தெற்கு புதுடெல்லியில் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு இறைச்சி கடைகளை திறக்க தடை விதித்து மேயர் முகேஸ் சூரியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்துக்கள் தனது உணவில் பூண்டு, வெங்காயம்  பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
தெற்கு புதுடெல்லியில் மேயராக இருப்பவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்த முகேஷ் சூரியன். இவர் வட இந்தியாவில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அந்த பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “டெல்லி மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம். மக்கள் இறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று என்னிடம் முறையிட்டனர். அதனால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்தையும் மீறும் செயல் அல்ல. இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு உரிமம் வழங்கும்போது இந்து பண்டிகை காலங்களில் கடைகள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படும்” என்றார்.

படிக்க :

குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!

இந்த உத்தரவின் மூலம் தனது இந்துராஷ்டிர கனவை நிறைவு செய்யும் இரண்டு நோக்கத்தை நிறைவேற எத்தனிக்கிறது பாசிச பா.ஜ.க. ஒன்று, பெரும்பான்மை மக்களின் அசைவ உணவு கலாச்சாரத்தை தடுத்து சைவ உணவு கலாச்சாரத்திற்கு மாற்ற முயல்வது. இரண்டாவது, இறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிப்பதன் மூலம் இறைச்சி கடைகளை வாழ்வாதாரமாக கொண்ட சிறுபான்மை முஸ்லீம், தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியும் சேரும்.
ஏற்கனவே, பசுவதைத் தடைச் சட்டத்தின் மூலம் மாட்டிறைச்சி விற்கும் மூஸ்லீம்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கியது பாசிச கும்பல். தற்போது, இந்து பண்டிகையின்போது இறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிப்பதன் மூலமும், கோயில்களுக்கு அருகே இருக்கும் இறைச்சிக் கடைகளுக்கு நிரந்தரமாக தடை விதிப்பதன் மூலமும் அவர்களின் உரிமை மற்றும் பொருளாதாரத்தை நசுக்குகிறார்கள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகள்.
000
முகேஷ் சூரியன் மேலும் கூறுகையில், நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இந்துக்கள் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது என்றார். இதன்மூலம் தனது பார்ப்பன மேன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
வெங்காயம், பூண்டு உணவு குறித்து பார்ப்பன பாசிஸ்டுகள் கூறுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஒராண்டுக்கு முன்பு வெங்காயம் விலையேற்றம் பற்றி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கும் குடும்பத்தில்தான் பிறக்கவில்லை என்றும், அதனால் வெங்காயம் விலையேற்றம் குறித்து தான் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறி தனது பார்ப்பன திமிரை வெளிப்படுத்தினார் அந்த அக்ரகாரத்து மாமி.
இந்துத்துவா அமைப்பான “இஸ்கானின்” (ISCKON) துணை நிறுவனமான அட்சய பாத்திர என்ற நிறுவனம், கர்நாடகம் உள்பட 12 மாநிலங்களில் 42 இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவில் பூண்டும், வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை.
பூண்டு, வெங்காயம் என்பது சூத்திர உணவு பொருட்கள் என்று பார்ப்பனர்கள் கருதுவதாலும், அவர்கள் சாப்பிடும் உணவில் வெங்காயம், பூண்டுகளை சேர்ப்பதில்லை என்பதாலும் பா.ஜ.க உட்பட இந்துத்துவ அமைப்புகள் இந்த பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு உண்ணும் நிலையை கட்டமைக்க முயல்கிறார்கள்.
பூண்டு, வெங்காயத்தை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம்; அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடாக உள்ளது. காய்கறிகளிலும் கூட தமது வன்மத்தைக் காட்டுகிறார்கள் இந்துத்துவவாதிகள்.
படிக்க :

சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

இதுவரை மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என கூறி வந்த இவர்கள் தற்போது முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் உணவில் முக்கிய அங்கமான வெங்காயம், பூண்டுகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கிறார்கள்.
000
பெரும்பான்மையான இந்துக்களின் உரிமை மற்றும் நம்பிக்கை என்றுகூறி சிறுபான்மையினரான மூஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்களை அடக்கி ஒடுக்கி இரண்டாம்தார குடிகளாக்க தீவிரமாக முயல்கின்றனர் இந்த பார்ப்பன பாசிஸ்டுகள். இந்த நோக்கம் நிறைவேறிய பின் பெரும்பான்மை இந்துக்களையும் தீண்டத்தகாதவன், சூத்திரன் என்றுகூறி ஒடுக்குவதை தீவிரப்படுத்துவார்கள் என்பது நிதர்சனம்.
சிறுபான்மை மற்றும் பெருவாரியான உழைக்கும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்குமுறைகளை தடுக்க, இந்த காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளை கீழிருந்து மக்கள் படையைக் கட்டி வீழ்த்துவதே ஒரே தீர்வாகும்.


வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க