னைத்து தரப்பு மக்களுக்கும் விரோதமான இந்த பா.ஜ.க. ஆட்சி பெரும்பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக அம்பானி, அதானி உள்ளிட்டு குஜராத்தைச் சேர்ந்த பார்ப்பன-பனியா, சிந்தி, மார்வாடி சாதியைச் சேர்ந்த முதலாளிகளே பா.ஜ.க.வின் புரவலர்கள். இக்கார்ப்பரேட்டுகளும் காவிகளும் பிரிக்க முடியாத ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்துகொண்டு நாட்டையும் மக்களையும் சூறையாடி வருகிறார்கள்.

மோடியின் எட்டாண்டு கால ஆட்சியில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி நடைபெற்றிருக்கிறது. இதில் 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிவிட்டு 23 பேர் நாட்டைவிட்டே தப்பியோடிவிட்டனர். நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா உள்ளிட்டு இந்த 23 பேரில் பெரும்பாலானவர்கள் மோடிக்கு நெருக்கமான குஜராத்திகள்.

மோடி ஆட்சிக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன்கள் 2014-ல் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 13 லட்சம் கோடியாக அது உயர்ந்திருக்கிறது. மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் எப்படி வேட்டையாடிவருகின்றனர் என்பதற்கு வங்கி மோசடிகள் ஒரு சான்று.

இப்படி வங்கி மோசடி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்குத்தான் மோடி அரசு ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் ‘தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு’ என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை வாரிவாரி வழங்குகிறது. கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய வரியை 40 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்தது மோடி அரசு; இதன் மூலம் 2019-20லிருந்து 2020-21 வரையான ஓராண்டில் மட்டுமே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1.20 லட்சம் கோடியாகும்.


படிக்க : கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !


இன்னொரு பக்கம் பொதுத்துறை சூறையாடல். தனியார்மய-தாராளமய-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் மோடி அரசு, மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களை விற்று தனக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகளை வளர்த்துவருகிறது. பொதுச்சொத்துக்களை விற்பதற்கென்றே நிதியமைச்சகத்தின் கீழ் பங்கு விலக்கல் துறை என்றொரு தனித்துறையே செயல்பட்டுவருகிறது.

2014-15லிருந்து 2020-21 வரையில் 4.86 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளின் சொத்துகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. பொதுத்துறை பங்குகளை விற்பதன் உச்சமாக, ஒட்டு மொத்த நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுத்தள்ள தீட்டிய திட்டங்களுக்குப் பெயர்தான் ஆத்ம நிர்பர் திட்டம். அதன் அங்கமான தேசிய பணமயமாக்கல் திட்டம் மூலம் அரசு வைத்துள்ள அனைத்து சொத்துக்களையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதி திரட்டலாம் என்கிறது பா.ஜ.க.

இத்திட்டத்தின் கீழ் ரயில் பாதைகள் மற்றும் நிலையங்கள், தொலைத்தொடர்பு அமைப்பு, மின்சாரத்துறை, எண்ணெய் எரிவாயுக் குழாய்கள், சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்டு 6 லட்சம் கோடி மதிப்பிலான பொதுச்சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு 40 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளது மோடி அரசு. பல பத்தாண்டுகள் தொழிலாளர்களின் உழைப்பாலும் மக்களின் வரிப்பணத்தாலும் உருவாக்கப்பட்ட விலைமதிப்பற்ற சொத்துக்களை மொத்தமாக வாங்குவதற்கு காசு இல்லாததால் ‘குத்தகை’ என்ற பெயரில் கொடுக்கிறது பா.ஜ.க. அரசு. ஆனால் பெயர் மட்டும்தான் வேறுபாடு.

***

பொதுவாக கார்ப்பரேட்டுகளுக்கு என்பதைவிட தனக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானியை பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசு அசுரத்தனமாக வளர்த்துள்ளது. இந்த எட்டாண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், அதானியின் சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது.

2014-ல் இருந்து 2019 வரையிலான காலத்தில் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. அம்பானியின் சொத்துமதிப்பு 118 சதவிகிதம் அதிகரித்து 1.68 லட்சம் கோடியிலிருந்து 3.65 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதானியின் சொத்துமதிப்பு 121 சதவிகிதம் அதிகரித்து 50.04 ஆயிரம் கோடியிலிருந்து 1.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 313வது இடத்திலிருந்த அதானி மோடியின் தயவால் 12வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறார்.

