சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

ஃபிரட் எங்ஸ்ட் (Fred Engst) (சீனப்பெயர் யாங் ஹெபிங் Yang Heping) உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் (Onurcan Ulker) 2017 ஏப்ரல் 7-ம் தேதியன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார். பிரட் எங்ஸ்டின் தாய் ஜோன் ஹின்டன் ஒரு அணு விஞ்ஞானி. அமெரிக்காவின் முதல் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்.

ஃபிரட் எங்ஸ்ட்

அணுகுண்டைக் காட்டி ஜப்பானை அச்சுறுத்துவது மட்டுமே அமெரிக்கா அரசின் நோக்கம் என்ற அவருடைய அப்பாவித்தனமான நம்பிக்கையைத் தகர்த்தது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு. அந்தக் கணம் முதல் அமெரிக்காவில் அணுஆயுத எதிர்ப்பு – போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் 1948-இல் புரட்சியின் தருவாயில் இருந்த சீனத்துக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். அங்கே பால் பண்ணைத் தொழில் வல்லுநரான எர்வின் எங்ஸ்டை மணந்தார்.

1952-இல் இவர்களுக்குப் பிறந்த மகன் ஃபிரட் எங்ஸ்ட். இவர் பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலராக இருந்தார். பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆலைத்தொழிலாளியாக சீனத்தில் பணியாற்றி விட்டு, 1974-இல் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுமார் 12 ஆண்டு காலம் பல ஆலைகளில் பணியாற்றிக் கொண்டே படித்துப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2007-இல் சீனத்துக்குத் திரும்பி, பெய்ஜிங் பல்கலைக்கழகமொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஒனுர்கான் உல்கர் துருக்கியில் பிறந்தவர். அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர் சீனா சென்று அங்கே பீகிங் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் சீனத்தில் பணிபுரிகிறார்.

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

*****

ஒனுர்கன் உல்கர்: உங்களின் அறிமுகத்திலிருந்து தொடங்கலாமா?

ஃபிரட் எங்ஸ்ட் : நான் 1952-இல் பெய்ஜிங்கில் பிறந்து, சீனாவின் பழங்கால தலைநகரான ஷி-ஆன்-ல் (Xian) வளர்ந்தேன். 1966-இல் கலாச்சாரப் புரட்சி தொடங்குவதற்கு முன்பு, எங்கள் குடும்பம் இடமாற்றப்பட்ட போது நான் திரும்பவும் பெய்ஜிங்குக்கு வந்தேன். என் வாழ்க்கையின் முதல் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை சீனாவில் கழித்தேன். பெரும்பகுதி ஷி-ஆன்-ல் கழித்தேன். அந்தக் காலத்தின் கடைசி எட்டு ஆண்டுகள், கலாச்சாரப் புரட்சியின் உச்சகட்ட காலத்தில், பெய்ஜிங்-கில் இருந்தேன்.

அந்தக் காலத்தில் மற்ற இடங்களில் இருந்த அளவிற்கு குழப்பமான நிலையில் பெய்ஜிங் இல்லை. நடுநிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஐந்தாண்டு நான் என்னுடைய சக மாணவர்களோடு தொழிற்சாலையில் வேலை செய்தேன். என்னுடைய மற்ற சில சகாக்கள் கிராமப்புறத்துக்கு வேலை செய்யப் போனார்கள். நானும் அவர்களோடு போக விரும்பினேன். ஆனால், நான் ஒரு வெளிநாட்டுக்காரனாக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பிறகு, என்னுடைய முயற்சியால், என்னுடைய தம்பி, தங்கை போக முடிந்தது.

சோசலிச சமூகத்தைக் கட்டியமைப்பதில் மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்ட தோழ்ர் மாவோ சே துங்.

பின்னர் 1974-இல் நான் அமெரிக்காவுக்கு போய் அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கழித்தேன். ஆனால், அடிக்கடி சீனாவுக்குத் திரும்பி வந்தேன். பெய்ஜிங் -ல் நடந்த 1989 நிகழ்வுகளுக்குச் சற்று முன்னர் 1988-ம் ஆண்டில் ஒரு முழு ஆண்டு இங்கேயே கழித்தேன். பின்னர் 2000-ஆம் ஆண்டில் இன்னொரு ஆண்டு இங்கே ஆசிரியராகக் கழித்தேன். இடைப்பட்ட ஆண்டுகளில் என்னுடைய பெற்றோர்களையும் நண்பர்களையும் பார்க்க அடிக்கடித் திரும்பி வந்தேன்.

