தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!

இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க - அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.

தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க – தி.மு.க இடையே போட்டி!

ந்தியாவிலேயே மே தினத்துக்கு அரசு விடுமுறை அறிவித்த ஆட்சி; மே தினத்தியாகிகள் நினைவாக சென்னையில் “மே தினப் பூங்கா” அமைத்த ஆட்சி என்றெல்லாம் தி.மு.க-வினர் அடிக்கடி பீற்றிக் கொள்வார்கள். ஆனால், கார்ப்பரேட் சேவையில் எந்தக் கட்சி ஆட்சியும் ஒன்றாகவே இருக்கிறது. கட்சிகளது ஆட்சி என்று வெளியில் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்துகின்றனர். முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவே ஆட்சியை நடத்துகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவைச் சொல்லலாம்.

1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை சுருக்கி 4 தொகுப்புகளாக்குவது (Labor Codes) என்கிற தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஏற்கனவே நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டமாக்கி தயார் நிலையில் வைத்துள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்களை உள்ளடக்கிய பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொகுப்பு, 2020-ஐ கடந்த செப்டம்பர் 2020-ல் ஒன்றிய அரசு சட்டமாக்கினாலும் அமலாக்கம் செய்யாமல் தள்ளி வைத்துள்ளது.

சட்டத் தொகுப்பு (code) அமலாக்கம் தாமதமானாலும் கார்ப்பரேட் செவைகள் தடையின்றி நடக்க வேண்டும் என்பதில் அரசு எந்திரம் குறியாக இருக்கிறது. தொழிற்சாலைகள் சட்டம் மத்திய சட்டம் என்கிற போதிலும், பிரிவு 127-ல் மாநில அரசுகளுக்கு சில ‘உரிமைகள்’ வழங்கப்பட்டுள்ளது.

பிரிவு 127-ல் கண்டுள்ள ‘உரிமைகளின்படி’ மாநில அரசானது தனது மாநிலத்துக்குட்பட்ட ஆலை அல்லது ஆலைகளின் குழு (factory or group of factories) ஆகிய எதிலும் மிகை நேரப்பணியை கவனத்தில் கொண்டு வேலைநேரத்தை தளர்த்துதல் (flexible working hours) பணியிடை ஓய்வு நேரத்தை கணக்கில் கொண்டு வேலைநேரத்தை பரவலாக்குதல் (spread-over hours) ஆகியவற்றை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தைத் தான் தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது.

படிக்க : இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ

தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள தொழிற்சாலைகள் சட்டத் திருத்தமானது இச்சட்டத்தின் பிரிவு 51, 52, 54, 55, 56 அல்லது 59 ஆகியவற்றை தளர்த்தி ஒரு தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் குழுக்கள் ஆகியவற்றுக்கு விலக்கு (exemption) அளிக்க வழிவகை செய்துள்ளது.

இந்த விலக்கு எந்தெந்த தொழிற்சாலைகள் அல்லது தொழிற்சாலைகள் குழுவுக்கு எந்தெந்த வகையில் தரப்படும் என்பதை அரசு அடுத்தடுத்த நாட்களில் முடிவு செய்யும். இந்த விலக்கினால் தொழிலாளர்களுக்கும் – குறிப்பாக – பெண் தொழிலாளர்களுக்கு – நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் நன்மை ஏற்படும் என்று வழக்கம் போல் புருடா விட்டுள்ளனர். ஆனால், இந்த சட்டத்திருத்தமானது தளர்வாக்கப்பட்ட வேலைநேரம், பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்கிற பெயரில் 8 மணிநேர உரிமையை முற்றிலும் பறிக்கக் கூடியது. தொழிற்சங்க உரிமையையும், அதன் உடன் பிறந்த கூட்டுப்பேர உரிமையையும் பறிக்கக் கூடியது. நிரந்தர வேலை என்பதையும் பறிக்கக் கூடியது.

தளர்வாக்கப்பட்ட வேலைநேரம் என்பதன் பொருள் ஷிப்ட் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஷிப்ட் நேரத்தில் இடை, இடையே ஓய்வுகள் (இடைவெளி) தரப்பட்டு மீண்டும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என்பதே பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்பதன் பொருள்.