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை அதானிக்கு கொடுப்பதற்காக, கோத்தபய அரசிடம் மோடியே பேரம் பேசியுள்ளார் என்ற செய்தி அண்மையில் அம்பலமானது. ‘உலகம் சுற்றும் வாலிபனான’ மோடி ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் அம்பானிக்கும் அதானிக்கும் சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கின்றன என்பதை தற்போது கணக்குப் போட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

2014 நவம்பரில் மோடியின் ஆஸ்திரேலியா பயணம்; அதைத் தொடர்ந்து 200 கி.மீ. குறுகிய ரயில் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசிடமிருந்து அதானி பெற்றார். 2015 ஜூனில் வங்கதேசம் பயணித்தார் மோடி; அவ்வாண்டில் வங்கதேசத்தில் ரிலையன்ஸ் குழுமம், அதானி குழுமம் இரண்டும் சேர்ந்து 4.5 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு மின்வாரியத்திடமிருந்து ஒப்புதல் பெற்றது. 2014 ஆகஸ்டு, செம்படம்பர் மற்றும் 2016 நவம்பர் என தொடர்ச்சியாக பலமுறை மோடி ஜப்பான் சென்றதன் பயனாக, 2018-ல் அதானி குழுமம் ஜாப்பானின் என்.ஒய்.கே ஆட்டோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஆட்டோமொபைல் சரக்கு ரயில்களை இயக்க ஒப்பந்தம் பெற்றது.

2015 ஜூலை மோடியின் ரஷ்யப் பயணத்தை அடுத்து, ரிலையன்ஸ் குழுமத்துடன் அல்மஸ் அண்டே என்ற ரஷ்ய வான் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. 2016 அமெரிக்கப் பயணம், அதையொட்டி அமெரிக்கப் போர் கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸுக்கு கிடைத்தது. 2015 மலேசிய பயணம், அதைத் தொடர்ந்து அதானிக்கு கிடைத்த துறைமுகத் திட்டம்… என இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடைசியாக இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள ஐ2யு2 கூட்டமைப்பின் மாநாட்டுக்கு பிறகு அதானிக்கு இஸ்ரேலின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான ஹைபா குத்தகைக்கு கிடைத்திருக்கிறது.

கார்ப்பரேட் சேவைக்கு கைமாறாக, பா.ஜ.க.விற்கு பல நூறு கோடிகளை தேர்தல் நன்கொடையாக பொழிந்துள்ளார்கள் கார்ப்பரேட்டுகள். ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கைப்படி (ADR), 2020-21 ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஏழு தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 258.43 கோடி நன்கொடைகளில், 82.05 சதவிகித நிதியை (212.05 கோடி) பா.ஜ.க. என்ற ஒரே கட்சி பெற்றுள்ளது.

***

அம்பானி, அதானிகளின் அசுர வளர்ச்சியைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு ஆகப் பிற்போக்கான பிரிவானது தங்களையும் பாசிச முகாமில் இணைத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ்.இன் தயவை நாடுகிறது.


படிக்க : லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!


எச்.சி.எல். நிறுவனத்தின் முதலாளி ஷிவ் நாடார், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம் ஜி ஆகியோர் நாக்பூருக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சந்தித்து பேசியுள்ளனர். ராகுல் பஜாஜ் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ஸ்மிருதி மந்திர் சென்றார்.

கடந்த ஏப்ரல் மாதம்கூட ரத்தன் டாடா மோகன் பகவத்தைச் சந்திப்பதற்குச் சென்றிருந்தார். 2018 ஆம் ஆண்டு டாடா அறக்கட்டளை நாக்பூர் தேசிய புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து சேவை வழங்கிய ஆர்.எஸ்.எஸ்-ன் ஆபாஜி தாட்டே அறக்கட்டளைக்கு 100 கோடி நன்கொடை வழங்கியது.

இவ்வாறு ஒரு காவி –  கார்ப்பரேட் கூட்டணி உருவாகி நம் நாட்டை அழித்துவருகிறது. தங்களது மேலாண்மையைச் செலுத்துவதற்கு பாசிச ஒடுக்குமுறைகளைக் கையாண்டுவருகிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரான இக்கூட்டணியை வீழ்த்த இப்பாசிச கும்பலால் பாதிக்கப்படும் அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாகத் திரள்வதைத் தவிர வேறு வழியில்லை.


வேல்முருகன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க