கடைசியில், 2007-இல் சீனாவுக்கே வந்துவிட முடிவு செய்தேன். அப்போதிருந்து இங்கேயே ஆசிரியராகவும், என்னுடைய ஆராய்ச்சியை நடத்திக் கொண்டும் இருக்கிறேன். மாவோ காலத்திய அரசியலையும் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்வது எனது வாழ்நாள் இலக்கு. அந்த அடிப்படையில், கடந்த பத்து வருடங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன என்று என்னால் கூற முடியும்.

மையமான கேள்வி – புதிய சோசலிச சமூகத்தைக் கட்டுவது எப்படி?

ஒனுர்கன் உல்கர்: அப்படி என்றால், நீங்கள் மாவோயிச சீனாவில் பல காலம் இருந்திருக்கிறீர்கள். மேற்குலகைச் சேர்ந்த மாவோயிச விமர்சகர்கள், மாவோயிசமானது மக்களை அதிகப்படியாக அரசியல்படுத்திவிட்டது என்றும் தொடர்ந்து உறுதியின்மையைப் பரப்பி, நிறுவனங்கள் எதுவும் நிலைபெற முடியாமல் கெடுத்து விட்டது என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். மாவோயிச சீனாவில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது? அதிகப்படி என்று சொல்லப்படும் பொது மக்களுடைய அந்த அரசியல்மயமாக்கம் ஒருவகையான குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததா?

ஃபிரட் எங்ஸ்ட் : இந்தக் கேள்வி சிக்கலானதுதான். விசயத்தை இப்படிச் சொல்லலாம். நீங்கள் அடக்குமுறையை நியாயப்படுத்தப் போகிறீர்களா, அல்லது, அடக்குமுறையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்யப் போகிறீர்களா? வேறு வார்த்தைகளில் சொன்னால், பழைய ஆதிக்க சக்திகளைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் புதிய ஆதிக்க சக்தியாக மாறப் போகிறீர்களா, அல்லது, அடக்குமுறை அமைப்பையே மொத்தமாக அழிக்க விரும்புகிறீர்களா? என்பதுதான் மையமான பிரச்சினையாக இருந்தது.

பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தவர்கள் புரட்சிகர அணிகளில் இருந்தார்கள். ஆனால், அடக்குமுறை அமைப்பு என்ற ஒன்றே இருக்கக் கூடாது எனப் புரிந்து கொண்டு அவர்கள் எதிர்க்கவில்லை. ஆகையினால், புரட்சியாளர்கள் ஆட்சியாளர்களாக மாறியதும் புதிய பிரச்சனை முளைத்தது. அவர்கள் மக்களின் பெயரால், மக்களோடு மக்களாக இருந்து கொண்டு ஆளப் போகிறார்களா அல்லது இன்னொரு புதிய ஆதிக்க சக்தியாக மாறப் போகிறார்களா? புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறுவதை எப்படித் தடுப்பது என்பது தான் மையமான பிரச்சனையாக இருந்தது.

நகர்புற படித்த இளைஞர்கள், தங்களைப் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டில் மறுவார்ப்பு செய்துகொள்ள கிராமப்புறங்களுக்குச் செல்லுமாறு அறைகூவல் விடும் சித்திரச் சுவரொட்டி.

1949-லிருந்து 1956 வரையிலான முதல் ஏழு ஆண்டுகளில், விவசாயத்தைக் கூட்டுப் பண்ணைகளாக மாற்றுவதில் மாவோவின் சீனா அருமையான வெற்றியடைந்தது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. தனியார் தொழிற்சாலைகளை அரசு நிறுவனங்களாகவும், அரசு – தனியார் கூட்டு நிறுவனங்களாகவும் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. அதாவது, அடிப்படையில், அவர்களால் முதலாளித்துவ – அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றியமைப்பதை நிறைவு செய்ய முடிந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து உடனடியாகவே, தொழிற்சாலையிலும் நகரங்களிலும் பிராந்தியங்களிலும் மக்கள் சில பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள். அதனையொட்டி வேறு சில கேள்விகள் எழுந்தன.