உதாரணமாக, ஒரு கணக்கை பார்க்கலாம். இதில் எண்ணால் குறிப்பிடுவதை வேலைநேரமாகவும், எழுத்தால் குறிப்பிடப்படுவதை இடைவெளி நேரமாகவும் எடுத்துக் கொண்டால்,

3 + மூன்று + 3 + மூன்று + 3 என 12 மணி நேரத்துக்கும்,

4 + இரண்டு + 2 + இரண்டு + 2 என 12 மணி நேரத்துக்கும்

3 + இரண்டு + 3 + இரண்டு + 2 என 12 மணி நேரத்துக்கும்

வேலைநேரத்தை பரவலாக்க (spread over) செய்ய முடியும். இந்த வேலை நேரத்தை உற்பத்திப் பொருளின் தன்மை, சந்தையின் தன்மை, உற்பத்தி அல்லது பணியில் ஈடுபடுவோரின் தன்மை ஆகியவற்றுக்கேற்ப 24 மணிநேரத்துக்கும் மாற்றியமைக்க தளர்த்தப்பட்ட வேலைநேரம் (flexible working hours) கட்டமைக்கப்படும். இது தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக இருக்காது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தையும் (Shops and Establishment Act) உள்ளடக்கிக் கொண்டால், வங்கிகள், இன்சூரன்ஸ், ஐ.டி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (I.T & ITES) ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தக்கூடியது.

காலை 6 முதல் மாலை 6 வரை அல்லது மாலை 6 முதல் காலை 6 வரை; தலா 12 மணிநேரம் ஒரு தொழிலாளியின் வேலைநேரம் நீடிக்கும். இடைப்பட்ட உணவு நேரம், தேநீர் இடைவெளி நேரம் (தலா 15 நிமிடங்கள், இரண்டு முறை) ஆகியவை தொழிலாளியின் சொந்தக்கணக்கில் சேர்க்கப்படும். அதாவது, உணவு நேரம், தேநீர் நேரம் ஆகியவற்றை இடைவெளி நேரக்கணக்கில் சேர்த்து விட்டால் சிந்தாமல், சிதறாமல் எட்டு மணி நேர உழைப்பை முதலாளி அறுவடை செய்து கொள்வான். தினசரி 12 மணி நேரம் ஆலையோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் 8 மணிநேர வேலைக்கு அப்பால் வேலை செய்தால் தரப்பட வேண்டிய மிகைநேரப் பணிக்கான இரட்டிப்பு ஊதியத்தை முதலாளி தர வேண்டியதில்லை. வேலை நேரம் என்று கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம்; வாரத்துக்கு 48 மணிநேரம் என்கிற கணக்கு சரியாகி விடும்.

இந்த இடைவெளி நேரத்தில் நிரந்தரத் தொழிலாளியை உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, காண்டிராக்ட், பயிற்சி மற்றும் நீம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கான சாத்தியமே அதிகம். பகுதிநேர, பீஸ் ரேட் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும் இந்த சட்டத்திருத்தம் கதவைத் திறந்து விட்டுள்ளது.

“வீட்டிலிருந்து பணி” என்கிற நவீனரக சுரண்டல் முறையை கார்ப்பரேட்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் தளர்த்தப்பட்ட, பரவலாக்கப்பட்ட வேலைநேர சட்டத்திருத்தம் தீவிரமாக்கியுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கான நிரந்தரத் தொழிலாளியை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று ஷிப்ட்டுகளையும் ஓட்ட வைக்கும் திட்டத்துக்கான முன்னேற்பாடே இந்த சட்டத் திருத்தம்.

இந்த சட்டத்திருத்தம் மூலம் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கை சொற்பமாகக் குறைவதோடு, தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், தமது பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதும் சாத்தியமற்றதாகிறது. இதன் விளைவாக, தொழிற்சங்க செயல்பாடும், கூட்டுப்பேர உரிமையும் தேவையற்றதாகி விடுகிறது.

