Saturday, August 20, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்! கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு!!

ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்! கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு!!

-

ஹாலிவுட்

”உங்களுக்குத் தேவை திறமையான பொறியியலாளர், யாரும் நினைத்திராத உருவங்களை வடிக்கும் கணிப்பொறி வல்லுநர், இந்த ஊடகத்தைப் புரிந்து கொண்டு திரைக்கதை வார்க்கும் படைப்பாளி – இது போதும், உலகம் உங்கள் வசப்படும்; ஆயிரம் கோடி டாலர் உங்கள் கூரையைத் துளைத்துக் கொண்டு கொட்டும்” என்கிறார் ஹாலிவுட் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்’ செய்து கொடுக்கும் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் அதிபர்.

நீல வானத்தைப் பார்த்து விட்டும், அடர்ந்த கானகத்தின் இருளில் பயந்தவாறும் நடித்துவிட்டு, நடிகர்கள் போய்விடுவார்கள். வானத்தில் செவ்வாய்க் கிரகம் வெடிப்பதையும், காட்டிற்குள் டயனோசர் விழிகளை உருட்டுவதையும் கணிப்பொறி மூலம் உருவாக்குகின்ற டிஜிட்டல் – ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வல்லுநர்கள்தான் இன்றைய ஹாலிவுட்டின் நட்சத்திரங்கள்.

ஹாலிவுட் ஃபார்முலா

காதல், குடும்பம், கிராமம், பழிக்குப்பழி, சகோதர பாசம், தேசபக்தி போன்ற 9 ஃபார்முலாக் கதைகள் மட்டும் தமிழ் திரைப்படங்களில் உலவுவதாகச் சொல்வார்கள். ஹாலிவுட் படங்களும் கிட்டத்தட்ட அப்படிதான்.

நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் வில்லனை வீழ்த்தும் கௌபாய், பெல்ட்டில் தொலைபேசி – பேனாவில் துப்பாக்கி – பார்வையினால் எந்தப் பெண்ணையும் படுக்கையில் வீழ்த்தும்  ஜேம்ஸ்பாண்ட், சிலந்தி மனிதன் –வௌவால் மனிதன் – சூப்பர் மேன் போன்ற காமிக்ஸ் நாயகர்கள், மாஃபியா அல்லது தீவிரவாதியை வென்று தர்மம் காக்கும் போலீசு – இவையெல்லாம் ‘ஆக்ஷன்’ படங்கள். கல்லறைப் பேய், டி.வி. பிசாசு, உருகும் மனிதன், டிராகுலா, ஈயாக – சிங்கமாக – கழுதையாக மாறும் மனிதன், வேற்றுக் கிரக வாசிகளுடன் நட்பு – போர், டயனசோர், ஏலியன்ஸ், எந்த காலத்திற்கும் சென்று வரும் தற்கால மனிதன், விண்வெளிச் சாகசங்கள் – போன்றவை ‘அறிவியல்’ படங்கள்! மீதி – குடும்பம், காதல், நகைச்சுவை, பாலுணர்வு போன்ற ‘செண்டிமெண்ட்’ படங்கள். இடம், பொருள், காலம் அறிந்து தனது மூலதனம், தொழில்நுட்பம், அரசியல் மேலாண்மை மூலம் சர்வதேசச் சந்தையைக் குறிவைத்து எடுக்கப்படும் இந்த ‘வகை’ப் படங்களை வைத்துத்தான் உலகின் திரைப்பட ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கின்றனர் ஹாலிவுட்டின் பன்னாட்டு முதலாளிகள்.

தொழில்நுட்பமே கலையாக!

