வர்ச்சிவாதமும் அடையாள அரசியலும் இந்திய போலி ஜனநாயகத் தேர்தலில் நெடுங்காலமாக ஓட்டுக் கட்சிகளால் புழுத்து நாற வைக்கப்பட்டுள்ளவை; இவற்றை மற்ற பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைக் காட்டிலும் பாசிஸ்டுகளால் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், அதிலுள்ள ஆபத்தையும் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளது அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்கள்.

இத்தேர்தல்களில் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு எதிர்கட்சிகளின் நிலை வேறாக இருந்தது; பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவித்த பின் எதிர்கட்சிகள் நிலை தலைகீழாக மாறியது.

எதிர்கட்சிகளின் சார்பில், குடியரசுத் தலைவருக்கான பொதுவேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைமையில் 22 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஜூலை 15 ஆம் தேதி ஆலோசனை நடத்தின. அதே நாளில் காங்கிரஸுக்கு போட்டியாக எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் மம்தா. அவற்றிலும் எதிர்கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். இப்படியாக, எதிர்கட்சிகள் ‘ஒற்றுமையோடு’ யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தன.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!

யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்ததற்கு மறுநாளே, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக கூட்டணி. சொல்லிக் கொள்ளப்பட்ட எதிர்கட்சிகளின் ஒற்றுமை அப்போதே குடை சாய்ந்துவிட்டது. திரௌபதி முர்மு சந்தால் இனத்தைச் சேர்ந்த பழங்குடி என்பதை முன்னிறுத்தி, பாஜக சாதி அடையாள அரசியலில் இறங்கியதை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. திரௌபதி முர்முவை எதிர்த்தால் பழங்குடிகள் மத்தியில் தமக்குள்ள வாங்கு வங்கியை இழந்துவிடுவோமோ என அஞ்சி எதிர்கட்சிகளில் ஒரு பிரிவினர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்று வாய்ச்சவடாலடித்த வீரமங்கை மம்தா, பா.ஜ.க ஒரு பழங்குடியை வேட்பாளராக அறிவிப்பதாக முன்பே சொல்லியிருந்தால் அவரை பாஜக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக முன்மொழிந்திருக்கலாம் என்று பேசினார். தனது ஆட்சிக்கே உலைவைத்துக் கொண்டிருந்தபோதும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, பழங்குடி என்பதால் பாஜக வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்கிறோம் என்றார். ஜார்கண்டில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, முர்முவை ஆதரித்தது.

மேலும் சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பி.ஜு. ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் திரௌபதி முர்முவை ஆதரித்தன.

வாக்கெடுப்பின்போது, முர்முவை வெளிப்படையாக ஆதரிக்காத எதிர்கட்சிகளின் வரிசையிலிருந்து பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது முகீம், தாம் ‘ஒடிசாவின் புதல்விக்கு’ (முர்மு) வாக்களித்ததாக வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் 11-லிருந்து 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அசாமில் 15-லிருந்து 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தரவுகளிலிருந்து அம்பலமாகியுள்ளது. பீகார், குஜராத் உள்ளிட்டு பல மாநிலங்களிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர். கேரளாவில் பாஜகவிற்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் முர்முவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு விழுந்துள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்தும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 64 சதவிகிதம் வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு மகத்தான வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மட்டுமே 38 சதவிகிதம் வாக்குகள் இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், 36 சதவிகிதம் வாக்குகளே பெற்று யஷ்வந்த் சின்ஹா படுதோல்வியடைந்தார்.

திரௌபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தாவிட்டாலும் பாஜக கூட்டணியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றிருக்க முடியும் என்றாலும், எதிர்கட்சிகளை நிலைகுலையச் செய்வது, அடுத்தடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் பழங்குடி வாக்குவங்கிகளை தமக்குச் சாதகமாக ஈர்ப்பது என்ற இரண்டு மாங்காய்களை ‘சாதிய அடையாள அரசியல்’ என்ற ஒரே கல்லால் வீழ்த்தியுள்ளது பாஜக. குறிப்பாக, இத்தேர்தல் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியின் மீது பெரிய அளவிலான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடிகளின் சதவிகிதம் (2011 கணக்கெடுப்பின் படி) 5.8 ஆகும். இப்பழங்குடிகள் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். இம்மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ‘ஜங்கல் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. சந்தால் மற்றும் குர்மி இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜங்கல் மஹால், 40 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். எனவே மேற்கு வங்கத் தேர்தல் அரசியலில் பழங்குடிகளின் வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் நீண்டகாலமாக வேலைசெய்துவருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜங்கல் மஹாலின் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. பழங்குடிகள் மத்தியில் பாஜக செல்வாக்கு பெற்றுவருவதையும் தமது செல்வாக்கு சரிவதையும் உணர்ந்த மம்தா, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பழங்குடிகளுக்கு பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதன் மூலம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றினார்; பாஜக 15 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி வேட்பாளர் முர்முவை ஆதரிக்காமல் தனது கட்சியைச் சேர்ந்த உயர்சாதி யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறார் மம்தா என்று பாஜக மேற்கு வங்க பழங்குடியினரிடையே பிரச்சாரம் செய்துவருகிறது. இன்னொரு பக்கம் இப்பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும் பழங்குடிகளிடையே தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மம்தாவும் கவர்ச்சிவாத, சாதி அடையாள அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில், மே.வங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ள மம்தா, தனது புதிய அமைச்சரவையில் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான பிர்பா ஹன்ஸடாவுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்.

மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் பங்கா பூஷன் விருது, இந்த ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தரான மகேந்திரநாத் ராய், எழுத்தாளரான ரபிலால் துடு ஆகிய இரண்டு பழங்குடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி சந்தால் பழங்குடிகள் கொண்டாடும் ஹூல் உற்சவ் எனப்படும் திருவிழாவிற்கு மம்தா அரசு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் போலி சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பழங்குடிகளுடன் சேர்ந்து நடனமும் ஆடினார் மம்தா.

***

மேற்கு வங்கம் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலுமுள்ள பழங்குடி வாக்குகளைக் குறிவைத்தே பாஜக முர்முவைக் களமிறக்கியுள்ளது. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடிகளின் சதவிகிதம் 8.6 ஆகும். அதேநேரம் மாநிலங்கள் வாரியாகப் பார்க்கும்போது இதில் பாரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

சான்றாக வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக் கொண்டால், சிக்கிம் மாநிலத்தில் 33.8 சதவிகிதமும், மேகாலயாவில் 86.1 சதவிகிதமும், அருணாச்சலப் பிரதேசத்தில் 68.8 சதவிகிதமும், நாகாலாந்தில் 86.5 சதவிகிமுதம், மிசோராமில் 94.4 சதவிகிதமும், மணிப்பூரில் 35.1 சதவிகிதமும், திரிபுராவில் 31.8 சதவிகிதமும் பழங்குடிகள் உள்ளனர்.

இவையன்றி சதீஷ்கர் (30.6%), ஜார்கண்ட் (26.2%), ஒடிசா (22.8%), மத்தியப் பிரதேசம் (21.1%), குஜராத் (14.8%), ராஜஸ்தான் (13.5%) ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பழங்குடி மக்கள் வாழ்கின்றன.

குஜராத், ராஜஸ்தான், சதீஷ்கர், தெலுங்கானா – என அடுத்தடுத்த வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்களையும், தற்போது பாஜக காலூன்றி வளர்ந்துவருகின்ற வடகிழக்கு மாநிலங்களையும் குறிவைத்தே முர்மு என்ற அம்பு வீசப்பட்டுள்ளது.

***

குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்முவை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததைப் போலவே, குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மே.வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரைத் தேர்ந்தெடுத்ததிற்குப் பின்னும் பாசிச பாஜகவுக்கு ஒரு நோக்கம் இருந்தது.

ஜெகதீப் தன்கர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் ஆதிக்க சாதிக்காரர் ஆவர். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதே ஜெகதீப் தன்கரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தற்கான நோக்கமாகும்.

ஜூலை 16 அன்று ஜெகதீப் தன்கரை வேட்பாளராக முன்மொழிந்தபோது, அவருக்கு ‘விவசாயி மகன்’ என்ற அடையாளத்தை வழங்கியது பாஜக. அன்றைய தினம் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார் :

“விவசாயி மகனான (கிசான் புத்ர) ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்குப் பெயர் பெற்றவர். சட்டம், சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாகத்தின் புகழ்மிக்க அனுபவங்களை அவர் தன்னோடு கொண்டுவருகிறார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்த வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமானது, ஆர்.எஸ்.எஸ்-பாஜக பல்லாண்டு காலமாக ஜாட்டுகள் மத்தியில் உருவாக்கியிருந்த சாதிய, மத முனைவாக்கத்தை உடைத்தது, வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போக்கைத் தடுப்பதற்காகவும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன்னிட்டும் மோடி அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

சட்டங்களைப் பின்வாங்கியது ஒருவகையில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் ஜாட்டுகள் மத்தியில் தனது இழந்த அடித்தளத்தை மீட்பதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நாம் அன்றே தலையங்கம் (2021 டிசம்பர் இதழ்) எழுதினோம்; அதைப் போலவே பாஜகவின் செயல்பாடுகளும் அமைந்தன. ஒரு தொடர் நிகழ்வின் அங்கமாகத்தான் ஜகதீப் தன்கரை முன்னிறுத்தியிருக்கிறது பாஜக.

உ.பி சட்டமன்றத் தேர்தலின் போது, ஜாட்டுகள் அதிகமாக வசிக்கக் கூடிய மோடி நகர் தொகுதியில், ராஜ்நாத் பிரச்சாரம் செய்தார். அப்போது சீக்கியர்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவரும் முன்னாள் பிரதமருமான சவுத்ரி சரண் சிங்கை தனது அரசியல் ஆசானாகக் குறிப்பிட்டு பேசினார். மேலும் பாஜகதான் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளை விவசாயிகள் தினமாக அறிவித்ததாகவும் ஜாட்டுகள் பாஜக மீது கோபப்பட முடியாது என்றும் பேசினார்.