இதில், தொழிலாளருக்கு நன்மை கிடைக்குமாம். குறிப்பாக, பெண் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்குமாம். எப்படிப்பட்ட நன்மை கிடைக்கும்? பெண் தொழிலாளர்கள் 3 வகையான ஷிப்ட்டுகளிலும் ஈடுபடுவதற்கு குடும்பப் பராமரிப்பு வேலைகள் தடையாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது, வேலைநிறுத்தம் செய்வது போன்ற ‘இடையூறுகள்’ எதையும் தரமாட்டார்கள். அப்படியே போராட நேர்ந்தாலும்  குடும்பத்தினரே போராட்ட நடவடிக்கைகளை தடுத்து விடுவார்கள்.

இதெல்லாம் முதலாளிகள் தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். பெண் தொழிலாளர்கள் குடும்பப் பராமரிப்புக்கு நேர இடைவெளி கொடுத்தால் நாள் முழுக்க வேலை செய்வது சாத்தியமானது தான் என்பதையும் முதலாளிகள் நன்கறிவர். பெண் தொழிலாளர்களுக்கு இடைவெளி தேவைப்படுகின்ற நேரம் காலை 6-10 மற்றும் மாலை 6-8 என்பதுதான். இந்த கால இடைவெளியில் ஓய்வு கிடைத்துவிட்டால் எந்த தொந்தரவும் இன்றி இரவு 10 மணி வரை வேலை செய்வார்கள்.

இப்படி, இடைவெளி நேரத்தில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மலிவான, தொந்தரவு செய்யாத, அதட்டலுக்கு அடங்கிப்போகும் உழைப்பாளிகள் கிடைத்து விடுவார்கள். சில துறைகள் தவிர, பொதுவில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என தற்போதைய தொழிற்சாலைகள் சட்டம் சொல்வதை அடித்து நொறுக்குகின்றனர். இதுதான் இந்த சட்டத் திருத்தம் பெண் தொழிலாளர்களுக்கு செய்யப்போகும் ‘நன்மை’.

இதில், இன்னொரு உள்குத்தும் இருக்கிறது. திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, திருப்பூர் போன்ற தொழில் மைங்களில் பெண் தொழிலாளர்கள் தங்குமிடத்தை கார்ப்பரேட்டுகள் சொந்த ஏற்பாட்டில் செய்து கொடுக்கின்றனர். சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 60,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கான கட்டுமானத்தை திருப்பெரும்புதூர்-ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டி வருகின்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வந்தது. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெவ்வேறு சைஸ்களில் இது போன்ற தங்குமிடங்களை கட்டி வருகின்றன.

இத்தகைய தங்குமிடங்கள் உற்பத்தி ஸ்தலத்தை ஒட்டியே கட்டப்படுகின்றன. புதிய தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் மூலமாக பரவலாக்கப்பட்ட, இடைவெளிகள் கொண்ட -வேலைநேரம் கொண்ட- ஷிப்ட்டுகள் உருவாக்கப்பட்டால், பெண் தொழிலாளர்கள் இடைவெளி நேரங்களில் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், இடைவெளி நேரம் முடிந்த பிறகு மீண்டும் பணியிடங்களுக்கு அழைத்து செல்லப்படுவதும் சாத்தியமான ஒன்றாகி விடுகிறது. இது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொருந்தக்கூடிய பார்முலா தான்.

ஏற்கனவே சொல்லப்பட்ட பகுதிநேர, பீஸ்ரேட், காண்டிராக்ட், நீம் மற்றும் அவுட்சோர்ஸிங் வேலைமுறை மூலம் தொழிலாளியை தனித்தனியாக பிரித்து வைத்து உற்பத்தியை தீவிரப்படுத்தவே  மேற்படி சட்டத்திருத்தம்.

இதிலும் கூட 21..4.2023 அன்று ஒரு நாடகம் நடந்திருக்கிறது. 12.4.2023 அன்று மசோதா முன்வைக்கப்பட்ட தளர்த்தப்பட்ட, பரவலாக்கப்பட்ட வேலைநேரம் என்கிற முன்மொழிதல் பின்னுக்குத்தள்ளப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் தலா 12 மணிநேரம் வேலை செய்துவிட்டு எஞ்சிய 3 நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்கிறார், அமைச்சர். ஒரு நாளுக்கு 6 முறை சாப்பிட்டுவிட்டு அடுத்த 3 நாட்கள் பட்டினி கிடப்பது என்பதைப் போன்றிருக்கிறது.