அமெரிக்காவின் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மாளிகை’ என்றழைக்கப்படும் ‘இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மேஜிக்’ எனும் நிறுவனத்தின் அதிபர் ஜார்ஜ் லூகாஸ். 1977-ம் ஆண்டிலிருந்து இவரால் வெளியிடப்பட்ட “ஸ்டார் வார்ஸ்” வரிசைப் படங்கள் ஹாலிவுட்டிற்குப் புதிய திசை வழியைக் காட்டின. இதன் பின்னர் வந்த ஸ்டார் ட்ரெக், யங் ஷெர்லாக் ஹோம்ஸ், தி அபீஸ் போன்ற படங்களில் முதன்முறையாகக் கணிப்பொறி கிராஃபிக்ஸ், முப்பரிமாண டிஜிட்டல் முறை மூலம் காட்சிகளும், பாத்திரங்களும் உருப்பெற்றன. படத்தொகுப்பில் புதுமையையும், ஒலி – ஒளிச் சேர்க்கையில் துல்லியத்தையும் – வேகத்தையும் கொண்டு வந்தது அவிட், லைட் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் ‘டிஜிட்டல் எடிட்டிங்’ என்ற புதிய முறை. இதற்காகவே திரையரங்கில் பொருத்தப்பட்ட புதிய ஒலி உபகரணங்கள் பார்வையாளர்களை மயங்க வைத்தன.

இறுதியில் தொழில்நுட்பமே கலையானது. கலிஃபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலிவுட் திரையுலகமும், கம்ப்யூட்டர் உலகமான சிலிக்கான் பள்ளத்தாக்கும் இணைந்த கூட்டணியின் ‘சாதனை’ இதுதான். தற்போது அமெரிக்கத் தமிழில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்பீல்பெர்க்கின் “ஜூராஸிக் பார்க்: தி லாஸ்ட் வோர்ல்ட்” திரைப்படத்தின் பின்னணியும் இதுதான்.

‘ஜாஸ்’ வரிசைப் படங்களில் மனிதர்களை வேட்டையாடும் சுறாமீனைப் படைத்தபோது ஸ்பீல் பெர்க்கின் வயது இருபத்தேழு. 23 வருடங்கள் கழித்து அவரது படங்களில் வேட்டையாடும் டயனசோர்தான் இடைக்காலத்தில் கலைத்துறையில் அவர் கண்ட பரிணாம வளர்ச்சி.

கற்பனை உருவங்கள், இயற்கை, கனவுகளுக்குப் பொருத்தமான குழந்தைகள் ஸ்பீல்பெர்க்கின் படங்களில் தவறாமல் இடம் பெறுவர். ‘முன்னேறிய மேற்குலக நாகரிகத்தின்’ பார்வையில் மூன்றாம் உலகம் காட்டு வாசிகளாய் இருப்பதால் விரக்தியுற்ற தனது அமெரிக்கக் குழத்தைகளுடன் நட்பு கொள்ளும் தகுதியை வேற்றுக் கிரக வாசிகளுக்கு அளிக்கிறார் போலும் ஸ்பீல்பெர்க்! டயனசோரையும், வேற்றுக் கிரக வில்லன்களையும் வீழ்த்திக் காட்டும் அமெரிக்காவை உலகின் விடிவெள்ளியாகவும், லட்சிய நாடாகவும் மூன்றாம் உலகிற்குக் காட்டுகின்றனர் ஸ்பீல்பெர்க்கும், ஏனைய ஹாலிவுட் இயக்குநர்களும்.

நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நல்லது வெல்ல வேண்டும் என்ற அவா, திரையரங்கில் அமெரிக்க ஹீரோக்கள் வில்லனை வீழ்த்தும் போது கைதட்டுகின்றது. இதில் நல்லது எது, கெட்டது எது என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிப்பார்கள். அமெரிக்க நன்மையின் பிரதிநிகளாக ஆர்னால்டு, ஹாரிசன் ஃபோர்டு, புரூஸ் வில்லிஸ், சில்வஸ்டர் ஸ்டல்லான், மெல்கிப்ஸன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்.

ஒரு படத்தில் எத்தனை நபர்களைக் கொல்கிறார்கள் என்பதை வைத்து இவர்களின் நட்சத்திர அந்தஸ்து உருவாகிறது. நாயகனின் போராட்டத்திற்கு நீங்கள் தார்மீக ஆதரவளிக்க கொடூரமாக ஒரு கொலை இருக்கும். கதையின் வேகத்தையும் கூட்ட அதிவிரைவுத் துரத்தல் காடசியும் இடம்பெறும். இறுதியில் பெரும் குண்டு வெடித்து, கட்டிடங்கள் தகர்த்து அமெரிக்க நன்மை வெற்றி பெற்றதும் மந்திரத்தில் கட்டுண்ட பார்வையாளர்கள் வெறும் வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.

