இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள பிரதான சாலையில் 22.08.2024 அன்று பெருங்கோபம் கொண்ட மக்கள் திரள் திரண்டனர். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அறிவுத்துறையினர், மற்றும் பல்துறை பிரபலங்கள் கலைஞர்கள் என்று பலதரப்பு மக்களும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டியும், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும், பரம்பரை ஆட்சிக்கு எதிராகவும் விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் இரும்பு கம்பிகளால் ஆன கதவுகளை மக்கள் கைகளாலேயே அசைத்துத் தகர்த்துவிட்டு வளாகத்திற்குள் நுழைந்தனர். கணிசமான எண்ணிக்கையில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது.
கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் நீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸின் அடக்குமுறை நடவடிக்கைகளை நேருக்கு நேராக எதிர்த்து களத்தில் நின்றனர் மக்கள். வங்கதேசத்தை நினைவில் கொண்டு வரும் அக்காட்சிகளை வீடியோவில் காண்க.
உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு, தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வழங்கிய முக்கிய தீர்ப்பைச் செல்லாததாக்கி விடும் விதத்தில் சட்டத்தைத் திருத்தி அமைப்பதற்காக நாடாளுமன்றம் அவசர அழைப்பின் பேரில் கூட்டப்பட்டிருந்தது. மாகாண ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவருக்கு 30 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்கிற சட்ட விதி இருக்கின்ற நிலையில், அதிபர் ஜோக்கோ விடோடோ-வின் (Joko Widodo) 29 வயதேயான கடைசி மகன் கேய்சாங் பாங்கரெப் (Kaesang Pangarep) என்பவரை மாகாண ஆளுநராக நியமித்து விடும் சதித்திட்டத்துடன் கூடியிருந்தது.
நாட்டு மக்களைக் கொதித்தெழச் செய்யும்படியான ஆட்சியாளர்களின் சதியின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தோனேசியாவின் அரசியல் அமைப்பு முறை மற்றும் இன்றைய நிலவரம் பற்றி மேலோட்டமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
படிக்க: இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!
இந்தோனேசியா 28 கோடி மக்களுடன் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் அமைப்பாக இயங்கி வரும் உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. சிறியதும் பெரியதுமான 17,500க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் 6000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவுக் கூட்டங்கள் 38 மாகாணங்களாக (பிராந்தியங்களாக) பிரிக்கப்பட்டுள்ளன. மைய அரசின் அதிகாரத்துக்குட்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர்களைக் கொண்டு ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது.
மாகாண ஆளுநர்களுக்கான தேர்தலும் அதிபர், துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலுடன் ஒருங்கே, கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது.
இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருப்பது ஒன்பது கட்சிகள் இணைந்து நடத்தும் கூட்டணி ஆட்சி. மொத்தம் இருக்கின்ற 580 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆளும் கூட்டணி 525 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதில் தனிப்பெரும் கட்சியாக உள்ள இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி (Indonesian Democratic Party of Struggle PDI-P) 128 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அக்கட்சியின் சார்பாகவே குடியரசுத் தலைவராக ஜோக்கோ விடோடோ பதவி வகிக்கிறார். சில கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் மட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
2029 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய அதிபர், துணைக் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண ஆளுநர்கள் வரும் அக்டோபர் மாதம் தான் பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில் காபந்து அரசாங்கமாக இப்போதைய அரசு நீடித்து வருகிறது. இதற்குள்ளான இந்த இடைக்காலத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைத் தற்காலிக ஆளுநர் பதவிகளில் நியமிக்கும் சட்டவிரோத முயற்சியில் ஆளும் கூட்டணி ஈடுபட்டு உள்ளது.
நடைபெற்று முடிந்திருக்கும் தேர்தலில் ஆளும் ஜோக்கோ விடோடோ தரப்பில் அவரது கட்சியான இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி ஏற்கெனவே வென்றிருந்ததில் 18 இடங்களை இழந்து தற்போது 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்த நிலையில் இதன் கூட்டணிக் கட்சிகள் முறையே 102, 86, 68, 69, 53, 44 தொகுதிகளில் வெற்றி பெற்று மொத்தமாக இதே கூட்டணி மீண்டும் பெரும்பான்மை பெற்றுவிட்டது.
