தின் “மாவட்ட நீதிபதி” தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் நீதிபதி “மாவட்ட நீதிபதி வெளிப்படையாக நீதிமன்றத்திலேயே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இரவு வீட்டுக்கு வரச் சொல்கிறார். சக நீதிபதிகளையும் இணைத்துக் கொண்டு வருகிறார்.  திறந்த நீதிமன்றத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டேன். ஒரு குப்பையை விட, பூச்சியை விட  மோசமாக நடத்தப்பட்டேன்” என்று தனக்கு நடந்த கொடுமையை விவரிக்கிறார்.

நமது நாட்டின் பெண்களுக்கு அவர் கூறும் வலி மிகுந்த வார்த்தைகள் இவை: “இந்தியாவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் இதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாலியல் துன்புறுத்தலுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள். போஷ் (POSH – Protection of Women from Sexual Harassment Act) எனப்படும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் சுத்தமான பொய். நீங்கள் புகார் செய்தால், நீங்கள் சித்திரவதை செய்யப்படுவீர்கள். உச்ச நீதிமன்றம் உட்பட எனது குரலை யாரும் கேட்கவில்லை.”

ஆம் நமக்கு புனித மன்றங்களாக கற்பிக்கப்பட்ட நீதிமன்றங்களின் யோக்கியதை இதுதான். கடந்த ஒன்றரை வருடமாக அந்தப் பெண் நீதிபதி நடத்திய போராட்டமே அதற்கு சாட்சி.


படிக்க: ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?


உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வெறும் எட்டு வினாடிகளில் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதை குறிப்பிடுகிறார். ஒரு பெண் நீதிபதிக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண்களின் நிலை  என்ன?

இதே உத்தர பிரதேசம் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மகாராஷ்டிரா என அடுத்தடுத்து இந்தப் பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளால் உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுப்பதற்கு போஸ்கோ, போஷ் உள்ளிட்ட எண்ணிலடங்கா சட்டங்களை கொண்டு  வந்துள்ளதாக இவர்கள் சொல்லிக் கொண்டாலும், எதார்த்தத்தில் குற்றங்கள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்தும் பசுவளைய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் தீவிரமாக வளர்ந்து வருகிறது. காவிக்கும்பலால் கற்பிக்கப்படும் பார்ப்பனிய ’வர்ணாசிரம தர்மம்’ பெண்களை அடிமைகளாகவும் போகப் பொருட்களாகவுமே காட்சிப்படுத்துகிறது.


படிக்க: பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன கூமுட்டை நீதிமன்றம்!


கலாச்சாரத்தை காக்கிறோம் எனும் பெயரில் இவர்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் நாளுக்கு நாள் மிகவும் குரூரமாக வளர்ந்து வருகிறது. குரூரக் கும்பலின் வளர்ச்சி தான் பாலியல் வன்கொடுமையின் வளர்ச்சியாகவும் பரிணமித்து வருகிறது. இந்த குரூரமான பாசிச கும்பலின் பிரதிநிதிகள் சிலர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாகவும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றனர். மனுநீதியை மேற்கோள் காட்டி வழங்கப்படும் தீர்ப்புகள் எல்லாம் இதையே எடுத்துரைக்கின்றன.

சூரிய நெல்லி வழக்கு முதல் பில்கிஸ் பானு வழக்கு  வரை நீதிமன்றங்கள் குற்றவாளிகளை காத்து நிற்கும் ஆணாதிக்க, சாதி, மத  மன்றங்களாக செயல்பட்டு  புனிதம் எல்லாம் ஒன்றுமில்லை என பல்லிளித்து நிற்கிறது. இதன் மற்றொரு தீவிர வெளிப்பாடுதான் தற்போது பெண் நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி.

அந்தப் பெண் நீதிபதி இறுதியாக வலியுறுத்தும் அந்த வார்த்தை ”ஆன்மா அற்று உயிரற்று போகிறேன்;  என்னை கண்ணியமாகச் சாக அனுமதியுங்கள்”. அநீதி நிலை நாட்டப்படும் இந்த நாட்டில் கண்ணியமான சாவு என்பது கூட நிராகரிக்கப்படும் என்பதுதான் எதார்த்தமாக உள்ளது.


ரவி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க