முரண்பாடுகளைக் கையாள்வதில் அதிகாரவர்க்க அணுகுமுறையைக் கடைப்பிடித்ததன் காரணமாகத் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு உள்ளது. ஹெனான் பிராந்தியத்தில் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலையேபடாமல், விமானநிலையம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று இராணுவம் விரும்பியது. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, தடாலடியாக விமானநிலையத்தைக் கட்டி விடலாம் என்று இறங்கினார்கள். விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. எதிர்த்தார்கள், சாலையை மறித்தார்கள். மாவோவின் தொகுப்பு நூல்களில் 5-வது தொகுதியில் இந்த எடுத்துக்காட்டு உள்ளது.

ஒனுர்கன் உல்கர்: மாவோ இந்த விசயத்தில் டெங் சியாவ்பிங் (Deng Xiaoping) மேல் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார்…

ஃபிரட் எங்ஸ்ட் : ஆம். அதைச் செய்தது, டெங் சியாவ்பிங் தான். இந்த மாதிரி பல உதாரணங்கள் உள்ளன. எனவே, பிரச்சனை இதுதான். நிர்வாகம் செய்பவர்களுக்கும் நிர்வாகம் செய்யப்படுபவர்களுக்கும் இடையே தவிர்க்க முடியாமல் அன்றாடம் தோன்றும் முரண்பாடுகளை எப்படிச் சமாளிப்பது? உற்பத்தியை எப்படிக் கொண்டு செல்வது? என்ன செய்வது என்பதற்குப் பல வேறுபட்ட கருத்துகளும் அபிப்ராயங்களும் இருந்தன.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்வது? மக்களுடைய கருத்துக்குக் காது கொடுத்து, தீர்வு கண்டுபிடித்து, ஒருமித்த கருத்தை அடைய முயற்சிப்பதா அல்லது முடிவுகளை மக்கள் மீது அடாவடியாக திணிப்பதா? இந்தக் கேள்விகள் உற்பத்தி நிகழ்வுப்போக்கை எப்படி ஜனநாயகப்படுத்துவது என்பது தொடர்பானவை.

சோசலிசக் காலகட்டத்தில் இரண்டு வகையான மிகத் தெளிவான முரண்பாடுகள் இருந்தன என்பது 1956 வாக்கில் தெளிவாகி விட்டது. ஒரு பக்கம், பழைய நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் நிலத்தின் மீதும் தொழில் நிறுவனங்கள் மீதும் தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்ட ஆத்திரத்தில் இருந்தார்கள். சோசலிசத்தை ஓழித்துக்கட்ட விரும்பினார்கள்.

மறுபக்கத்தில், தினசரி உற்பத்தியை எப்படி நடத்துவது தொடர்பான சின்னச் சின்ன விசயங்கள் பற்றிய முரண்பாடுகள். ஒரு பள்ளியையோ பண்ணையையோ நிர்வாகம் செய்வது எப்படி? நிர்வாகிகளுக்கும் நிர்வாகம் செய்யப்படுபவர்களுக்கும் இடையில் வரும் மோதல்களை எப்படிக் கையாள்வது? நிர்வாகிகளுடைய அதிகாரத்துக்கு என்ன வரம்பு?

இவைதான் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று அப்போது அழைக்கப்பட்டன. ஏனெனில், இந்த முரண்பாடுகளில் இரு தரப்பினருக்கும் எதிரெதிரான நோக்கங்கள் இல்லை. அவர்களின் நோக்கம் ஒன்றுதான். அணுகுமுறையில் தான் வேறுபட்டார்கள். ஒரு தொழிற்சாலையை மேலும் சிறப்பாக, மேலும் திறன்கூடியதாக எப்படி நடத்துவது? சீனாவை ஏழ்மையிலிருந்தும் பின்தங்கிய நிலையிலிருந்தும் எப்படி மீட்பது? அதை ஒரு தொழில்மயமான நாடாக எப்படி மாற்றுவது? இவை மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள். இவற்றை எப்படிக் கையாள்வது?

புதிய அதிகாரிகளும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களும் மக்களை அடாவடியாக நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது 1956 வாக்கில் பளிச்சென்று தெரியத் தொடங்கிவிட்டது. அதனால்தான் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை விமரிசிப்பதற்கும், கட்சியைத் திருத்துவதற்கும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற இயக்கத்தை மாவோ தொடங்கினார். இப்படித்தான் பிரச்சினை வெளியே வந்து நாறத்தொடங்கியது.