இப்போது அதிபராக இருக்கும் ஜோக்கோ விடோடோ ஏற்கெனவே இரண்டு முறை வெற்றி பெற்று பத்தாண்டுக் காலம் பதவி வகித்து விட்டார். சட்டப்படி மீண்டும் போட்டியிட முடியாது. அதனால் தற்போது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவரான பிரபாவோ சுபயாண்டோ (Prabowo Subianto) அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கூடவே ஜோக்கோ விடோடோவின் மூத்த மகன் ஜிப்ரான் ரக்கா புமிங் ரக்கா (Gibran Rakabuming Raka) என்பவர் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
படிக்க: கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !
அரசியல் சட்டப்படி அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிட ஒருவர் குறைந்தபட்சம் 40 வயதை அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவுக்கு வயது 36 மட்டுமே. பிறகு எப்படி இவர் போட்டியிட்டு வெற்றி பெற முடிந்தது என்பதற்குப் பின்னாலும் மோசடி தான் இருக்கிறது.
மாகாண ஆளுநருக்கு 30 வயது நிரம்பியிருப்பதே தகுதி என்ற நிலையில் அதிபராக இருப்பதற்கு 40 வயது என்று வரம்பு வைத்திருப்பது அவசியமற்றதும் தவறானதுமாகும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதியின் பொறுப்பில் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கு 40 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்கிற வயது வரம்பு சரியானதே என்ற போதிலும் ஏற்கெனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வேறு பதவிகளில் இருந்தவர்களுக்கு 35 வயது ஆகியிருந்தாலே அதில் விலக்கு அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பின்படி தான் அதிபர் ஜோக்கோவியின் மூத்த மகன் 36 வயதே நிரம்பி இருந்த போதிலும் ஏற்கெனவே அவர் ஒரு மாகாணத்தின் ஆளுநராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்திருக்கிறார் என்கிற முறையில் அதாவது அவருக்கு நீதிமன்றம் அளித்த விலக்கின் அடிப்படையில் அவருடைய தேர்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அன்வர் உஸ்மான் வேறு யாருமல்ல அதிபர் ஜோக்கோவியின் மைத்துனரும் (மனைவியின் சகோதரர்), ஜிப்ரான் ரக்கா புமிங் ரக்காவின் தாய் மாமனும் ஆவார். இந்தத் தீர்ப்பையடுத்து உறவினர் தொடர்பான வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியதன் மூலம் நீதித்துறையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டார் என்று அரசியல் சாசன நீதிமன்றத்தின் கவுரவத்துக்கான குழுவால் (Constitutional Court ethics committee) குற்றம் சுமத்தப்பட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு விட்டார்.
பதவியிறக்கம் செய்யப்பட்டால் என்ன? 36 வயதேயான ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா துணை அதிபர் தேர்தலில் பங்கேற்று இறுதியில் வெற்றியும் பெற்று விட்டார். எல்லாம் சட்டப்பூர்வமானதாக நடந்து முடிந்து விட்டது.
இந்த சூழ்நிலையில்தான் 29 வயதேயான, ஜோக்கோவின் கடைசி மகன் கேய்சாங் பாங்ரெப் ஒரு மாகாணத்தின் ஆளுநராகப் பதவி ஏற்க முடியாத சூழலை எதிர்கொண்டது ஆளும் தரப்பு. அதாவது ஒரு மாகாணத்தின் ஆளுநராகப் பதவி ஏற்கும் ஒருவருக்கு 30 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று தேர்தல் சட்ட விதி இருக்கிறது. எனவே அந்த வயது வரம்பு அவசியமற்றது என்றும் அதைத் தளர்த்தவோ நீக்கி விடவோ வேண்டுமென்றும் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு அவ்வாறு வயது வரம்பைத் தளர்த்த முடியாது அதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று தீர்ப்பு வழங்கி விட்டது (தாய்மாமன் இல்லாததால்).
