இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!

இந்தோனேசிய அரசின் தத்துவமான பஞ்சசீலம் (Pancasila) என்பதற்கு ஏதுவாக இல்லாத சித்தாந்தங்களை, அதாவது மார்க்சியம் கம்யூனிசம் போன்றவற்றை, பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

0

டந்த டிசம்பர் 6, 2022 அன்று இந்தோனேசிய அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

இப்புதிய குற்றவியல் சட்டம் 1946 ஆம் ஆண்டில் இருந்து, அதாவது இந்தோனேசியா விடுதலை அடைந்ததாக கூறப்படும் ஆண்டில் இருந்து, நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டத்தை மாற்றி அமைக்கிறது. இந்த புதிய சட்டமானது டச்சு சட்டம் (Dutch law), ஹுகும் அதத் (hukum adat) என்ற வழமைச் சட்டம் (customary law) மற்றும் நவீன இந்தோனேசிய சட்டத்தின் கூட்டுக் கலவையாகும்.

200 பக்கங்களைக் கொண்ட இச்சட்டம் அதிபர் மற்றும் அரசு நிறுவனங்களை “அவதூறு” செய்வதை கடும் குற்றமாக்குகிறது. அதேபோல், மத நிந்தனைக்கான (blasphemy) வரையறையை மேலும் விரிவாக்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டில் சுகார்த்தோ-வின் (Suharto) பாசிச சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் கிடைத்த உரிமைகளுக்கு இது பெரும் பின்னடைவு என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“இப்புதிய குற்றவியல் சட்டத்தால் அரசையும் அரசின் கொள்கையையும் கேள்வி கேட்கும் அனைவரும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒருவர் தனது கருத்தைக் கூறினாலே அது அதிபருக்கு எதிரானது, அரசு நிறுவனங்களுக்கு எதிரானது என்று கூறப்படும்” என்று வழக்குரைஞராக உள்ள சிட்ரா (Citra Referandum) கூறினார்.


படிக்க: இந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் !


மேலும் அது திருமண பந்தத்தை மீறிய பாலியல் உறவுக்கும் தடை விதித்துள்ளது. திருமண உறவைத் தாண்டி யாராவது உடலுறவு வைத்துக்கொண்டால் (adultery) ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்; பாதிக்கப்பட்ட கணவன்/மனைவி மட்டுமே புகார் அளிக்க முடியும். அதேபோல், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்ந்தால் (cohabitation/living together) 6 மாதம் சிறை; பெற்றோர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். இச்சட்டம் அந்நாட்டு குடிமக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும்.

இச்சட்டத்தை திருத்துவதற்கான முயற்சி 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட போது, டச்சு காலனி கால சட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் ஒரு அங்கமே புதிய குற்றவியல் சட்டம் என்று முலாம் பூசினார்கள். ஆனால், அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதன் விளைவாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது இச்சட்டம் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருப்பதானது மத பழமைவாதம் எழுச்சி கண்டுள்ளதை நமக்கு உணர்த்துகிறது. இச்சட்டம் 37 அத்தியாயங்களையும் 624 சரத்துகளையும் கொண்டுள்ளது. இது மூன்று ஆண்டுகள் கழித்துதான், அதாவது 2025 ஆம் ஆண்டில்தான், முழுமையாக நடைமுறைக்கு வரும்.

இந்தோனேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் நிர்வாக குழுவைச் சேர்ந்த டஃபி ஹென்சன் (Taffi Hensan) “இந்தோனேசிய அரசின் தத்துவமான பஞ்சசீலம் (Pancasila) என்பதற்கு ஏதுவாக இல்லாத சித்தாந்தங்களை, அதாவது மார்க்சியம் கம்யூனிசம் போன்றவற்றை, பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அரசியல் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவர்கள் மார்க்சியம் போன்ற பல்வேறு சித்தாந்தங்களை படித்து விவாதிப்பார்கள். அது பஞ்சசீலத்துக்கு எதிராக இருக்கிறது என்று சிறையில் அடைக்கப் போகிறார்களா?” என்று கூறினார்.

மேலும், “மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அதிக கெடுபிடிகளை ஏற்படுத்தியுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால், புதிய சட்டத்தின் கீழ், ஆறு மாதம் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு வாரம் சிறை என்பதே தண்டனையாக இருந்தது” என்று அவர் கூறினார்.


படிக்க: கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !


இச்சட்டம் பெண்களின் மகப்பேறு உரிமைகளுக்கு (reproductive rights) எதிராக அமைவதோடு இல்லாமல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான‌ பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் வல்லமை கொண்டது. பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால், ‘திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்தல் / திருமண உறவைத் தாண்டி உறவு வைத்தல்’ என்பதைப் பயன்படுத்தி குற்றவாளியாக மாற்றப்படுவார்.

சட்டங்கள் இவ்வாறு திருத்தப்படுவதானது ஒரு உலகு தழுவிய போக்காகும். நவ- தாராளவாத கொள்கைகளால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க அரசுகள் அதிகமாக ஒடுக்குமுறை சட்டங்களை இயற்றுவதும் பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. அரசுக்கு எதிரான எதிர் குரல்களையும் போராட்டங்களையும் நசுக்குவதே இவற்றின் நோக்கம். பிரிட்டன் காலனித்துவ சட்டங்களை ஒழித்துக்கட்டி புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றப்போவதாக மோடி அரசு கூறுவதோடு நாம் இதைப் பொருத்திப் பார்க்கலாம். மோடி அரசு இயற்றப்போகும் புதிய குற்றவியல் சட்டங்கள் இதைவிட அரக்கத்தனமானதாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை!

பொம்மி

நன்றி: டி.டபிள்யு, அல் ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க