அடக்குமுறை அமைப்பையே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல், பழைய அடக்குமுறையாளர்களை எதிர்க்கும் நோக்கத்துக்காக மட்டும் புரட்சியில் பங்கேற்றவர்களும் சரி, புதிய ஆட்சியாளர்களாக அதிகாரம் பெற விரும்பியவர்களும் சரி, இந்தச் சீர்திருத்த இயக்கத்தினால் அரண்டு போனார்கள். தங்களை விமர்சிப்பவர்களின் மீது தாக்குதலைத் திருப்பிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

இந்தச் சூழல்தான் சிலருக்குக் ‘குழப்பமான’ நிலையாகத் தெரிகிறது. ஏன் இந்த சீனர்களால் ‘வழக்கமான’ முறையில் வேலைகளை நடத்த முடியவில்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். ‘வழக்கமான’ வழி என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழி. ஆட்சி செய்பவர்களின் வழி. இத்தகையோர்தான் சீனாவில் எதற்காக இவ்வளவு அரசியல் கொந்தளிப்புகள் நிகழவேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

சீனா ஏன் பழைய (புரட்சிக்கு முந்தைய- மொர்) வழிமுறைக்கே திரும்பக் கூடாது என்பதுதான் அவர்கள் எழுப்பும் கேள்வியின் உண்மையான பொருள்.

தொழிற்சாலைகளில் இருக்கும் மேலாளர்களை அவர்களுக்குரிய முறையில் நிர்வாகம் செய்வதற்கு ஏன் அனுமதிக்கவில்லை? அந்த நிர்வாகிகளை ஏன் விமர்சிக்க வேண்டும்? அவர்களின் அணுகுமுறையை ஏன் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கேள்வி. உண்மையில் நிர்வாகிகள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்ள மிகவும் தயங்கினார்கள். விமர்சனங்கள் அவர்களைப் பயமுறுத்தின. விமர்சனங்கள் அவர்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கின. இதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இருந்த மேல்தட்டுப் பிரிவினர் இந்தச் சீர்திருத்த இயக்கத்தை வலதுசாரி எதிர்ப்பு இயக்கமாக 1957-ல் மாற்றினார்கள். இது ஒரு 180 டிகிரி திருப்பமாகும். இதைப் பற்றியும் நான் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

இதுதான் மாவோவின் கடைசி இருபது ஆண்டுகளைப் புரிந்து கொள்வதற்கான மையப்புள்ளி என்று நினைக்கிறேன். இந்த முரண்பாடுகள் எப்படித் தீர்க்கப்பட்டன?

நோயாளியைக் காப்பாற்றுவதற்கு நோயை குணப்படுத்துவது என்பதுதான் முதல் அணுகுமுறை. 1940-களின் ஆரம்பத்தில் துவக்கப்பட்ட ஏனான் சீர்செய் இயக்கத்தின் போது இந்த முறைதான் பயன்படுத்தப்பட்டது. சீர்செய்யும் நடவடிக்கைகளின் மூலம் முரண்பாடுகளைக் களைவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்த அடிப்படையில், கட்சித் தலைமையை விமர்சிக்க பெரிய எழுத்து சுவரொட்டிகள், மக்கள் திரள் கூட்டங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

கலாச்சாரப் புரட்சியின்போது கட்சித் தலைமையை விமர்சிக்க முன்னெடுக்கப்பட்ட பெரிய எழுத்து சுவரொட்டி இயக்கம். (கோப்புப் படம்)

மற்றொரு முறையானது இடுப்புக்குக் கீழே தாக்குவது. குறிப்பிட்ட சிலரை எதிரி என்று அடையாளப்படுத்தி, கட்சிக்கு வெளியில் உள்ள பொதுமக்களின் மூலம் அவர்களைத் தாக்குவது. இது மக்களைத் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்வதாகும். எதிர்ப்புரட்சிக்காரர்கள் என்று சிலரைக் குற்றம் சாட்டி, அவர்களை எதிரியாக அடையாளப்படுத்தி, அவர்களைத் தாக்குவதற்கு மக்களைத் தூண்டிவிடும் வழிமுறையாகும். இங்கே குறிக்கோள் நோயாளியை காப்பாற்றுவதற்கு நோயை குணப்படுத்துவது அல்ல. மாறாக, எதிர்த்தரப்பை தாக்கி வீழ்த்துவதே நோக்கம். வலதுசாரி எதிர்ப்பு இயக்கம் பின்பற்றிய வழிமுறையும் இதுதான்.