12 மணிநேரம் வேலை செய்தால் தொழிலாளிக்கு வருவாய் பெருகும் என்றொரு முத்தான அறிவுரையை சொல்லி இருக்கிறார், அமைச்சர் பெருமகன். இது ஐ.டி ஊழியர்களுக்குத் தான் என்றும் அருளி இருக்கிறார். இதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டால், வேறு பல கேள்விகள் எழுகின்றன.

ஐ.டி துறையிலோ, தொழிற்பூங்காக்களிலோ வேலை செய்யும் எவருக்கும் வீட்டு வாசல்படியில் பணியிடம் இல்லை. குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் பிக்கப் பஸ்சில் சென்றாக வேண்டும். காலை 8 மணி ஷிப்ட்டுக்கு 6 மணிக்கே கிளம்ப வேண்டும். காலை 8 மணிக்கு ஷிப்ட் துவங்கினால் இரவு 8 மணிக்கு முடியும். அதன் பிறகு பிக்கப் பஸ் ஏறினால் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்துவிடலாம். பின்னர் சாப்பிட்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும்.

6 மணிநேரம் கூட தூங்க முடியாது என்கிறபோது குடும்பம் அல்லது சமூகத்துடன் எப்படி உறவாட முடியும்? எந்திரத்தை விட மோசமாக இருக்கிறதல்லவா? அடுத்ததாக கூடுதல் வருவாய் விசயத்துக்கு வருவோம். எந்திரத்தொடு எந்திரமாய் உழைத்து, 40 வயதும்குள் மூட்டுகள் தேய்ந்து, முதுமை அடைந்து சாகச் சொல்கிறார்கள்.

12 மணிநேர வேலை என்பது கட்டாயமல்ல; தொழிலாளி ஒப்புக் கொண்டால் செய்யலாம் என்கிற பம்மாத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஆலையில் தொழிலாளர்கள் வேலைநேரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்துடன் இருக்கிறார்கள்? இதெல்லாம் தொழிலாளர் துறை அதிகாரிகள் அமைச்சருக்கு சொல்லமாட்டார்களா? கார்ப்பரேட்டுகளே அரசை நடத்துகிறார்கள் என்கிறபோது அமைச்சர் பதவி வெற்று தானே?

படிக்க : தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

12 மணிநேர வேலையை நடைமுறைப்படுத்தி அதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் அனுபவத்தை யாரிடம் கேட்டு பெறப்போகின்றனர்? தொழிலாளியிடமா? தொழிற்சங்கத்திடமா? முதலாளிகளிடமா? அப்படி அனுபவத்தை தொகுப்பதற்கான காலக்கெடு என்ன? அனுபவத் தொகுப்புக்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறதா? அனுபவத்தொகுப்பு குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் யாரும் பதில் சொல்லப்போவதில்லை. மாறாக, ஏதாவது சொல்லி 12 மணிநேர வேலையை நம் தலைமீது திணிப்பது மட்டுமே தி.மு.க அரசின் நோக்கமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநில அரசும் இதேத் திட்டத்தை சட்டமாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

44 தொழிலாளர் சட்டங்களை நாடாளுமன்றத்தில் 40 நொடிகளில் ஒழித்துக்கட்டிய மோடி அரசுக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலமாக தொழிற்சாலைகள் சட்டத்திருத்ததை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின் அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஒன்றிய அரசு, மத்திய தொழிற்சங்கங்களுடன் விவாதிக்காமல் தொழிலாளர் உரிமைகளை பறித்ததற்கும், அதே போக்கில் எந்த தொழிற்சங்கத்தின் கருத்தையும் கேட்காமல் தமிழ்நாடு அரசு முடிவெடுத்ததற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஒன்றிய அரசோ, மாநில அரசோ – எந்த அரசானாலும் மக்கள் உரிமையைப் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. அரசுகளின் பார்வையில் கார்ப்பரேட் நலன் தான் முக்கியமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க – அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தமிழ்நாடு. செல் : 7397404242.