பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன கூமுட்டை நீதிமன்றம்!

இரு தரப்பினரும் தங்கள் ஜாதகத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிய கூமுட்டை நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ‘மங்களிக்’ (அவரது ஜாதகத்தில் மங்கள தோஷம் உள்ளவர்) உள்ளவரா என்பதை ஆராய அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 3 அன்று தடைவிதித்துள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த மே 23 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை அப்பாலியல் வெறியனுக்கே திருமணம் செய்ய கோரிய வழக்கில் நாட்டாமை தீர்வை வழங்க முற்பட்டுள்ளது. அதாவது திருமணத்திற்காக ஜாதக பொருத்தம் பார்க்கும் தரகர் வேலையில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ‘மங்கள தோஷம்’ உள்ளவவரா என்பதை உறுதி செய்ய லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, இரு தரப்பினரும் தங்கள் ஜாதகத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிய கூமுட்டை நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

“லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைத் தலைவர், அப்பெண்ணுக்கு ‘மங்கள தோஷம்’ இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்து மூன்று வாரங்களுக்குள் சீல் வைக்கப்பட்ட கவரின் மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

படிக்க : தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

பாலியல் வெறியன் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளான். ஆனால், அப்பெண் மங்களிக் என்பதால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று நிராகரித்துள்ளான் என்று கூறப்படுகிறது.

அப்பாலியல் வெறியன் நீதிமன்றத்திலேயே அப்பெண் ‘மங்கள தோஷம்’ உள்ளவர் என்பதால் திருமணம் செய்துகொள்ள இயலாது என்று அயோக்கியத்தனமாகக் கூறியுள்ளான். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக்கேட்காமல் அப்பெண்ணுக்குத் தோஷம் இல்லை என்று கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து. ஒருபுறம் ஜாதகம் பார்க்கும் நீதிமன்றம் – மறுபுறம் தோஷம் பார்க்கும் பாலியல் குற்றவாளி, இது என்ன அவலம்? பாலியல் குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து வைக்க ஜாதகம் பார்க்கும் நீதிமன்றத்தின் அயோக்கியத்தனத்தை பற்றி நாம் என்னவென்று சொல்வது.

‘செவ்வாய் தோஷத்தால்’ பாதிக்கப்பட்ட ஒருவர், அதே தோஷத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் மரணம் ஏற்படக்கூடும் என்ற மூடநம்பிக்கையை நீதிமன்றம் வழிமொழிந்திருக்கிறது.

ஜாதக பொருத்தம் பார்க்கும் மூடநம்பிக்கைகள் இந்தியாவில் பல குடும்பங்களில் புழக்கத்தில் இருந்தாலும் நீதிமன்றமே இதை வைத்து பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்ப்பது உலகமே சந்தி சிரிக்க வைக்கும் ஓர் நிகழ்வாகும்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்து, நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி பங்கஜ் மித்தல் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் விடுமுறை பெஞ்ச், ஒரு சிறப்பு அமர்வில், உயர்நீதிமன்ற உத்தரவு “முற்றிலும் பிரச்சினைக்குப் பொருத்தமற்றது” என்று குறிப்பிட்டது.

பிரச்சினைகளை அறிவியல் பூர்வமான அணுகாமல், ஜாதகம் பார்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளைக் கொண்டு ஆராயும் போக்கு இந்தியாவைத் தவிர வேறெங்கும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.


பரிமளா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க