திர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் இந்திய ஒலிம்பிக் கழகத்தால் கடந்த ஜூலை (2018)  மாதத்தின் கடைசி வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருவர் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. தலைவர். மற்றொருவர், 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளால் விசாரிக்கப்பட்ட விளையாட்டுத்துறை நிர்வாகி.

ஆசிய விளையாட்டுப் போட்டி
பாஜக எம்.பி. பிரிஜ் பூசன் சரண் சிங்

உத்திரப் பிரதேசத்தின் கெய்சர்கஞ்ச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பிரிஜ் பூஷன் சரண் சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவின் இயக்கத் தலைவராக (Chef de Mission) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்தான் எதிர்வரும் ஆகஸ்ட் 18, 2018 முதல் செப்டெம்பர் 2, 2018 வரை இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவிருக்கும் 541 அணியினரைக் கொண்ட இந்திய விளையாட்டுக் குழுவின் இயக்கத் தலைவர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி
ராஜ்குமார் சச்செட்டி

இவருக்கு இணையாக நியமிக்கப்பட்டிருக்கும் பிற நான்கு பேர்களில் ஒருவர்தான் ராஜ்குமார் சச்செட்டி. இவர் 2010-ம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல்களின் நாயகனான சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய கூட்டாளி. அப்போட்டிகளின் இணை இயக்குனராக இருந்த ராஜ்குமார் சச்செட்டி தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அப்போது மத்திய கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியது.

இந்திய ஒலிம்பிக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரான லலித் பானாட்டை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான, தயாரிப்புக் கமிட்டியின் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகம் தேர்வு செய்ததன் தொடர்ச்சியாகவே இந்த தேர்வுகள் நடைபெற்றுள்ளன. காமன்வெல்த் ஊழலின் முக்கியக் குற்றவாளியாக லலித் பானாட்டை, சிபிஐ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலம் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.

தேசியக் கூட்டமைப்புகளின் தலைவர் பதவியில் அமர்ந்த வெகுசில இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகவும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.

தற்போது லக்னோ நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மற்றுமொரு ‘ரே பெர்லி இடிப்பு வழக்கிலும்’ குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 148 (கலவரம் செய்தல்) மற்றும் 307 (கொலை செய்ய முயற்சித்தல்) ஆகிய வழக்குப் பிரிவுகளின் கீழ் தம் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமது வேட்பு மனுவில் அவரே குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி
காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலில் கைது செய்யப்பட்டு தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான, தயாரிப்புக் கமிட்டியின் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகம் தேர்வு செய்யப்பட்ட லலித் பானட்

ராஜ்குமார் சச்செட்டி, சுரேஷ் கல்மாடியின் முன்னாள் அந்தரங்கக் காரியதரிசி ஆவார். இரயில்வேயில் ஒரு குமாஸ்தாவாக தனது பணியைத் துவக்கினார் சச்செட்டி. 2010-ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டுகளை நடத்தும் ‘பாக்கியம்’, இந்தியாவிற்கு வழங்கப்பட்ட போது, அவர் அக்குழுவின் கூடுதல் பொது இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு முக்கியப் பொறுப்புக்கு இவரை நியமித்ததை முறைகேடு என மத்திய கண்காணிப்புக் குழு குறிப்பிட்டது. இக்குற்றச்சாட்டு மத்திய புலனாய்வுப் பிரிவினால் விசாரிக்கப்பட்டது. தற்போது இவர் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயல்பாட்டு இயக்குனராகவும், இந்திய ஒலிம்பிக் கழகத்தின் கூடுதல் இணைச் செயலராகவும் செயல்பட்டுவருகிறார்.

இந்திய ஒலிம்பிக் ஆணையத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேதாவிடம், இந்த அலுவலர்கள் நியமிக்கப்படுவதற்கு ஏதேனும் விதிமுறைகள், தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளனவா என இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கேள்வி கேட்டிருக்கிறது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது குறித்துக் கேட்க அவ்வமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ராவை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது. அதுவும் முடியவில்லை. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் ராகுல் பத்நாகர் ஆகியோருக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் தற்போது வரை பதிலளிக்கவில்லை.

விளையாட்டுக் குழுவின் தலைவர் பதவி என்பது பல வகையான நிகழ்வுகளைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியின் மிக முக்கிய உறுப்பினர். மேலும் அவர் அங்கு வரக்கூடிய நம் தடகள வீரர்களுக்கான வசதிகளை உறுதி செய்தல் மற்றும் ஏற்பாட்டுக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு பொறுப்பானவர்.

இந்திய ஒலிம்பிக் கழகத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், ராஜ்குமார் சச்செட்டி மற்றும் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆகியோரின் பணி நியமனத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக தான் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த கால குற்றங்கள் கொண்ட ஒருவரை (பிரிஜ் பூஷன் சரண் சிங்) தேசிய கூட்டமைப்பின் தலைவராக அரசாங்கமே நியமித்திருக்கும் போது, ஆசிய விளையாட்டுப் போட்டிக் குழுவின் இயக்கத் தலைவராக நாங்கள் ஏன் அவரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி ’அரசன்’ எவ்வழியோ, இந்திய ஒலிம்பிக் கழகக் ’குடிகளும்’ அவ்வழியே.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க