10.03.2024

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு பொழியும்
தினகரன் பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மிழ்நாட்டுக் கல்வித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் கற்றல் சாரா செயல்பாடுகள், புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான திட்டங்கள் போன்றவற்றை விமர்சித்தும், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தொடர்ந்து குரல் கொடுத்து முகநூல் பதிவுகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

இப்படி அவர் பதிவிட்ட 34 பதிவுகள், அரசுக்கு எதிரானவை என பட்டியலிட்டு, கல்வித்துறை அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

அரசின் இந்நடவடிக்கைக்கு ஜனநாயக சக்திகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என தமிழ்நாட்டின் பல தரப்பினர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் “மாணவர்கள் பொதுமக்களுக்கு ஆதரவு என்ற பெயரில்  கலவரத்தைத் தூண்டிய ஆசிரியை  சஸ்பெண்ட்” என்ற தலைப்பு போட்டு தினகரன் நாளிதழ் ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. இது எந்தவொரு விமர்சனத்தையும் பரிசீலிக்க மறுக்கும் ஆண்டை மனோபாவமும், வக்கிரமும் நிறைந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையாகும்.

அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், சட்டங்களை எதிர்த்துப் போராடினால் தீவிரவாதி, நக்சலைட், ஆன்ட்டி இந்தியன் என முத்திரை குத்தும் பிஜேபிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசவில்லையா? நீட்டை எதிர்த்துப் பேசவில்லையா? இதெல்லாம் சமூகத்தில் கலவரத்தைத் தூண்டும் நடவடிக்கைகள் என பிஜேபியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு, இந்த தினகரன் நிர்வாகம் செய்தி வெளியிடுமா?


படிக்க: ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!


அரசின் எந்தவொரு செயல்பாட்டையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமையுண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை, நேற்று செய்தியாகப் போட்டிருப்பது இதே தினகரன் தான். ஆனால் இன்றோ, ”மக்களைப் போராடத் தூண்டும் நக்சலைட் போல” என ஆசிரியர் மீது அவதூறு செய்து செய்தி போடுகிறது என்றால் இவர்களது ஜனநாயக உணர்வின் இலட்சணம் இதுதான் என்பது தெளிவாகிறது.

34 பதிவுகளையும் மெனக்கெட்டுப் படித்து, அவை ஒவ்வொன்றும் எந்த விதியை மீறுகின்றன என பட்டியல் போடுகிறது அதிகார வர்க்கம். ஆனால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தாங்கள் ஒன்றும் செய்யாதது பற்றியோ, பிரச்சினைக்குக் காரணமே தாங்கள் பின்பற்றும் கொள்கைகள் தான் என்பது பற்றியோ பேசுவார்களா?

பிரச்சினைக்குக் காரணமாக இருப்பவர்களே நீதிபதிகளாகி நடவடிக்கை எடுப்பார்கள் என்றால், இந்த நாடு எதை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா…

ஆகவே, ஜனநாயக விரோதமாக, அவதூறு செய்தியை வெளியிட்ட  தினகரன் பத்திரிகை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான  இடை நீக்க உத்தரவை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

கல்வித்துறையைப் பாதுகாக்க விரும்புவோரும், ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் குரக் கொடுக்க வேண்டும், களத்தில் இறங்க வேண்டும் என எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க