கனவும் நனவும்

கார் சவாரி கூடக் கைகூடாதவர்களை விண்கலத்தில் ஏற்றி வெளியை ஊடுருவி வலம் வரும் வண்ணமயமான விண்வெளி அனுபவம் தாலாட்டுகின்றது. படம் முடிந்து வெளியில் வந்து பேருந்து நடத்துநரிடம் காசை நீட்டும் போதுதான் கட்டண உயர்வு நினைவுக்கு வருகிறது. அழகான மாந்தர்கள், எழிலான இருப்பிடம், உல்லாச வாழ்க்கையை நடத்திக் காட்டும் ஹாலிவுட்டின் சராசரி அமெரிக்க வாழ்க்கை, மூக்கு வடியும் குழந்தைகள், சமையல் பாத்திரம் கழுவும் பெண்கள், வியர்வையில் நாறும் ஆண்களும் கொண்ட நமது நரக பூமியை நினைத்து வெட்கப்படவைக்கிறது; வெறுக்க வைக்கிறது. கணிப்பொறியில் உயிர்பெற்று வரும் விதவிதமான கொடூர வில்லன்கள் ஏற்கெனவே விதியை நொந்து வாழும் நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தன்னிரக்கம் எனும் புதிய பரிமாணத்தைச் சேர்க்கின்றனர்.

அவர்களுடைய நாகரீகத்தின் சின்னங்களான பெப்சியும், கோக்கும் நம் நாட்டின் பெட்டிக்கடை வரை வந்தாயிற்று. இளைய தலைமுறை பாப் கலாச்சாரத்தின் எம். டி. வியும், அமெரிக்கக் கொள்கை பரப்பும் சி.என்.என்-னும் வீடுகளில் குதித்துவிட்டன. தினசரி 4 காட்சிகள் மூலம் நிகழ்த்தப்படும் திரையரங்க அமெரிக்கக் கனவு, தனது பிரம்மாண்டத்தின் மூலம் மெல்ல மெல்ல மூன்றாம் உலக மூளையில் ஊடுருவுகிறது.

அதற்காகத்தான் தொழில் நுட்பம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் ஒலி. நம்மிடம் இருக்கும் சமூகத் தன்மையை உறிஞ்சி, எல்லையற்று நுகரும் இயந்திரமாக மாற்றி, அதையே ரசனையாக, பண்பாக, வெறியாக மாற்றுவதற்குத்தான் அத்தனை முயற்சிகளும். இருப்பினும், குழந்தைகள் கண்டு களிக்கும் டயனசர் படங்களைப் போய் வலிந்து குற்றம் காணுவதாய்ச் சிலர் எண்ணக் கூடும்.

அதற்கு, தகவல் தொடர்பு- சேவைத்துறையின் ஒரு பிரிவான ஹாலிவுட்டையும் – அதன் எண்ணிலடங்கா துணைத்துறைகளான கேளிக்கைத் தொழில்களையும் வைத்து பன்னாட்டு மூலதனம் நம்மைச் சுரண்டுவதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்டி வைக்கும் மூலதனம்

ஹாலிவுட் படங்களைத் தயாரிக்கும் எம்.சி.ஏ. நிறுவனத்தின் கேளிக்கைத் தொழில்களின் பட்டியலைப் பாருங்கள். திரைப் படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், வீடியோ விளையாட்டு, கணினிப் பொழுதுபோக்கு மென்பொருள், இசை விற்பனை, கேளிக்கைப் பூங்கா, புத்தக விற்பனை, பரிசுப் பொருள் தொடர் கடைகள், ஆடம்பர நுகர்பொருள், கேசினோ கிளப்புகள், 368 திரையரங்குகள், உலகம் முழுவதும் திரைப்பட விநியோகம் என்று… நீண்டு கொண்டே போகிறது. இந்நிறுவனத்தைப் போன்று பாரமவுண்ட், யுனைட்டட் ஆர்டிஸ்ட், வார்னர் பிரதர்ஸ், ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா உட்பட அனைத்து ஹாலிவுட் நிறுவனங்களும் பன்னாட்டு முதலாளிகளின் கையில். ஒரு படம் வெற்றியடைந்தால் முன்னர் கண்ட அனைத்துத் தொழில்களிலும் சரக்காக்கிக் காசாக்குவார்கள்.

ஒரு வருடம் முழுவதும் தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தகம் 300 கோடி என்றால் ஒரு சராசரி ஹாலிவுட் மசாலாவின் செலவு 400 கோடி. வெற்றியடையும் படங்கள் சில ஆயிரம் கோடிகளை வசூல் செய்யும். அற்பத் தடைகளையும் அழித்து, மிரட்டல் மூலம் காட் (GATT) ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, உலக வணிகச் சந்தையில் கேளிக்கைத் தொழில்களின் மூலம் பணம் பறிப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தடையுமில்லை. எனவேதான் உலகப் பங்குச் சந்தையில் ஆதிக்கம் வகிக்கும் அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்’ எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைத் தரகர்கள் அடங்கிய மூலதனத் தெரு ஹாலிவுட்டின் கடிவாளத்தையும் கையில் வைத்திருக்கிறது.  ஹாலிவுட்டின் வர்த்தகச் சூதாட்டங்களுக்குத் தரகு வேலை செய்பவர் ஹாலிவுட்டின் பிரபலத் தரகர் மிச்சல் ஓவிட்ஸ்.

இவரைப் போன்று பல தரகர்கள் ஹாலிவுட்டில் அலைகின்றனர். பங்குச் சந்தையின் ஒழுக்கங்களான சூது, வஞ்சகம், கழுத்தறுப்பு, கால் வாருதல் அனைத்தும் அடங்கியதுதான் ஹாலிவுட்டின் பிரம்மாண்டம். பட நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரும் இந்த ஒழுக்கத்தின் மூலம் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஹாலிவுட்டும், சிலிக்கான் வேலியும், வால் ஸ்ட்ரீட்டும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்போடு அமைத்துள்ள இந்த உலகளாவிய சுரண்டல் கூட்டணியில் புதிய வரவு ஸ்பீல் பெர்க் ஆரம்பித்திருக்கும் ‘ட்ரீம் வொர்க்ஸ்’ நிறுவனம்.

பிரம்மாண்டமான டிஜிட்டல் ஸ்டூடியோ கட்டுவது உட்பட அனைத்துக் கேளிக்கைத் தொழில்களையும் விதம் விதமாகத் தயாரிக்க இருக்கும் ஸ்பீல்பெர்க்கின் நிறுவனத்தில் முதலீட்டைக் கொட்டுவதற்கு ஓடி வருகிறார்கள் முதலாளிகள். ”ஸ்பீல்பெர்க்கின் நிறுவனத்தைக் கேள்விப்பட்டவுடனே 2 பில்லியன் டாலரோடு அவரைச் சந்திக்க விரைந்தேன். இன்று வெள்ளிக்கிழமை, மசூதிக்குப் போய்த் தொழ வேண்டும் என்பதால் விமானப் பயணத்தைத் தடுத்து விட்டார் என் தந்தை” என்கிறார் அரபு ஷேக் ஒருவர்.

மசூதி- தொழுகை என்று ஆச்சாரம் பார்க்கும் ஒரு அரபு ஷேக்கிற்கு அவ்வளவு ஆசை என்றால் சுரண்டலுக்கேற்ப மதிப்பீடுகளை உருவாக்கியோ ஒழித்தோ வரும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எவ்வளவு வெறி இருக்கும்?

வானொலிப் பெட்டி கூட வாங்க முடியாத மக்கள் வாழும் நாடுகளுக்கு மத்தியில்தான் ‘ஜூராசிக் பார்க்’ அனுபவத்தைத் தரும் கேளிக்கைப் பூங்காக்களை உருவாக்குகிறார் ஸ்பீல் பெர்க். தலை பெருத்து, வயிறு வீங்கி, கால் சூம்பி நிற்கும் உயிருள்ள ஆப்பிரிக்கக் குழந்தகள் வாழும் உலகில்தான் விண்கலம் அனுப்புவதை விடச் செலவு பிடிக்கும் மனித ரோபோ இயந்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்  கலைஞர்கள். முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முன்னேறிய நாகரீகத்தின் இலக்கணம் இதுதான்.

ஆக்கிரமிப்புக்குத் துதிபாடி

”அமெரிக்காவின் பேரரசுக் கொள்கை என்பது அதன் வரலாற்றில் செவ்விந்தியர்களை ஒழித்தும், கறுப்பர்களை அடிமைப்படுத்துவதிலும் இருந்து தொடங்குகிறது.” தன் தோற்றத்திலேயே ஆக்கிரமிப்புக் குணத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைத் தான் தனது தோற்றத்திலிருந்தே பிரச்சாரம் செய்கிறது ஹாலிவுட். இதனால் தான் அமெரிக்க அரசு ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர்களை மானியமாக ஹாலிவுட் திரையுலகிற்கு வழங்குகிறது. பதிலுக்கு, கடந்த 80 ஆண்டுகளில் ஹாலிவுட் செய்திருக்கும் நன்றிக் கடன், திரைமறைவுச் சதிவேலைகள் நடத்தும் ஏவல் நாயான சி.ஐ.ஏ.வின் பணிக்கு ஈடானது.

ரசியப் புரட்சி முடிந்து இளம் சோவியத் அரசு தன் எதிரிகளிடம் போராடிய காலம்; பொதுவுடமைச் சித்தாந்தத்தின் வீரியத்தில் உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உதித்தெழுந்த காலம். ‘ஜனநாயகக் காவலனான’ அமெரிக்க அரசு, ”போல்ஷ்விசத்திற்கு எதிராகவும், புலம் பெயர்ந்தோரையும் – ஏழைகளையும் நாம் எப்படிப் பணக்காரர்களாக மாற்றுகிறோம் என்பதையும் படமெடுங்கள்” என்று ஹாலிவுட்டிற்கு 1921-இல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு முன்பேயே கம்யூனிச எதிர்ப்புப் படங்களைத் தயாரித்து வந்த ஹாலிவுட் உலகில், தனது ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தின் மூலம் முதலாளித்துவ வாழ்க்கையின் குரூரத்தையும் அற்பத்தனங்களையும் தோலுரித்து அமெரிக்காவை உறுத்தத் தொடங்கினார் சார்லி சாப்ளின். பின்னர் 2-ம் உலகப் போரில் ரசியாவை ஆதரித்து அவர் செய்த பிரச்சாரத்தையும் வைத்து ‘கம்யூனிஸ்ட் ஆதரவாளன்’ எனக் குற்றம் சாட்டப்பட்டு சாப்ளின் மேல் 10 ஆண்டுகள் வழக்கு நடந்தது. இறுதியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.

வெள்ளை மாளிகையின் முன் மண்டியிடுபவன்தான் அமெரிக்காவில் கலைஞனாக முடியும். சுதந்திர தேவி சிலையை நியூயார்க் நகரில் பிரம்மாண்டமாக வைத்திருக்கும் அமெரிக்காவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தின் அளவு இதுதான்.

2-ம் உலகப் போரில் 2 கோடி மக்களையும், அளவிலாப் பொருளையும் இழந்து ஹிட்லரை ஒழித்து மனித குலத்தைக் காப்பாற்றியது சோவியத் ரசியாவின் செஞ்சேனை. முதல் உலகப் போரில் தோற்றவர்களுக்கும் வென்றவர்களுக்கும் வட்டிக்குக் கடன் கொடுத்தே சம்பாதித்த அமெரிக்கா 2-ம் உலகப் போர் முடியும் தறுவாயில்தான் கலந்து கொண்டது. ஹிரோஷிமா- நாகசாகியில் சோதனைக்காக அணுகுண்டு போட்டு சில லட்சம் மக்களைக் கொன்றதைத் தவிர அதன் பங்கு அதிகமில்லை. ஆனால் மேலை நாடுகள்தான் ஹிட்லரை வீழ்த்தியதைப் போன்று ஏராளமான சண்டைப் படங்களை பெரும் பொருட்செலவில் எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். 1950-களில் சோவியத் ஆதரவுடன் காலனிய நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெடித்த போதும் சிவப்பின் மீது காழ்ப்பினைக் கக்கி, ‘அயர்ன் கர்ட்டெய்ன், ரெட் டானுபில், மைசன் லூசன்’ போன்ற படங்கள் வெளிவந்தன.

