காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி

கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.

ரு ஊரில் கோவில் திருவிழா நடந்தால் அங்கு வாழும் அனைவரும் இணைந்து கோவிலுக்கு செல்வதும் மாணவர்கள் தங்களது குடும்ப முறையினால் பூசாரியாக மாறுவதும் ஆட்டம், பாட்டம், தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல் எல்லாம் நடக்கும். பார்த்திருப்போம். அங்கு மாணவர் என்ற அடையாளம் இருக்காது. ஆனால், இங்கு மாணவர்கள் பள்ளிச் சீருடையில் இப்படியான செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. அதையும் ஆசிரியர்களும் இணைந்து இவை நடக்கிறது என்பது செய்திகளில் பார்க்கும் போது?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிகளில் ஒரு சுற்றறிக்கை வாசிக்கப்பட்டு ஆசிரியர்களால் கையொப்பமிடப்பட்டது. பள்ளி நேரத்தில் மாணவர் சீருடையில் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றதன் நீட்சியாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை. ஆம், பள்ளிச் சீருடையில் மாணவர்கள் பள்ளியைத் தவிர வேறெங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கூடாது இப்படியான அறிவுறுத்தல்கள் வழிபாட்டுக் கூட்டத்திலும் சொல்லப்பட்டது.

படிக்க : கோவை: பள்ளி மாணவி மீது முஸ்லீம் வெறுப்பு – மதவெறி பிடித்த ஆசிரியர்களை கைதுசெய்!

ஆனால், இந்த கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஏற்கனவே பாரம்பரியத்தையும் புராணங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாடத்திட்டத்தையே மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இங்கு மாணவர்கள் காவித்துண்டை தாங்கள் அணிந்துள்ள சீருடையின் மீது போட்டு தங்கள் இருப்பை நிலைநிறுத்தி உள்ளது என்பதைப் பார்க்கும் போது, நம் கல்வி முறையின் எதிர்காலம் எந்தவித நேர்மறையான சமூக மாற்றத்தையும் உருவாக்காது என்பதோடு சாதீய மதப் பிரிவினைகளை மாணவர் மனதில் தொடர்ந்து விதைக்கும் என்ற கவலையையே தருகிறது.

இதற்கான பதிவை சற்று நேரத்திற்கு முன்புதான் Shahjahan R வாப்பா அவர்கள் பதிவில் பார்த்தேன். கல்வி அமைச்சர் அவர்கள் குறித்தும் சில கமெண்ட் பார்த்தேன். அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பாலசமுத்திரம் அருகே ஒரு சிற்றூர்) தனது பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 150-க்கும் அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது வெறும் 47 தான். காரணம் குழந்தைகள் அமர வகுப்பறையே இல்லை; அதைவிட முக்கியம் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுவெளியில் தான் போகின்றனர். அவர்கள் மட்டுமல்ல நாங்கள் மூன்று ஆசிரியர்கள் இருக்கிறோம். நாங்களும் பொதுவெளியில் போக வேண்டிய சூழல். எங்களுக்கும் கழிப்பறை இல்லை என்கிறார். இப்படித்தான் இருக்கிறது நம் கல்வித்துறை. இதற்கான ஒரு தீர்வைக் கூட எடுக்காத கல்வித்துறையை பாசிசத் துறை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

படிக்க : காவிமயமாக்கப்பட்டு வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்!

இத்தனை பிரச்சனை இருந்தாலும் மாணவர்கள் மனம் காவிக்கும் கயிறுகளுக்கும் மாற்றப்பட்டாலும் அறிவியல் மன்றங்கள் வெறும் பதிவேடுகளாக மட்டுமே இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வானவில் மன்றங்களும் இதன் மற்றொரு வடிவமே. நிதி ஒதுக்கீடு மட்டுமே முறையாக செய்யப்பட்டு திட்டங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தரமான நல்ல, அறிவியல் உணர்வை ஊட்டி சிந்திக்கும் கல்வியைக் கொடுத்திருந்தால் பள்ளிச் சீருடையுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டிருப்பார்களா?

முதலில் இந்தப் பணிகளுக்கு குழந்தைகளை ஈடுபடுத்தும் அறநிலையத்துறையின் மீது ஏன் குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு விசாரணை தொடங்கக் கூடாது?

இப்படி நம்மிடம் ஏராளமான கேள்விகள் இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே கடந்து போகும் அனைவரும் மனதில் நிறுத்தலாம்… இங்கே கல்வி காவிமயமாகி வருகிறது என்பதை.

வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

சு.உமா மகேஸ்வரி,
ஒருங்கிணைப்பாளர்,
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு.

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க