தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள்.

டந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது தி.மு.க அரசு. இச்சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சட்டமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி விவாதமே இல்லாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் சில வினாடிகளில் மசோதாவினை நிறைவேற்றியது தி.மு.க.

வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, த.வா.க உள்ளிட்டு தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் இம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனக் கண்டனக் குரல் எழுப்பியதாலும், மசோதாவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாலும், வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதாலும் வேறுவழியின்றி இம்மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

நிச்சயம் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்துதான், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. வழக்கமாக எல்லா சட்டமன்றக் கூட்டங்களிலும் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், அன்று மட்டும் பங்கேற்காமல் தவிர்த்தார். ஆனால், தி.மு.க. எதிர்பார்த்ததைவிட எதிர்ப்புகள் மிகக் கடுமையாக இருந்தது. திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளிடமிருந்தும், தி.மு.க.வின் தொழிற்சங்க அமைப்பிடமிருந்தும்கூட இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

தற்போதும் இம்மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறும் எண்ணத்தோடு தி.மு.க. இல்லை; இந்த எதிர்ப்புகளை எல்லாம் எப்படியாவது சரிக்கட்டி, அச்சட்டமசோதாவை அமலாக்கிவிட வேண்டும் என்று கருதுகின்றது. அதனால்தான், இன்றுவரை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை துளியும் பொருட்படுத்தாமல், “வேலைநேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்ததான் அச்சட்டம்”, “தொழிலாளர்கள் விரும்பினால்தான் கூடுதல்நேரம் வேலை செய்யலாம்” என்று கூசாமல் புளுகிவருகின்றனர் தி.மு.க. அமைச்சர்கள். தி.மு.க.வின் கார்ப்பரேட் சேவைக்கு இது தெளிவானதொரு சாட்சியாகும்.

ஒரே மசோதா; மொத்த உரிமைகளும் காவு!

நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி, தன்னுடைய பெரும்பான்மையைப் பயன்படுத்தி அனைத்து மசோதாக்களையுமே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் பா.ஜ.க.வின் நடவடிக்கையை நாம் எப்படி பாசிச நடவடிக்கை என்று வரையறுக்கிறோமா, அதேபோலத்தான் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை தி.மு.க. நிறைவேற்றிய விதத்தையும் வரையறுக்க வேண்டும். ஜனநாயக விரோதமான பாசிசச் சட்டங்கள் இத்தகைய ஜனநாயக விரோதமான வழிமுறைகளில்தான் நிறைவேற்றப்படுகின்றன.

அந்தவகையில், தி.மு.க. கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்த மசோதா தொழிலாளி வர்க்கம் பல ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒருநொடியில் முடிவுக்கு கொண்டுவருவதோடு, தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் பாசிசத் தாக்குதலை சட்டப்பூர்வமாக்குவதும் ஆகும்.

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023 என்பது 1948 தொழிற்சாலை சட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சில விதிகளை தளர்த்திக் கொள்வதாகும். இச்சட்டத்திருத்தத்தின் மூலம் தொழிற்சாலை சட்டம் 1948-இல் உள்ள பிரிவு 65-ன் கீழ் 65ஏ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 65ஏ சட்டப்பிரிவானது, சட்டப்பிரிவுகள் 51, 52, 54, 56, 59 ஆகிய அம்சங்களில் உள்ள விதிகளை தமிழ்நாடு அரசு தளர்த்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகள்தான் தொழிலாளர்களுக்கான பல அடிப்படை உரிமைகளை உத்திரவாதம் செய்கின்றன.


படிக்க: ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!


சான்றாக, எந்த ஒரு பணியாளரும் வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது என்கிறது 51வது பிரிவு; ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை வலியுறுத்துகிறது 52வது பிரிவு; எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்கிறது 54வது பிரிவு; இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட, ஒரு நாளில் பத்தரை மணி நேரத்திற்கு மேல் வேலைநேரம் இருக்கக்கூடாது என்கிறது 56வது பிரிவு; 59வது பிரிவானது, ஒரு தொழிலாளி ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்கிறது.

“நெகிழ்வுத்தன்மை” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் இந்த எல்லா விதிகளையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது தி.மு.க. அரசு.

இதே சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவிலும் நிறைவேற்றியது பா.ஜ.க அரசு. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் இத்தொழிலாளர் விரோத சட்டத்தை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. அரசு.

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக்கும் திட்டம்!

இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்கிறார்.

இதை கேட்க ஏதோ தொழிற்துறை அறிவாளிகள் பேசுவதைப் போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் “தொழிலாளர் உரிமை, தொழிலாளர் நலன் என்றெல்லாம் பேசக்கூடாது. பன்னாட்டு மூலதனம் தமிழ்நாட்டில் பாய வேண்டும் என்று சொன்னால் நீங்களெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக வேலைசெய்ய வேண்டும்” என்பதை ‘நாகரிகமாகச் சொல்கிறார் தென்னரசு.

ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவை தனது முதன்மையான உற்பத்தித் தளமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் நிலையில், அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டில் முதன்மையாக ஈர்த்துக் கொள்வதற்காகத்தான் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனாவை தனது முதன்மை உற்பத்தி நாடாக கொண்ட அமெரிக்க கைப்பேசி நிறுவனமான ஆப்பிள் தற்போது தனது உற்பத்தியை மெல்லமெல்ல இந்தியாவை நோக்கியும் வியட்நாமை நோக்கியும் மாற்றி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது கால் பங்கு உற்பத்தியையாவது இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கோடு ஆப்பிள் நிறுவனம் செயல்பட தொடங்கியுள்ளது. அண்மையில் மும்பையிலும் டெல்லியிலும் இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.


படிக்க: தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!