ஆகையினால், ஒரு புதிய சோசலிச சமூகத்தை எப்படிக் கட்டுவது என்ற கேள்வி தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டின் வழியாகத்தான் நீங்கள் கேட்ட கேள்வியைப் பார்க்கவேண்டும். அவ்வாறு பார்க்கவில்லையெனில், மாவோ காலத்தில் நடந்த விசயங்களெல்லாம் முட்டாள்தனமாகத்தான் தெரியும். உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஒனுர்கன் உல்கர்: அப்படி என்றால் இது பொதுமக்களுடைய அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பிரதிபலித்தது ?

ஃபிரட் எங்ஸ்ட் : பொதுமக்களுடைய வாழ்க்கையில் அது நேரடியாகப் பிரதிபலித்தது. உதாரணத்துக்கு ஒரு தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்களேன். தலைமைப் பொறுப்பில் இருப்பவர், ஒரு பட்டறையின் மேலாளர் உற்பத்தியை எப்படி நடத்துகிறார்? உற்பத்தி குறைந்தால் என்ன செய்கிறார்?

முதலாளித்துவ முறை எளிமையானது. பிரம்பு, இல்லாவிட்டால் கரும்பு. கடுமையாக வேலை செய்யாவிட்டால் துரத்தி விடுவேன்… கஷ்டப்பட்டு வேலை செய்தால் கொஞ்சம் ஊக்கத்தொகை தருவேன். நான்தான் பாஸ், நான் சொல்வதை மாத்திரம் கேள். உனக்குச் சம்பளம் கொடுப்பது உடலுழைப்புக்குத்தான். அறிவைப் பயன்படுத்தி ஆலோசனை சொல்வதற்கல்ல. இதுதான் முதலாளித்துவ அணுகுமுறை.

ஆனால், தொழிலாளி வர்க்கம்தான் சமூகத்தின் தலைவன் என்ற சூழலில், உற்பத்தி செயல்முறையை எப்படி நிர்வகிப்பது? உற்பத்தியில் ஒரு பிரச்சனை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? தொழிலாளர்களைக் கூட்டி என்ன பிரச்சனை, அதை எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். உழைக்கும் வர்க்கம்தான் சமூகத்தின் தலைவன் எனும்போது, உற்பத்தியில் தோன்றும் பிரச்சனையைத் தீர்ப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே அவசியமானதாக இருக்கிறது.

அவ்வாறு பிரச்சனைகளைச் சமாளித்து அவர்கள் மேலே வந்து விட்டால், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பிரம்மாண்டமான ஆற்றல் தொழிலாளி வர்க்கத்திடம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் செய்வதனைத்தும் நம்முடைய சொந்த நன்மைக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால், அது மக்களுடைய படைப்பாற்றலை வரம்பற்ற வகையில் கட்டவிழ்த்து விடும். கொஞ்சம் தானியங்களையும், வெறும் துப்பாக்கிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஜப்பானியர்களையும் தேசியவாதிகளையும் மக்கள் விடுதலைப் படையால் எப்படித் தோற்கடிக்க முடிந்தது? ஏனென்றால், அவர்களுக்கு ஒரு பொது இலட்சியத்தின் மேல், அதாவது அடக்குமுறையைத் தூக்கியெறிய வேண்டும் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

ஹெய்லாங்லியால் டெய்லி என்ற பத்திரிக்கையின் ஊழியர்கள், பிராந்திய கட்சிக் கமிட்டியால் நியமிக்கப்பட்ட தமது தலைவரை முதலாளித்துவப் பாதையாளராக அம்பலப்படுத்தி நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

அன்றாட தொழிற்சாலை வேலையிலும் இதே விதிதான் வேலை செய்கிறது. தலைமையில் இருப்பவர்கள் உற்பத்தித் திறன் குறைபாட்டிற்கு, அதற்கான மூல காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல், தொழிலாளர்களையே குறை கூறிக் கொண்டு இருந்தால், தொழிலாளர்கள் இயல்பாகவே உரிமையற்றவர்களாக உணர்வார்கள். தொழிலாளர்கள் அவ்வாறு உரிமையற்றவர்களாக, அதிகாரமில்லாதவர்களாக உணர்ந்தால், அவர்களிடம் தளர்வு தோன்றும். முன்முயற்சி எடுக்க மாட்டார்கள்.

