privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமைக் கொலை – நெஞ்சு பொறுக்குதில்லையே!

சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமைக் கொலை – நெஞ்சு பொறுக்குதில்லையே!

ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு 'பாரத மாதாக்கள்' தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.

-

மார்ச்-8, உலக மகளிர் தினம்; உலக அரங்கில் பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை என்ன? ஒன்பது வயது பெண்குழந்தை சுதந்திரமாக தெருவில் விளையாடக்கூட முடியாத நிலையில் எப்படி சொல்வது மகளிர் தின வாழ்த்து?

ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு ‘பாரத மாதாக்கள்’ தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.

இந்தச் சமுகத்தில் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக குழந்தை ஆர்த்தி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள். எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாத இந்தப் படுபாதகச் செயலை புரிந்த அந்த மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் மனம் ஆறாது என்பதே நமது கருத்தாகவும், மக்கள் கருத்தாகவும் உள்ளது.

படிக்க : ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு பொழியும் தினகரன் பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

தற்காலத்தில் இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் அற்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கான மூலக்காரணங்களை இந்தச் சமூகத்தில் இருந்துதான் ஆராய வேண்டும்.

நிர்பயா, ஹாசிஃபா, ஹாசினி என ஒவ்வொரு பெண்ணும், பெண் குழந்தையும் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படும்போதெல்லாம், இனி இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என மக்கள் பல்வேறு வகைகளில் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள், மனம் வெடிக்கிறார்கள். ஆனாலும், பெண்கள் பாதிக்கப்படாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு நாளிதழ்களில் பதிவாகின்ற சம்பவங்கள் அன்றாடம் வெளிவருகின்றன.

அப்படியான சம்பவங்கள் நடக்கும்போது, சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்; பாலியல் சமத்துவத்தைப் போதிக்கும் கல்விமுறை வேண்டும்; ‘குட் டச்’ ‘பேட் டச்’ சொல்லித் தர வேண்டும்; பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணித்து கவனமாக வளர்க்க வேண்டும்; பெண்கள் விழிப்புணர்வாக (போலீசுத்துறை அவசர உதவி எண் வைத்திருப்பது உள்ளிட்டவை) இருக்க வேண்டும்; தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இப்பிரச்சினைகளுக்கு மூலக்காரணமான இந்தக் குற்றக்கும்பல் எப்படி உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்யாமல் ஒரு தீர்வை நாம் எட்ட முடியாது என்பதே நிதர்சனம்.

ஆணாதிக்க மனோபாவம், பெண்களை போகப்பொருளாக பார்க்கும் நுகர்வுவெறி, பரவிவரும் போதைப்பழக்கம் போன்ற சீரழிவுகள் நமது சமூகத்தில் திணிக்கப்பட்டு, விழுமியங்கள் அற்ற தக்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சக மனிதர்களை கடித்துக் குதற தயாராக உள்ளார்கள்.

பார்ப்பனிய – சாதி – ஆணாதிக்கப் போக்கு ஆணுக்குப் பெண் என்றுமே சமம் இல்லை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் போதித்து வந்துள்ளது.

இன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் சிந்தனையே பார்ப்பனிய ஆணாதிக்க சித்தாந்தம்தான். அதனால்தான், காஷ்மீரில் ஹாசிபா எனும் எட்டு வயது குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொல்லி, தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்தியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை, இரவோடு இரவாக எரித்துக் குற்றவாளிகள் வீடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. குஜராத் கலவரத்தின்போது, தனது குடும்பத்தினரும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு, தானும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு குற்றம் இழைத்த விஸ்வ ஹிந்து பரிஷதின் காவி பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கிக் கொண்டாடியது.

இத்தகைய பாசிச பாஜக ஆட்சியில்தான் நாடெங்கும் கஞ்சா போதைக் கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. அதானி துறைமுகத்தில் டன் கணக்கில் போதைப்பொருள் கடத்தல் பிடிப்பட்டது. இதுவரை அதில் முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக பள்ளிக் குழந்தைகளிடமும் சென்றுசேரும் விதமாக போதைக் கலாச்சாரம் பல்வேறு தளங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா முதல் வெளிநாட்டு ஹெராயின் வரை பரவலாகக் கிடைக்கிறது. சமூகத்தையே கட்டுப்படுத்தி வழிநடத்திச் செல்லும் அரசின் துணையின்றி இவை எதுவும் நடைபெறாது.

இந்த நிலையில்தான் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என்ற பொதுமக்களின் புகார்களைக் கண்டுக்கொள்ளாத ஆளும் வர்க்கம்தான், தற்போது மக்கள் அதற்கெதிராகப் போராட்டத்தில் குதித்தவுடன் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாக போலீசையும் துணை இராணுவத்தையும் குவித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்குகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் கஞ்சா கலாச்சாரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்றும், தமிழகத்தில் உள்ள சிலரோடு இங்கு உள்ளவர்கள் தொடர்புகொண்டு இருப்பதினால்தான் இப்படிப்பட்ட கஞ்சா கும்பல் செயல்படுகிறது என்றும் வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க சாமியார்கள், அகோரிகள் பலரும் கஞ்சா போதையில்தான் அருளாசி வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கஞ்சா பரவலாக்கத்திற்கு அதிகார வர்க்கத்திலும் சமூகத்திலும் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல்தான் அடிப்படைக் காரணம்.

இவற்றுக்கு இணையாக இணைய உலக ஆபாசங்கள், சினிமா, சீரியல் என அனைத்தும் பெண்களை, ஆண்கள் தங்களது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நுகர்வு பண்டங்களாகவே சித்தரித்து வருகின்றன.

ஆபாச வலைதளங்கள் பன்மடங்கு அதிகரித்திருப்பதும், செக்ஸ் சேட், பெய்டு கால், பேஸ் மார்பிங் என பல்வேறு சைபர் குற்றங்களும் சமூகத்தில் அன்றாடம் நடந்து வருகின்றன.

கடத்த பத்து ஆண்டுகால பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் கஞ்சா பரவலாக்கம் உள்ளிட்ட மேற்கண்ட கூறுகள் அனைத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

படிக்க : மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா?

இதன்மூலம் உருவாக்கப்படும் பண்பாடு – விழுமியங்களற்ற தக்கை மனிதர்களில் சிலர் பல்வேறு தண்டனைகள் மற்றும் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படலாம். ஆனால், குற்றங்கள் குறையப்போவதில்லை. இப்படியான குற்றச் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கும் கஞ்சா, டாஸ்மாக் உள்ளிட்ட போதை கலாச்சாரத்தையும் பெண்களை பாலியல் பண்டமாகப் பார்க்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தையும் ஒழித்துக்கட்டி ஜனநாயக மாண்பை வளர்த்தெடுக்காமல் இதுபோன்ற வன்கொடுமைக் குற்றங்களைத் தடுக்க இயலாது.

பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைளின் முதன்மை குற்றவாளி ஆணாதிக்க – போதை – நுகர்வெறி பண்பாட்டை கட்டிக் காப்பாற்றும் இந்த அரசுதான்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஆர்த்திக்கு நீதி கேட்கும் புதுச்சேரி மக்களின் போராட்டத்தை, பார்ப்பனிய –  ஆணாதிக்க வெறியையும் போதை நுகர்வுவெறிப் பண்பாட்டையும் வளரக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுப்பது அவசியம். அதுதான் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பான சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதை நோக்கி முன்னேற்றும். அதுதான் ஹாசிபா முதல் ஆர்த்தி வரையிலான பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.

பாரிவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க