ஐஃபோன் உதிரி பாகங்களை தயாரிக்கும் முக்கிய நிறுவனமான ஃபாக்ஸ்கானும் இந்தியாவில் மும்முரமாக வேலைசெய்யத் தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் அதன் பணியாளர்களை நான்கு மடங்காக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆறாயிரம் பேர் தங்கக் கூடிய மிகப்பெரிய தொழிலாளர் விடுதி ஒன்றைக்கட்டி வருகிறது. மேலும் கர்நாடகாவிலும் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கவுள்ளது.

இப்படி திடீரென்று ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியின் பெரும் பங்கை இந்தியாவிற்கு மாற்றியுள்ளதற்கு முக்கியக் காரணம் உள்ளது. சில ஆண்டுகளாக சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராகவும் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஒப்பான சீன சமூக ஏகாதிபத்திய அரசின்கீழ் தொழிலாளர்கள் இவ்விதமான போராட்டங்களை நடத்தியுள்ளது மிகப்பெரிய விசயமாகும். அந்த அளவிற்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் லாபவெறிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

இவையன்றி சீன அரசின் பூஜிய விகித கோவிட் கட்டுப்பாட்டு முறைக்கு எதிராக சீனாவில் நடந்த மிகப்பெரிய மக்கள் போராட்டங்களும், அண்மை ஆண்டுகளாக தீவிரமடைந்து வரும் சீன அமெரிக்க முரண்பாடும், ஆப்பிள் நிறுவனம் தனது தொழிலை சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு காரணங்களாக உள்ளன.

ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் லாப வேட்டைக்காக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தெடுப்பதற்கு இந்தியாவிலுள்ள ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக உள்ளன.

சீனாவோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் இளைஞர்கள், எனவே அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்ய இங்கு ஆட்கள் கிடைப்பார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை நீக்கிவிட்டு இன்னும் குறைந்த சம்பளத்திற்கு புது ஆட்களை நியமிக்க முடியும்; பொதிமாட்டைக் காட்டிலும் கொடூரமாக தொழிலாளர்களை வேலை வாங்க முடியும்; தங்களின் வாழ்நிலை காரணமாக தொழிலாளர்களும் அதை ஏற்றுகொள்வார்கள். ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்திக்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இப்படி பல புல்லுருவித்தனமான கரணங்கள் உள்ளன.

இதன்மூலம் தொழிலாளர்கள் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே ஃபாக்ஸ்கானில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டுகொண்டிருக்கும் நிலையில் இச்சட்டத்தின் மூலம் சுரண்டல் மேலும் தீவிரமடையும்.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க வழியில் தி.மு.க!

இத்தகைய சுரண்டலைத்தான் “வளர்ச்சி” என்று மார்த்தட்டுகிறது தி.மு.க. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நோக்கியா வந்தபோதும் இப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிவிட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடியது. அங்கு வேலைபார்த்த பல தொழிலாளர்கள் வேலையிழந்து நிர்கதியாய் நின்றனர்.

இவ்வளவு ஏன்? தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஃபாக்ஸ்கானின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள் பெண் தொழிலாளர்கள். அந்த போராட்டத்தை ஒழித்துகட்டவே மும்முரமாக வேலை பார்த்தது ஃபாக்ஸ்கான். அப்போது ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சாதமாக நடந்துகொண்ட தி.மு.க, இச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆச்சரியமில்லை.


படிக்க: சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!


பா.ஜ.க-வை எதிர்ப்பதில் தி.மு.க. காவி அம்சங்களை குறிப்பிட்ட அளவிற்கு எதிர்க்கும் அளவுக்கு கார்ப்பரேட் அம்சங்களை எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்துத்துவ பாசிசக் கொள்கையில் தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள், பா.ஜ.க.விடமிருந்து வேறுபட்டாலும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் கார்ப்பரேட் சேவையிலும் பா.ஜ.க.வுடன் இக்கட்சிகளுக்கு எந்த பேதமும் இல்லை.

ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கார்ப்பரேட் நலத் திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்தி வருகிறது தி.மு.க. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி கொண்டுவரும் பரந்தூர் விமான நிலையம், நான்குவழி சாலைத் திட்டம், போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கம், சிங்கார சென்னை திட்டம், பாலியப்பட்டு சிப்காட், ஓசூர் உத்தனப்பள்ளி சிப்காட்,  வெவ்வேறு கவர்ச்சிகர பெயர்களில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை என பலவும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட அதே நாளில், நிலத்தோடு சேர்த்து நீர்நிலைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டமசோதாவும் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்துறைத் திட்டங்கள் அமலாகவிருக்கும் 100 ஹெக்டேருக்கு குறையாத நிலத்தில், நீர்நிலைகள் ஏதேனும் இருந்தாலும் அதை அரசின் சிறப்பு அனுமதிபெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இம்மசோதா அனுமதிக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் திட்டங்களுக்கு சட்டப்பூர்வமாக இருந்த சிறு தடையும் கில்லி எறியப்பட்டுள்ளது.

அண்மையில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றில் மதுபானம் பரிமாற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தி.மு.க. அரசு. கடும் எதிர்ப்புக்குப் பிறகு, திருமண மண்டபங்களில் மது பரிமாறுவதற்கு அனுமதி வழங்கும் அரசாணையைத் திரும்பப்பெற்றாலும், வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் சர்வதேச நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று மறுஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் அதிகமாக நிதி பெற்ற பிராந்திய கட்சிகளில் தி.மு.க முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் வெளியான செய்தி, இதனை மெய்ப்பிக்கிறது. பா.ஜ.க-விற்கு ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்றால், தி.மு.க-வுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு. சுருக்கமாகச் சொல்வதெனில் கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க. எவ்வழியோ தி.மு.க-வும் அவ்வழியே பயணிக்கிறது.


துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க