மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகை சுதந்திரம் என்பது தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023” நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்த பின்பு, இம்மசோதா மக்களவையில் டிசம்பர் 21 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மோடி அரசால் டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

இந்த கருப்புச் சட்டம் குறித்து “எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா” தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இச்சட்டத்தில் உள்ள “பத்திரிகைப் பதிவாளரின் அதிகாரங்களை விரிவுபடுத்துதல், பத்திரிகைகளை வெளியிடுவதற்கு மீதான புதிய கட்டுப்பாடுகள், செய்திகளை வெளியிடுவதில் தொடர்ச்சியாக அரசின் அதிகார நுழைவு, பல விதிகளில் உள்ள தெளிவின்மை மற்றும் அதிகாரத்தைச் சுற்றியுள்ள தெளிவின்மை” முதலியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட போதே இது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியுள்ளோம். முக்கியத்துவம் கருதி அதைத் தற்போது மீள்பதிவு செய்கிறோம்.

***

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

னது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களை பல்வேறு வகையில் ஒடுக்கி வரும் பாசிச மோடி அரசு தனது அடுத்த கட்ட இலக்காக டிஜிட்டல் செய்தி ஊடகங்களைக் குறிவைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022” அதற்கான ஏற்பாடாகும்.

இம்மசோதா 2019 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. ஆனால் இதன் மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால் அப்போது நிறைவேற்றப்படவில்லை. தற்போது இம்மசோதா மீண்டும் அவைக்கு வந்திருக்கிறது.

பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் மட்டுமல்லமால் முதன்முறையாக டிஜிட்டல் ஊடகங்களையும் உள்ளடக்கி இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. இச்சட்ட மசோதா அமல்படுத்தப்பட்ட 90 நாட்களுக்குள் டிஜிட்டல் ஊடக செய்தி வெளியீட்டாளர்கள் தங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்; விண்ணப்பிக்காவிட்டால் அவர்களின் ஊடகத்திற்கு தடை விதிக்கப்படும் என்கிறார்கள்.

ஏற்கெனவே அமலில் இருக்கும் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவு சட்டம் 1867க்கு மாற்றாகவே இப்புதிய மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. இப்புதிய மசோதாவைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு முன் ஏற்கெனவே அமலில் இருக்கும் சட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.


படிக்க : உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!


1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு நிறுவன ரீதியாக தன்னை எதிர்க்கும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்காகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளை மட்டும் கட்டுப்படுத்திய இச்சட்டம் 1878-ஆம் ஆண்டிற்கு பிறகு அனைத்து வட்டார மொழி பத்திரிகைகளையும் கட்டுப்படுத்தியது. அதிகார மாற்றத்திற்கு பின்னரும் இச்சட்டம் தொடர்கிறது.

தற்போது 155 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காலனித்துவ சட்டத்தை நீக்கி புதிய சட்டம் கொண்டுவருகிறேன் என்ற பெயரில், டிஜிட்டல் ஊடங்களைக் குறிவைத்து ஒடுக்குவதற்கேற்ப புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

***

புதிய சட்ட மசோதாவின் பிரிவு 5 மற்றும் 6-இன் படி, மத்திய அரசால் பத்திரிகை தலைமை பதிவாளர் (Press Register General) நியமிக்கப்படுவார். இவரிடம் அச்சு ஊடகங்களைப் போல டிஜிட்டல் ஊடகங்களையும் பதிவு செய்ய வேண்டும். இந்த அதிகாரி ஒரு ஊடகம் தொடர்பான எந்த தகவலையும் ஆணையிட்டு பெறலாம், எந்தவொரு ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் போன்ற வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் நினைத்தால் ஒரு ஊடகத்தை தடை செய்யலாம் அல்லது அதன் மேல் அபராதம் விதிக்காலம். இவரின் தீர்ப்பே இறுதியானது. இவரும் இவருக்கு கீழ் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் யாரும் மாநில அரசுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லை.

இதுவரை எந்த சட்டவிதிகளின் கீழும் கட்டுப்படுத்தப்படாத டிஜிட்டல் ஊடகங்கள் இச்சட்ட மசோதாவின் படி நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுகின்றன.

இச்சட்ட மசோதாவின் படி, பத்திரிகையின் ஆசிரியர் கண்டிப்பாக இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பிரிவு 4 மற்றும் 11-ன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டப்படி 1967 (UAPA) தண்டிக்கபட்டவர்களும் மற்றும் அரசின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டு அதற்காக தண்டிக்கபட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-2020 வரை 10,522 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பலரும் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவர். எனவே பத்திரிகையாளர் மீது ஊபா வழக்கு பதியப்பட்டிருக்கக் கூடாது என்பது மறைமுகமாக அந்த ஊடகங்கள் பா.ஜ.க. அரசை எதிர்ப்பவையாக இருக்கக் கூடாது, அவ்வாறு எதிர்த்தால் அவர்கள் ஊடகங்களை நடத்த முடியாது என்று சொல்வதாகும்.

மோடி அரசு இச்சட்டத்தை கொண்டு வருவதற்கான முக்கியமான நோக்கம் டிஜிட்டல் செய்தி ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே. ஏனென்றால் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தற்போது மோடி அரசிற்கு எதிராக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் மோடி அரசின் பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுப்பது தி வயர், குவிண்ட், ஸ்க்ரோல் போன்று முற்போக்கு-ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் டிஜிட்டல் ஊடகங்களே.

பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என மோடி அரசின் பல சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்களே வெளிக்கொண்டு வந்துள்ளன. இதனால்தான் இவற்றை ஒடுக்கிவிடத் துடிக்கிறது மோடி அரசு.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூஸ் கிளிக், ஜூலையில் தைனிக் பாஸ்கர்,’பாரத் சமாச்சார்’ மற்றும் செப்டம்பரில் நியுஸ்லாண்டரி’ என தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள்மீது வருமான வரித்துறையை ஏவியது மோடி அரசு.

இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது. இதன்படி வலைதளங்கள் மட்டுமல்லாது செய்திகளை வழங்கும் யூடியூப் சானல்கள், முகநூல் கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும் என்பதுதான் பொருள்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழ்வது சமூக ஊடகங்களே. சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக வெகுமக்கள் சமூக ஊடகங்களையே பாவிக்கிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல உலகெங்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களில் மக்கள் சமூக ஊடகங்களையே தங்கள் கருத்துப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றிவருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.


படிக்க : நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!


பத்திரிகை சுதந்திரம் குறித்து “எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள்” எனும் உலக பத்திரிகையாளர்கள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பத்திரிகையளர்கள் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகள். பத்திரிகையாளர்களை தேசவிரோத வழக்கு, ஊபா உள்ளிட்டவைகளின் கீழ் ஒடுக்குவதை இவ்வமைப்பு வன்மையாக கண்டித்திருந்தது.

கொரோனா ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது ‘வதந்தி பரப்புகிறார்கள்’ என்று வழக்கு தொடரப்பட்டது. உத்தரப் பிரேதச மாநிலம்  ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற கேரள பத்திரிகையாளர்களை தேசத் துரோக வழக்கில் கைது செய்தது யோகி அரசு. டெல்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்ட மீடியா ஒன் தொலைக்காட்சி மீது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.

மேலும் 2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்தது மட்டுமல்லமால் அங்கு இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; மீறி செய்தி வெளியிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மோடி அரசு. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து களத்தில் போராடாமல் இனி கருத்து சுதந்திரத்தைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.


மதி

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க