பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: “மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி எம்.வி.முரளிதரன் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்புதான் மணிப்பூர் பற்றி எரிய காரணமாக இருந்தது. தற்போது அதே நீதிமன்றத்தால் அத்தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?
மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழங்கிய தீர்ப்பை ஏதோவொரு தனி நீதிபதி வழங்கிய தவறான தீர்ப்பு என்று தனித்துப் பார்த்துவிடக் கூடாது. அத்தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதி நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்பையடுத்து மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிரான கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அன்று பற்றி எரிய தொடங்கிய மணிப்பூர் ஏறக்குறைய ஒரு ஆண்டாகியும் அணையவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஆக பெரும்பான்மையினர் குக்கி பழங்குடியின மக்கள். வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. பல தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மிகப்பெரிய அளவில் குக்கி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் இனவெறியர்களால் நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்டது. மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்களின் தலைமையில் மணிப்பூரில் ஒரு பேரழிவே நடத்தப்பட்டுள்ளது.
இக்கலவரத்தின் மூலம் மணிப்பூர் காடுகளை அம்பானி-அதானி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து விடலாம், அனைத்து மெய்தி இன மக்கள் மத்தியிலும் அடித்தளத்தை உருவாக்கிவிடலாம் என்று பாசிசக் கும்பல் கனவு கண்டது. ஆனால், குக்கி இன மக்களின் எழுச்சி அந்த கனவை நிறைவேறவிடவில்லை. காட்டையும் உரிமையையும் பாதுகாப்பதற்கான குக்கி இன மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சி காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் இக்கலவரம் பாசிசக் கும்பலுக்கு எதிராக திரும்ப தொடங்கியது. மெய்தி இன மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிர்ப்பு வலுத்தது.
படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், நிலைமையை ஓரளவிற்கேனும் இயல்புநிலைக்கு கொண்டுவந்தால்தான் அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தமுடியும் என்று பாசிசக் கும்பல் அஞ்சியதால்தான் இத்தீர்ப்பு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது. உண்மையில், குக்கி இன மக்களின் எழுச்சி பாசிசக் கும்பலை தற்காலிகமாக பின்வாங்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த பேரழிகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்த உள்நோக்கம் கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி முரளிதரன் மீது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் முடியாது என்பதே ‘இந்திய ஜனநாயகத்தின்’ அவலநிலை.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த தீர்ப்பானது ‘நல்ல நோக்கத்தோடு’ (Good faith) வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 77, சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பானது குற்றமாகாது என்கிறது.
ஆக, நிலகின்ற போலி ஜனநாயகத்தின்படி, நீதிபதிகள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் சமூகத்திற்கு மேலானவர்கள். இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பில் இவர்களையெல்லாம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும், இந்தியாவில் நீதிபதிகள் இதுபோன்ற தீர்ப்பை வழங்குவது இது முதன்முறையல்ல. இந்தியாவில் காவி கும்பல் ஆட்சியை பிடித்ததிலிருந்து நீதிமன்றங்கள் பாசிசமயமாகி வருகிறது. இதன் விளைவாக, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பசுவளைய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் மனுவாத அடிப்படையில் பெண்களுக்கு எதிரான, பார்ப்பனிய-ஆணாதிக்கத்தின் அடிப்படையில் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்புகள் பொதுவெளியில் பேசுபொருளாகி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவற்றில் சில தீர்ப்புகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த நீதிபதிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டதில்லை. அப்படியொரு கோரிக்கையும் வலுத்ததில்லை.
படிக்க: தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?
அதேபோல், 1949-இல் பாபர் மசூதியில் சங்க பரிவார கும்பல் திருட்டுத்தனமாக குழந்தை ராமனின் சிலையை வைத்ததை அங்கீகரித்து, 1951-இல் மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியது பைசாபாத் சிவில் நீதிமன்றம். இதனையடுத்து, பாபர் மசூதியை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் நீதிமன்றங்கள் அங்கீகரித்து அனுமதியளித்தன. இறுதியாக 1990-ஆம் ஆண்டு மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதோடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கொன்று குவித்தனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்.
இந்த 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கொல்லப்பட்டதில் நீதிமன்றங்களின் பங்கு இல்லை என்று நம்மால் மறுக்க முடியுமா? ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதே பிரதானமான கேள்வி. இதனைதான் நாம் இரட்டை ஆட்சிமுறை என்கிறோம். இதுவே, இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஜனநாயகத்தின்’ உண்மைநிலை.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மக்க்களுக்கு மேலானவர்களாக உள்ளனர். அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையோ தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையோ மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பெயர்தான் ஜனநாயகமா. எனவே நீதிபதிகள் உள்ளிட்ட அரசின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுத்தோரைத் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உண்மையான ஜனநாயகத்தில்தான் மக்கள் விரோத தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளைத் தண்டிக்க முடியும்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
Rss,sangparivar amaippukalai ban panna vendum