கடந்த ஏப்ரல் மாதம், சீக்கியர்களின் 10 குருமார்களில் 9வது குருவாகப் போற்றப்படும் குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாளை மோடி செங்கோட்டையில் கொண்டாடினார். ‘அவுரங்கசீபை எதிர்த்து நமது ஆன்மீக கலாச்சாரத்தைப் பாதுகாத்தவர்’ என்று புகழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 அன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடு வாழ் சீக்கியர்களின் தூதுக் குழுவுடன் பேசிய மோடி, புதிய இந்தியாவைப் படைப்பதில் சீக்கியர்களின் பங்களிப்பு முக்கியமானது எனப் புகழ்ந்தார். மேலும் குருத்வாராக்களுக்கு செல்வது, வழிபாட்டில் நேரத்தைச் செலவிடுவது, சீக்கியக் குடும்பங்களின் வீடுகளில் தங்குவது ஆகியவை எனது வாழ்க்கையின் பகுதியாகும் என்று கூறினார்.

மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் சீக்கியர்களின் தலைப்பாகையுடன் மோடி காட்சி தந்தார். இவையெல்லாம் ஜாட் விவசாயிகளை, சீக்கியர்களைக் கவருவதற்காக பாஜக மேற்கொண்ட கவர்ச்சிவாத, சாதிய அடையாள அரசியலின் பகுதிகளே.

வேளாண் சட்டங்களைத் திருப்பப் பெற்றபோது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு எழுத்துப் பூர்வமாக ஒப்புதலளித்த மோடி அரசு எட்டுமாதங்களாக அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது குடியரசுத் துணைத் தலைவராக தன்கரை அறிவித்து ஒருநாள் கழித்து, அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது மோடி அரசு. இதில் பங்குபெறச் சொல்லி சம்யுக்த கிசான் மோர்சா என்ற விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பை அழைத்துள்ளது. (இக்குழுவே ஒரு மோசடி என்று விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு அதைப் புறக்கணித்துள்ளது என்பது வேறு விசயம்)

உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.

***

கவர்ச்சிவாதமும் அடையாள அரசியலும் இந்திய தேர்தல் அரசியலிலிருந்து பிரிக்க முடியாததாகும். குறிப்பாக சாதி அரசியல் போலி ஜனநாயகத் தேர்தல் அமைப்பில் புரையோடிப் போயிருக்கிறது. சாதி பார்த்து வேட்பாளர்களை நியமிக்காத கட்சி என்ற ஒன்று இல்லை. போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முறை கோடான கோடி வாக்காளர்களுக்குப் பயிற்றுவித்திருப்பது நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டு என்ற ஜனநாயக சிந்தனையைத்தான்.

படிக்க : காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

மாறாக, பெரும்பான்மை மக்கள் எந்த அரசியல் கட்சியின் கொள்கை தங்கள் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் என்று தெரிவுசெய்து வாக்களிப்பதில்லை. இத்தனைக் காலமும் கவர்ச்சிவாதத்தையும் அடையாள அரசியலையும் பிழைப்புவாதக் கட்சிகள் திறமையாகப் பயன்படுத்தி வந்தன. இன்று பாசிஸ்டுகள் அதை வீரியமாக முன்னெடுக்கிறார்கள். எனவே இத்தேர்தல் வரம்பிற்குள் நிற்கும் பிழைப்புவாத அரசியல் கட்சிகளால் பாசிஸ்டுகளின் அடையாள அரசியலை எதிர்கொள்ள முடிவில்லை. எதிர்கொள்ளவும் முடியாது!

வர்க்க அரசியலால் மட்டுமே இதை எதிர்கொண்டு முறியடிக்க முடியும். வேதாந்தாவுக்காகவும் ஜிண்டாலுக்காவும் பழங்குடிகள் வேட்டையாடப்படுவதையும், அம்பானி-அதானி கும்பலுக்காக பாரம்பரிய விவசாயம் அழிக்கப்பட்டு கார்ப்பரேட்மயமாக்கப்படுவதையும் வர்க்க அரசியலால் மட்டுமே எடுத்துக் காட்ட முடியும்.

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர் – இளைஞர்கள், சிறு – குறு வணிகர்கள் என அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் அவர்களது வர்க்க நலன்களை எடுத்துக் காட்டி அரசியல் உணர்வு ஊட்டுவதன் மூலம் மட்டுமே கவர்ச்சிவாத, அடையாள அரசியல் மாயைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்.

தேர்தல் பாதைக்கு வெளியே போராட்டப் பாதையில் மட்டுமே இத்தகைய அரசியல் உணர்வுக்கு உழைக்கும் மக்களைப் பயிற்றுவிக்க முடியும். இப்பாதை மட்டுமே ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தும்!


பால்ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க