உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து:
பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பாசிச பிஜேபி அரசு!

த்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரகாசி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் போன்ற ஆன்மீக வழிபாட்டுத்தளங்களை இணைக்கும் வகையில், சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப்பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தற்போது ஏழாவது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகள் அகற்றப்பட்ட பகுதிகளில் தளர்வான மண் மற்றும் பாறைகள் விழுந்துகொண்டே இருப்பதால், செயல்பாடு தடைபடுகிறது எனவும், தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால் மீட்புப்பணி தாமதமாகலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படிக்க : செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

இந்நிலையில், நேற்று(17.11.2023) மீட்பு பணி நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென விரிசல் சத்தம் கேட்டதாலும் இரண்டாவது துளையிடும் இயந்திரம் சேதமானதாலும் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பாக இதேபோன்ற சத்தம் கேட்டிருக்கிறது. மேலும் அங்கே மீண்டும் நிலம் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது” குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்கள் முழுவதும் கிரிக்கெட்டை வைத்து தேசவெறியூட்டிக்கொண்டிருக்கும் வேளையில் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் நிலை பற்றி எந்த விவாதமும் இல்லை.

ஆன்மிக சுற்றுலாவும் நிலப்புதைவு நகரங்களும்

ஒன்றிய பிஜேபி அரசின் ‘லட்சியத் திட்டம்’ என்று அறிவிக்கப்பட்டுத்தான் சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள இந்துக் கோயில்களுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறியும், தேசியப் பாதுகாப்புக்கானத் திட்டம் என்று கூறியும் இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது மோடி அரசு. தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக் கழகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அனுமதியளிக்கப்பட்டு சுரங்கப்பாதை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனது இந்துத்துவ அரசியல் நோக்கங்களை கணக்கில் கொண்டு சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மோடி அரசானது, திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியின் சுற்றுச் சூழல், புவியியல் பலவீனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளில் சாலைகள், சுரங்கப்பாதைகள், நீர்மின் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இமயமலை போன்ற நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்புகள், நிலநடுக்க அபாயத்துக்கு உட்பட்டவையாக உள்ளன. ஏற்கனவே மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவு என தொடர் பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது உத்தரகாண்ட். கடந்த ஜனவரி மாதம் ஜோசிமத் நகரமே, நிலப்புதைவு நகரமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பலவீனமான உத்தரகாண்ட் மலைப்பகுதியில் உள்ள பாறைகள் நடந்து செல்லும்போதே பல இடங்களில் உடைந்து உதிரும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற பகுதிகளில் வாகனங்கள் செல்வதே ஆபத்தானது எனும்போது சுரங்கப்பாதை திட்டம் எவ்வளவு அபாயகரமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

படிக்க : ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், சுற்றுச்சூழல், புவியியல் அபாயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த அளவிற்கு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளில் அபாயகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது எனத் தெரிந்தும் தனது கார்ப்பரேட் சுரண்டலை உள்ளடக்கிய இந்துராஷ்டிர அரசியல் நோக்கங்களுக்காக மக்களை மிகப்பெரும் இயற்கைப் பேரழிவு அபாயத்துக்குள் தள்ளிவிடுகிறது பாசிச பிஜேபி அரசு. அதற்கான ஒரு உதாரணம்தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து.

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க