இந்தத் தீர்ப்பைச் செல்லாததாக்கிவிடுவதுடன் தங்களுக்குத் தேவையான வகையில் தேர்தல் விதிமுறைகளை மொத்தமாக மாற்றி அமைத்துக் கொள்ளும் சதித் திட்டத்துடன் தற்போது இருக்கின்ற தேர்தல் சட்டத்தை மாற்றி விட்டு புதிய சட்டத்தை இயற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் தான் இந்த அவசரக்கால நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
ஆளும் அதிபரின் பரம்பரை ஆட்சிக்கான சதி நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வைரலாகப் பரவியது. இவற்றால் பெரும் கோபமுற்ற மக்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
அதாவது, இந்தோனேசியாவில் மொத்தமாக மக்களின் பேராதரவு பெற்ற கட்சி என்று எதுவும் இல்லை. இருக்கின்ற கட்சிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு தங்கள் மற்றும் தங்களது உறவினர்களின் ஆதாயங்களுக்காக அரசியல் அதிகாரத்தை தமதாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் பதவிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள எந்த எல்லைக்கும் போகத் துணிகிறார்கள். இந்த அராஜகங்களைக் கண்டு கொதிப்படைந்த மக்கள் தான் சாலைகளில் குவிந்தார்கள்.
இதே போன்ற மக்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள் யாவும் ஜகார்த்தாவை போலவே இன்ன பிற பெரும் நகரங்களான பாண்டுங், யோக்யா கர்த்தா, சுரபையா, மக்காசர் போன்ற நகரங்களிலும் நடந்தன.
யோக்யா கர்த்தாவில் அந்த மாநிலத்தின் அரண்மனை என்று போற்றப்படுகின்ற, அங்குள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தினர். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அரசியலில் பரம்பரை ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் உரத்து முழங்கினர்.
நேருக்கு நேர் மக்களை எதிர்கொள்ள முடியாத ஆளும் கும்பல் பணிந்து வேறு வழியில்லாமல் இந்த சட்டத் திருத்தத்தைக் கைவிடுவதாக அதன் துணைச் சபாநாயகர் சஃப்மி காங்கோ அகமது மூலம் அறிவித்திருக்கிறது. அத்துடன் இரண்டு நாட்களாக நடைபெற்ற மக்கள் போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனாலும் அதே ஆளும் கும்பல் ஆட்சி தொடரும் துயரமான நிலையில் தான் இந்தோனேசியா இருக்கிறது. ஆளும் கும்பலை அதே கட்டமைப்பில் அப்படியே வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அவர்களே நடத்தும் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் சாத்தியமாகாது என்பதை இம்மக்கள் திரள் பேரெழுச்சியின் மூலமாக உணர்ந்து கொண்டு விட்டனர். தாம் உணர்ந்ததை உலகுக்கும் அறிவித்து விட்டனர்.
டச்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் மூலம் 1945 ஆம் ஆண்டு சுகர்னோ தலைமையிலான இந்தோனேசிய கம்யூனிஸ்டு கட்சி (PKI) அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் ராணுவ தளபதி சுகார்டோ ஆயுத பலத்தால் ஆட்சியைக் கவிழ்த்ததோடு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை நரவேட்டையாடி கொன்றொழித்தான். அதனைத் தொடர்ந்து இந்தோனேசிய கம்யூனிஸ்டு கட்சி சுகார்டோவால் தடை செய்யப்பட்டது.
ஆனால் அந்தப் பாசிஸ்ட் சுகார்ட்டோவை மக்கள் போராட்டத்தால் வீழ்த்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி அதிபரானார் சுகர்னோவின் மகளான மேகவதி சுகர்னோபுத்ரி (Megawati Sukarnoputri). அவர் 1998 ஆம் ஆண்டு தோற்றுவித்த கட்சிதான் இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி (PDI-P). அவரது தலைமையில் இன்றுவரை இயங்கி வரும் கட்சி தான் தற்போது அதிகாரத்துக்காக இவ்வளவு தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram