கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 10

முதல் பாகம்

8. கட்சி நிறுவனக் கட்டமைப்பு பற்றி

43. பரந்து விரிந்ததாக எஃகுறுதி வாய்ந்ததாக கட்டியமைக்கப்படும் கட்சி நிறுவனமானது, வெறும் புவியியல் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட மாவட்டத்தின் யதார்த்தமான பொருளாதார, அரசியல் மற்றும் போக்குவரத்து நிலைமைகளுக்குப் பொருத்தமாக அமைக்கப்பட வேண்டும். பிரதானமான மாநகரங்கள், பெரிய தொழிற்சாலை மையங்கள் கட்சி நிறுவனத்தின் ஈர்ப்பு மையமாக்கப்பட வேண்டும்.

ஒரு புதிய கட்சியைக் கட்டியமைக்கும்போது எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் பரந்து விரிந்த கட்சி நிறுவனத்தைக் கட்டியமைக்கும் போக்கு தோன்றுவதுண்டு. கட்சியின் வசம் உள்ள ஊழியர்கள் வரம்புக்குட்பட்டிருப்பதையும், மிகச் சிலவாக உள்ள இந்த ஊழியர்கள் எல்லா திக்குகளிலும் சிதறி இருப்பதையும் புறக்கணிப்பதாக உள்ளது இப்போக்கு. இது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் திறனையும் வளர்ச்சியையும் பலவீனப்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பரந்த அளவில் கட்சி அலுவலகங்கள் தோன்றுகின்றன. ஆனால், கட்சியானது மிகமிகப் பிரதானமான எந்தவொரு தொழில் நகரத்திலும் வேர்விட்டு வளர்வதில் வெற்றி பெறுவதில்லை.

மாநில மற்றும் மாவட்ட நிறுவனங்கள்

44. கட்சி நடவடிக்கை அதிகபட்ச அளவு மையப்படுத்துவதை சாத்தியமாக்குவதற்கு ஒன்றுக்கொன்று கீழ்படிதலுள்ள மேலிருந்து கீழ்வரை கிரமமான பல குழுக்களைக் கொண்டதாக கட்சித் தலைமை பிரித்து அமைப்பது உசிதமானதல்ல. ஒரு பொருளாதார, அரசியல் அல்லது போக்குவரத்து மையமாக விளங்கும் ஒரு மாநகரை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதையும் – அடுத்தடுத்த மாவட்டங்களை உள்ளடக்கி – அரசியல் பொருளாதாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விரிந்து பரந்ததாக வலைப்பின்னல் போன்ற நிறுவனங்களை அமைக்க வேண்டும். பெரிய மையத்தைச் சேர்ந்த கட்சிக் கமிட்டி, கட்சியின் பொதுப் பேரவைக்குத் தலைமை அமைப்பாக விளங்க வேண்டும். அங்கிருந்து மாவட்டத்தின் நிறுவன நடவடிக்கையை நடத்த வேண்டும். பகுதி உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்புடன் தனது கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.

மாவட்ட மாநாட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சி மத்தியக் கமிட்டியால் உறுதி செய்யப்பட்ட இத்தகைய ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளூர் நிறுவனங்களின் கட்சி வாழ்க்கையில் ஊக்கமான பாத்திரமாற்ற கடமைப்பட்டவர்கள் ஆவர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அம்மாவட்டத்தினுடைய கட்சிக் கமிட்டிக்கு இடையறாது சேர்க்கப்பட வேண்டும். இதனால் அந்தக் கமிட்டிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரளினருக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஏற்படும். வளர்ந்துவரும் போக்கில் மாவட்டத்தின் தலைமைக் கமிட்டியானது அப்பகுதியின் அரசியல் தலைமை உறுப்பாக வளர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மாவட்டக் கமிட்டியானது மத்தியக் கமிட்டியுடன் இணைந்து பொதுவான கட்சி நிறுவனத்தில் உண்மையான தலைமைப் பாத்திரத்தை ஆற்றும் உறுப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவே கட்சி மாவட்டங்களின் எல்லைகள் அப்பகுதியுடனேயே வரம்பிட்டுக் கொள்வதாக இராது. ஒரு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள உள்ளூர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சீரான முறையில் வழிநடத்துகின்ற நிலையில் மாவட்டக் கமிட்டி இருப்பதே இதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க வேண்டும். இந்த நிலை சாத்தியமற்றதானவுடன் மாவட்டமானது பிரிக்கப்பட்டு, புதிய கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பெரிய நாடுகளில் மத்தியக் கமிட்டியையும் உள்ளூர் நிறுவனங்களையும் இணைப்பதற்கான குறிப்பிட்ட இடைநிலை நிறுவனங்களை அமைப்பதும் அவசியமாகும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இந்த இடைநிலையிலுள்ள நிறுவனங்களுக்கு, எடுத்துக்காட்டாக மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநகரத்துக்கு முக்கிய இடம் கொடுப்பது அவசியமாகும். மையப்படுத்தலைப் பலவீனப்படுத்தும் என்பதால் ஒரு பொதுவிதி என்ற முறையில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

உள்ளூர் நிறுவனங்கள்

45. நாட்டுப்புற குழுக்கள், சிறு நகரக் கமிட்டிகள், மாவட்டக் கமிட்டிகள், மாநகரத்திலேயே பல்வேறு பகுதிக் கமிட்டிகள் ஆகிய உள்ளூர் நிறுவனங்களில் இருந்து பெரிய இடைப்பட்ட நிலையிலுள்ள நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சட்டபூர்வமான கட்சியாக இருக்கையில் உள்ளூர் கட்சி நிறுவனம் ஒன்று தனது உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கக் கூடிய பொதுக்கூட்டங்களை நடத்த இயலாத நிலையை அடையும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்குமானால், அந்த உள்ளூர் நிறுவனம் பிரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு கட்சி நிறுவனத்திலும் அதனுடைய உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கான குழுவாக அமைக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்களில் பல்வேறு குழுக்களைச் சேர்த்து கூட்டு அமைப்புகளாக நிறுவுவது உசிதமானது. பொதுவாக, இத்தகைய உறுப்பினர்கள் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழுவுக்குள் சேர்க்கப்பட வேண்டும். அல்லது வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களானால், தமது அன்றாட நடவடிக்கையில் ஒருவரையொருவர் சந்திக்கும்படியான குழுவாக அமைக்கப்பட வேண்டும். இத்தகைய கூட்டுக்குழுவின் நோக்கம் பல்வேறு சிறிய அல்லது வேலைக்கான குழுக்களுக்கிடையில் கட்சி வேலைகளைப் பகிர்ந்தளிப்பது, பல்வேறு நிர்வாகிகளிடமிருந்து வேலை அறிக்கைகளைப் பெறுவது மற்றும் தேர்வுநிலை உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பது ஆகியவையாகும்.

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !

பொதுவுடைமை அகிலத்தின் செயற்குழு

46. கட்சி முழுவதுமே பொதுவுடைமை அகிலத்தினுடைய வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும். அகிலத்தில் இணைந்துள்ள கட்சிகளின் வேலைகளை நெறிப்படுத்துகின்ற அகிலத்தினுடைய செயற்குழுவின் அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் 1. கட்சியின் மத்தியக் கமிட்டிக்கு அல்லது 2. மத்தியக் கமிட்டியின் வாயிலாக விசேடமான கமிட்டிக்கு அல்லது 3. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் என்று அனுப்பப்பட வேண்டும்.

அகிலத்தினுடைய அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் கட்சியை, இயல்பாகவே கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் கட்டுப்படுத்தும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க