1960-களின் அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் காலம் வரை நடைபெற்றது வியட்நாம் போர். பல லட்சம் துருப்புக்களை இறக்கியும், வியட்நாம் முழுவதும் நாபாம் தீக்குண்டுகளை வீசியும் மாபெரும் மனிதப் படுகொலை நடத்திய அமெரிக்க இராணுவம் இறுதியில் தோல்வியுற்று நாடு திரும்பியது. தனது 23-வது வயதில் போரில் கலந்து கொண்ட ஆலிவர் ஸ்டோன் போரைப் பற்றித் தயாரித்த திரைப்படமான ‘பிளாட்டூன்’ 1975-ல் வெளியானது. வியட்நாமில் போரிட்டு மடியும் அமெரிக்க இளைஞனின் உளவியல் துன்பத்தைப் பற்றிய படமது. வியத்நாமியர்களைச் சுட்டுப் பழிவாங்கும் அமெரிக்க இராணுவத்தை ஓரளவு சித்தரித்தாலும், ஸ்டோன் இந்தப் படத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் பிரகடனம் ஒன்றும் செய்து விடவில்லை. இருந்தும் இந்தப் படத்தைக் கூடத் தயாரிக்க ஹாலிவுட் மறுத்து விட்டதால் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வெளியிட்டார் ஸ்டோன். தேச பக்தியுடன் போராடிய அமெரிக்க இளைஞர்களைக் கொச்சைப்படுத்தியதாகச் செய்தி நிறுவனங்கள் ஸ்டோனைக் கண்டித்தன.

கலைஞர்களை கம்யூனிஸ்டுகள் ஒடுக்குவதாக கோரஸ் பாடுகின்ற அமெரிக்க தாசர்களும், பேச்சுரிமை- எழுத்துரிமை- பெண்ணுரிமை- கருப்பின உரிமை- சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றில் அமெரிக்கா சாதித்திருப்பதாக ஆங்கிலப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தில் கட்டுரை தீட்டும் ஆய்வாளர்களும்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

1980-களில் அமெரிக்கா எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்ததோ, அதையெல்லாம் ஆதரித்த சண்டைப் படங்கள் சரமாரியாக வெளிவர ஆரம்பித்தன. 85-இல் சக் நாரிஸ், லீமார்வின் நடித்து வெளிவந்த ‘டெல்டா ஃபோர்ஸ்’ அதில் ஒரு திருப்புமுனை. கதை: லெபனான் தீவிரவாதிகள் ஒரு அமெரிக்க விமானத்தைத் கடத்தி பிரயாணிகளைப் பணயக் கைதிகளாக்குகின்றனர். அமெரிக்க இராணுவத்தின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவான ‘டெல்டா ஃபோர்ஸ்’ ஹாலிவுட் பாணி சாகசங்கள் புரிந்து 600 அரேபிய வீரர்களைக் கொன்று, ஒரு வீரரை மட்டும் இழந்து பணயக் கைதிகளை மீட்கிறது. படத்தைத் தயாரித்த ‘கேனன் பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு இசுரேல் அரசு 3.6 மில்லியன் டாலரை மானியமாக அளித்து ஜெருசலேத்தில் ஒரு ஸ்டுடியோவையும் கட்டிக் கொடுத்தது. உலக தாதாவின் பேட்டை ரௌடியான இசுரேல் தனது இசுலாமிய எதிர்ப்புக் கொள்கைக்காக ஹாலிவுட்டைக் குளிப்பாட்டுவது இன்றும் தொடர்கிறது.

இதே காலகட்டத்தில் ‘ராக்கி’ என்ற குத்துச் சண்டை வீரராக சில்வெஸ்டர் ஸ்டல்லான் நடித்த படங்களில், ரத்தக் காயங்களோடு முகம் வீங்கிய நிலையிலும்- எதிராளிகளான கருப்பின, ரசிய வீரர்களைப் போராடி வெல்கிறார். இறுதிக் காட்சிகளில் அமெரிக்கக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. இவர் நடித்து வெளிவந்த ‘ராம்போ’ வரிசைப் படங்களில் ரசியர்களையும், வியத்நாமியர்களையும் பந்தாடி. அவர்களின் கொடூரங்களையும் முட்டாள்தனத்தையும், அமெரிக்க வீரனின் வெல்ல முடியாத சக்தியையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறார் ஸ்டல்லான்.

ஸ்டல்லான் அமெரிக்க இளைஞர்களின் மாடலானார். ஜீன்ஸ் போட்டு, ஜிம்முக்குப் போகும் ஆறடி அமெரிக்க இளைஞர்களெல்லாம் தம்மை ராம்போவாக நினைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஹாலிவுட்டின் கவர்ச்சியான தேசபக்தி நியாயம் சேர்த்தது. கம்யூனிஸ்டுகளையும், வியத்நாமியர்களையும், அரேபியர்களையும் அற்பப் புழுக்களைப் போலக் கொன்று பார்ப்பதில் தங்கள் வக்கிரங்களை ஒளிவு மறைவின்றிக் காட்டினார்கள். ஆனால் இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளின் உண்மைக் குணம் நாம் அறியாததல்ல. நிக்கராகுவாவின் துறைமுகங்களில் கண்ணி வெடி வைத்தும், லெபனான்- ஈராக் கிராமங்களில் டன் கணக்கில் குண்டுகள் வீசியும், பொருளாதாரத் தடையின் மூலம் மருந்தின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்றும், கிரானடா, மெக்சிகோ, ஹெய்தி, குவாட்டிமாலா, டொமினிக்கன், ஹோண்டூராஸ் போன்ற நாடுகளில் தனக்கு ஒத்துவராத ஆட்சிகளை முரட்டுப் பலத்தால் கவிழ்த்தும், இன்றுவரை கியூபாவை அச்சுறுத்தியும் வரும் இந்தக் கயவாளிகள்தான் நியாயவான்களாக, அமைதி விரும்பிகளாக, மாபெரும் வீரர்களாக ஹாலிவுட்டின் படங்களில் வலம் வருகின்றனர்.

ஆக்ஷன் ஹீரோ யார்?

ஹாலிவுட்டின் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒவ்வொரு வியாழனன்றும் தனது புதிய படங்களின் தொகுப்பை அமெரிக்க அதிபரின் பார்வைக்கு அனுப்புகிறதாம். கோவில் திருவிழாவின் முதல் கௌரவம் பண்ணையாருக்குத்தான் என்பது போல. தேர்தல் பிரச்சாரத்திலிருந்து, பதவி காலம் முடியும் வரை அமெரிக்க அதிபரின் ஒவ்வொரு அசைவும் விளம்பர நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது வரும் ஹாலிவுட் படங்களில் அதிபரே ஆக்ஷன் ஹீரோவாக வருகிறார். இந்தக் கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது?

‘இன்டிபென்டன்ஸ் டே’ படத்தில் பூவுலகை ஆக்கிரமிக்கும் வேற்றுக் கிரக வில்லன்களை, அதிபரின் தலைமையில் முறியடித்து ஜூலை 4-ல் (அமெரிக்க சுதந்திர தினம்) உலகத்துக்கே விடுதலை வாங்கித் தருகிறார்கள். இதன் பிறகு வெளியான ‘ஏர் போர்ஸ் ஒன்’ படத்தில் ஜெட் விமானத்தைக் கடத்தும் அரேபியத் தீவிரவாதிகளை ஜேம்ஸ்பாண்ட் பாணிச் சாகசம் புரிந்து அதிபர் வெல்லுகிறார். இதே காலத்தில் குதிரையிலிருந்தோ- குளியலறையிலோ விழுந்து நொண்டிக் கொண்டிருந்த பில்கிளிண்டன் இந்தப் படங்களை நிச்சயம் ரசித்திருப்பார்.

பொருளாதாரத்தில் அமெரிக்காவிடம் சரணடைந்த போலி கம்யூனிச நாடான சீனாவைக் கூட ஹாலிவுட் விடவில்லை. தலாய்லாமாவின் வரலாறு, சீனாவை எதிர்த்துப் போராடும் திபெத் போன்ற கதைகளைக் கொண்டு தற்போது ஐந்து சீன எதிர்ப்புப் படங்கள் தயாராகிறதாம்.

மாபெரும் சமுத்திரங்களையும், பலவீனமான அண்டை நாடுகளையும் கொண்ட அமெரிக்காவிற்குத் தற்போது எதிரி என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. எனவே எதிரியை வென்று காட்டியே தேசபக்தியை வளர்த்த ஹாலிவுட், இப்போது தனது வில்லன்களை விண்வெளியில் தேடுகிறது. போராடுகின்ற விண்கல ஆயுதங்களைத் தருவதற்கு ஸ்பீல்பெர்க், காமரூன், லூகாஸ் போன்ற ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வல்லுனர்கள் தயாராக இருக்கின்றனர்.

காலடியில் உலகச் சந்தை

உலக வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்த பிறகு, மேல்நிலை வல்லரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உலகமய ஆக்கிரமிப்புக்குத் தடையேதுமில்லை. கடந்த பத்தாண்டுகளில் ஹாலிவுட்டும் உலகச் சந்தையைத் தன் காலடியில் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது படைப்புத் தரத்தினால் அல்ல; மூலதன- அரசியல் ஆக்கிரமிப்பினால் மட்டுமே.

இந்தியாவில் 8 ஹாலிவுட் நிறுவனங்கள் கிளைகளைத் திறந்திருக்கின்றன. ”பெரு நகரங்கள் மட்டுமல்ல, போடிநாயக்கனூர் கூட முக்கியமான ஏரியாதான்” என்கின்றார் இந்நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி. ‘லாஸ்ட் வோர்ல்ட்’ தென்னிந்திய மொழிகளில் ஓடுகிறது. ‘ஸ்பீடு’ திரைப்படம் கேரளாவில் 120 திரையரங்குகளில் ஓடியது. இனி வருடத்திற்கு 40 படங்கள் வர இருக்கின்றன.

பாரீஸ் நகரில் ‘யூரோ டிஸ்னி லேண்ட்’ திறக்கப்பட்ட போது ”அமெரிக்கக் கலாச்சாரத்தை அனுமதியோம்” என்று பிரெஞ்சு மக்கள் எதிர்த்தார்கள். இன்று தங்கள் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காமல் ஐரோப்பியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் திண்டாடுகின்றனர். ”ஹாலிவுட்டிற்கு அடுத்தபடியாகத் திரைப்படங்களை ஏற்றுமதி செய்யும் ஹாங்காங்கும் இனி தேறாது” என்கிறார் ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான்.

உலகை வளைத்துவிட்ட ஹாலிவுட் தனது ஃபார்முலாப் படங்களுக்கு ஏற்ற திறமையாளர்களை மட்டும் உலகெங்கிலிருந்தும் கொண்டு வந்து விடுகிறது. கம்ப்யூட்டர் நகரமான சிலிக்கான் வேலியிலும், விண்வெளி மையமான நாசாவிலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் வல்லுநர்கள் இருப்பது போலத்தான் ஹாலிவுட்டிலும். மூளை உழைப்பிற்கும், சந்தை விற்பனைக்கும் உலகமே அவர்களுக்குக் கடன்பட்டவர்கள் போலும்.

என்ன இருந்தாலும் ஹாலிவுட் படங்களைப் போல் யார் எடுக்க முடியும் என்கிறார்கள் சிலர். குருச்சேத்திரத்தில் பல்வேறு கதைகள் கேட்டும் அசையாத அருச்சுனன், சங்கு சக்கர கதாயுதங்களுடன் கிருஷ்ணன் பிரம்மாண்டமாக விசுவ ரூபமெடுத்துத் தரிசனம் காட்டிய பின்தான் பணிகிறான்; போருக்குச் செல்கிறான்.

”நான் வெல்லற்கரியவன்; பிரம்மாண்டமானவன்; வல்லவனுக்கே வாழ்வு” என்று ஏகாதிபத்தியமும் அதைத்தான் சொல்கிறது. ரத, கஜ, துரக பதாதிகளுடன் அவர்கள் வருகிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்கு முப்படை; சதிக்கு சி.ஐ.ஏ.; துரோகத்திற்குத் தன்னார்வக் குழுக்கள்; பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு ஆறாவது படையாக- ஹாலிவுட்.

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­_________________________________________ 

புதிய கலாச்சாரம், நவம்பர் – 1997.

_________________________________________

  1. அடுத்த 15 வருடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று பதினைந்து வருடங்களுக்கு முன்னரே அறிவித்த கட்டுரை, பகிர்வுக்கு நன்றி

  2. வினவு,

    ரெட் டானுபில், மைசன் லூசன்’ இந்தப் படங்களின் ஆங்கிலப் பெயர்களைக் கொடுக்கவும். அவைகளைத் பற்றி தேடுவதற்கு உதவியாக இருக்கும்.

    நன்றி

    கம்யூனிஸ்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க