உதாரணமாக, அவர்கள் ஏதேனும் பிரச்சனையைக் கண்டால், ஒரு எந்திரம் பழுதடைவதைக் கண்டால், அதைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். அது நம்முடைய பிரச்சனையல்ல என்று நினைப்பார்கள்.

ஆனால், நிறுவனம் நம்முடையது என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தால், தலைமையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்ற விசயத்தில் அவர்களால் ஆலோசனை கூற முடிந்தால், அந்த ஆலோசனைகள் உன்மையிலேயே பரிசீலிக்கப்பட்டால், தங்கள் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக அவர்கள் உண்மையிலேயே உணர்ந்தால், அப்போது பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில் அவர்களது திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.

இன்றும் பொலிவுடன் காட்சியளிக்கும் தா-ட்சாய். மாவோ உருவாக்கிய ஒரு மாதிரி கிராமம்.

இந்த அடிப்படையில் நமக்கு நேர் எதிரான உதாரணங்களும் இருக்கின்றன. தா-ட்சாய் (Dazhai) மாவோ உருவாக்கிய ஒரு மாதிரி. தா-ட்சாய் எனக்கு மிகவும் பழக்கமான ஒன்று. தா-ட்சாய்க்கு நான் பல முறை போயிருக்கிறேன். ஆறு மாதங்கள் அங்கே தங்கியிருக்கிறேன். விவசாயிகளுடன் வேலை செய்திருக்கிறேன். அதன் சுற்று வட்டார இடங்களையும் பார்த்திருக்கிறேன். தா-ட்சாயில், ஒரு வலிமையான தலைமை விவசாயிகளைத் திரட்டி, அவர்களைத் தமக்குள் விவாதிக்கச் செய்து, அந்நிய முதலீடோ எந்திரங்களோ இல்லாமல், தமது கடின உழைப்பினால் மட்டுமே, பின்தங்கிய விவசாயத்தை எப்படி மாற்றியமைக்க முடியும் என்பதைச் சாதித்திருக்கிறது. இதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இது தன்னளவிலேயே ஒரு பெரிய காவியமாகும்.

சோசலிசப் பாதையில் சென்று கொண்டிருந்த சீனத்தை முதலாளித்துவ நாடாகச் சீரழித்த டெங் சியாவ்பிங். (கோப்புப் படம்)

இதற்கு மாறாக, சீர்திருத்தத்திற்குப் பிறகு டெங்கினால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சியாவ்-காங்-சுன் (Xiaogangcun) கிராமத்தின் மாதிரியும் நம்மிடம் இருக்கிறது. தங்களுக்குள் சதாகாலமும் சண்டையிட்டுக் கொண்டிருந்த 18 குடும்பங்கள் அந்தக் கிராமத்தில் இருந்தன. உங்கள் குடும்பத்திற்குக் குழுவின் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் போது பொதுச்சொத்தைச் சுருட்டுவதில் மும்மரமாக இருப்பீர்கள். நான் உங்கள் அதிகாரத்தை அடியறுக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். அடுத்த தேர்தல் வரும்போது, நான் கூட்டுப்பண்ணையின் தலைமைப் பொறுப்புக்கு வருவேன். இம்முறை நான் கையாடல் செய்ய முயற்சிப்பேன்.. நீங்கள் எனது அதிகாரத்திற்கு எதிராகப் போராடுவீர்கள். இப்படி நம் பாத்திரம் மாறிக்கொண்டிருக்கும். ஆனால், ஒரு கூட்டுப் பண்ணை இந்த முறையில் நீண்டநாட்களுக்கு உயிரோடு இருக்க முடியாது. சீர்திருத்தத்திற்குப் பிறகு, டெங் சியாவ்பிங் சியாவ்-காங்-சுன் கிராமத்தை சீனாவுக்கு மாதிரியாக்கினார்.

ஏதோ சிறு உடைமை விவசாயப் பொருளாதாரத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளாய் சீனர்கள் அனுபவித்ததே இல்லை என்பது போல! அது பற்றி பல ஆயிரம் ஆண்டுகளாக ஏதும் தெரியாததைப் போல! இது மிகவும் கேலிக்குரியது.

எனவே, இது தான் வேறுபாடு… தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதற்கும் முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.

தொடரும்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com