லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!

இயற்கையின் தொண்டையை கவ்வியபடி அதன் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்ற முதலாளித்துவ ஓநாய்களை சுட்டு வீழ்த்தாமல் இயற்கையின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியாது.

திகபட்ச வெப்பநிலையின் காரணமாக தென்மேற்கு பிரான்சு பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 7 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயால் பிரான்சு மட்டும் பாதிக்கப்படவில்லை. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
காட்டுத்தீயினால் வெப்பநிலை மேலும் கடுமையாக அதிகரித்து ஐரோப்பா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பா முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 47 சதவிகித நிலங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 சதவிகித நிலங்கள் சிவப்பு எச்சரிக்கையில் உள்ளன. மேலும் இங்கிலாந்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள அங்காடிகள் பொதுமக்களை 3 முதல் 5 குடிநீர் பாட்டில்களை மட்டும் வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


படிக்க : இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !


இப்படி காட்டுத்தீயின் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஜெர்மனி நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான ரைன்‌நதியின் நீர் மட்டமானது உயர்ந்து வரும் வெப்பநிலையால் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த நதியில் நடைபெற்ற வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து செலவு கூட அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஒரே முறையில் ஏற்றிச் செல்ல வேண்டிய சரக்குகளை குறைந்த அளவு நீர் மட்டம் காரணமாக இரண்டு அல்லது மூன்று முறையாக ஏற்றிச் செல்ல நேரிடுவதால் வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் அரிதான நிகழ்வாக இருந்த காட்டுத்தீ மற்றும் வெப்பநிலை உயர்வு இனிவரும் காலங்களில் சாதாரணமாகவும் கடுமையானதாகவும் இருக்கப்போகிறது. எனவே தங்களுடைய எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்து உலகளாவிய கரியமில வாயுக்களின் வெளியீட்டை பெருமளவில் குறைக்குமாறு உலக அரசுகளை விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இப்படி பல முறை விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தாலும், உலகமே அழிந்தாலும் நாங்கள் எங்களுடைய லாப நோக்கத்தை பாதிக்கும் செயல்களான புதுப்பிக்க தக்க ஆற்றல் வளங்களான சூரிய ஒளி, காற்று ஆற்றல், அலை ஆற்றல் போன்ற ஆற்றல் வளங்களை பயன்படுத்த முடியாது என்பதை சொல்லாமல் சொல்கின்றன முதலாளித்துவ அரசுகள்.

இயற்கையையும் தனக்கான ஓர் பண்டமாகவே வைத்திருக்கின்ற முதலாளித்துவ உற்பத்தி முறை, தன்னுடைய லாபவெறிக்காக இயற்கையாக ஓடும் தண்ணீரையும், அனைவரும் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து அதனை பண்டமாக்கி பணம் பார்க்கிறது.


படிக்க : COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!


முதலாளித்துவத்தால் ஒரு நாளுமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத லாப வெறி இயற்கையை சரமாரியாக சுரண்டுகிறது. இதனால் முதலாளிகளுக்கும் பாட்டளிகளுக்குமான முரண்பாடு, இயற்கைக்கும் மனித குலத்திற்குமான முரண்பாடாக மாறிக்கொண்டு இருக்கிறது.
இயற்கையின் தொண்டையை கவ்வியபடி அதன் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்ற முதலாளித்துவ ஓநாய்களை சுட்டு வீழ்த்தாமல் இயற்கையின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியாது.

தேவைக்கு அதிகமாக பண்டங்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து, தேவையின் அடிப்படையில் உற்பத்தி செய்யக்கூடிய சோசலிச உற்பத்தி முறையை நோக்கமாக கொண்ட புரட்சி மட்டுமே ஒட்டுமொத்த இயற்கையையும், மனித சமுதாயத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே தீர்வு. ஏனெனில் நம் முன் இருப்பது இரண்டே தேர்வுகள் மட்டுமே. ஒன்று புரட்சி! மற்றொன்று பேரழிவு!

அய்ன்ஸ்டைன்
செய்தி ஆதாரம்: பிபிசி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க