ந்தியா முழுவதும், இந்து மதவெறி அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் தொடர்ந்து இறைச்சி உணவுக் கடைகள் மீது குறிப்பாக முசுலீம்கள் நடத்தும் இறைச்சி உணவுக் கடைகள்  மீது அரசின் உதவியுடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள சாலையோரக் கடைகளில் இனி அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்றும் குஜராத்தின் மற்ற இரண்டு முக்கிய நகரங்கள் வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகியவை அசைவ உணவுப் பண்டங்களை குறிப்பிட்ட இடங்களில் விற்கக் கூடாது என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன. இதே போல, குருகிராமில் இறைச்சி கடைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்க அனுமதி இல்லை. டெல்லியில் உள்ள ஒரு முனிசிபல் கார்ப்பரேஷனில் அசைவப் உணவுப் பண்டங்கள் கடைகளில் காட்சிப்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது.
எனில் இந்தியா என்ன சைவ உணவு உண்பவர்கள் அதிகம் வாழும் நாடா எனும் கேள்வி எழுகிறது. ஆனால், இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அசைவப் பிரியர்கள் தான். நாட்டில் 70 சதவித பெண்களும் 78 சதவித ஆண்களும் ஏதோ ஒரு வகை இறைச்சியை சாப்பிடுகிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு-4 வழங்கும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
படிக்க :
குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !
தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்கள் 97 சதவிதத்திற்கும் அதிகமாக உள்ளனர். அதற்கு நேர்மாறாக, பஞ்சாப், அரியானா, குஜராத், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்கள் 40 சதவிதத்திற்கும் குறைவாக உள்ளனர் என்று அம்மாநில அரசுகள் அளிக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development – OECD) அறிக்கையின் படி, 2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் வாரம் ஒருமுறை அசைவ உணவை புசிக்கிறார்கள்.
தற்செயல் நிகழ்வாக, மேற்கு வங்கம் மற்றும் கேரளா உட்பட ஒன்பது மாநிலங்களில் மட்டுமே இறைச்சி உண்பதற்கு எந்த கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் இறைச்சி வகைகளைப் பொறுத்து சில வகையான கட்டுப்பாடுகள் உள்ளன.
உலக இறைச்சி உற்பத்தியில் இந்தியா, 2.18 சதவிதம் உற்பத்தி செய்து சீனா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் உள்ளது என்று உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இறைச்சி உற்பத்தி 2014-15 முதல் 2019-20 வரை 5.15 சதவிதமாக வளர்ந்துள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தியில் 30 சதவிகிதம் எருமை மாடுகளின் இறைச்சி பங்களிக்கிறது. மாநில வாரியாக பார்த்தோமேயானால், உத்தரப் பிரதேசம் 15 சதவிதம், மகாராஷ்டிரா 13 சதவிதம், மேற்கு வங்காளம் 10 சதவிதம் என இந்தியாவில் இறைச்சி உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் தாக்கங்கள் இருந்தபோதிலும் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை இந்தியா 3.17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஏற்றுமதிக்கு சமமானது என்று வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் கடந்த 2021 ஜூலை மாதம் கூறியது.
உலகின் மிகப்பெரிய எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில், 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது.
2018 – 2019-ம் ஆண்டுகளில் இந்தியாவில் முதல் 10 எருமை இறைச்சி ஏற்றுமதியாளர்களில் 7 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள், ஒருவர் டெல்லையைச் சேர்ந்தவர் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2019 டிசம்பரில் மக்களவையில் கூறியுள்ளார்.
OECD தரவுகளின் படி, இந்தியாவில் இறைச்சி நுகர்வு 2010-ல் இருந்து குறையத் தொடங்கியது; ஆனால், 2014-க்குப் பிறகு மீண்டும் அதன் வேகத்தை அதிகரித்தது. கோழி மற்றும் பிற இறைச்சி நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் எருமை இறைச்சி நுகர்வு 2017-க்குப் பிறகு தான் இழந்த வேகத்தை மீட்டெடுத்தது. 2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது.
படிக்க :
இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் !
தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி
மாடுகளை இறைச்சிக்காக வெட்டத் தடை, இறைச்சி விற்பனைக்கு தடை, இறைச்சி உணவகங்களுக்கு தடை, குறிப்பிட்ட இடங்களில் இறைச்சி விற்க தடை, இந்துமத பண்டிகைக்காலங்களில் இறைச்சிக் கடைகளை திறக்க தடை என பாஜக அரசு தொடந்து கட்டுபாடுகளையும், காவிக்குண்டர்கள் மூலம் மக்கள் மீது தாங்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் செய்து வருகிறது. இது இந்தியாவின் 70 சதவீத மக்களின் உணவுக் கலாச்சாரத்தின் மீது அது நடத்தும் தாக்குதலாகும்.
இறைச்சி உணவுகள் மீதான, அதை விற்கும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மீதான தொடர் பசுக் குண்டர்களின், காவி குண்டர்களின் தாக்குதலுக்கு உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து முறியடிக்காவிட்டால், பெரும்பான்மை மக்களின் உணவுக் கலாச்சாரம் சிறுபான்மை சங்க பரிவாரக் கும்பலால் அழிக்கப்பட்டுவிடும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : Indiatoday

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க