
17.08.2026
கர்நாடகா: வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் படுகொலை
| ம.அ.க. கண்டனம்
பத்திரிகைச் செய்தி
தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள கர்நாடக பகுதியான சாம்ராஜ நகர் மாவட்டம், அனூர் தாலுக்கா பகுதியில் கர்நாடகா வாழ் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 15 அன்று அனூரில் உள்ள மரிமங்கலம் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற நாட்டு மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணிசாமி, ஜெபஸ்டின் டேவிட் குமார் மற்றும் ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோர் மீது கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு மக்கள் அதிகாரக் கழகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
உடனிருந்த, துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பித்த மரிய மகிமை தாஸ் என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் கூறும்போது, “ஊரை ஒட்டிய வனப்பகுதியின் உள்ளே மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்று வருவது வழக்கம். அதே போன்றுதான் சம்பவம் நடந்த அன்று மாலை 6 மணி வரை மாடுகள் வீடுகளுக்குத் திரும்பி வராததால் இரவு 7 மணிக்கு நாங்கள் நால்வரும் மாடுகளைத் தேடி காட்டுக்குள் சென்றோம்.
“இரவு 12 மணி வரை தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை. அதனால் இரவு பாறை மீது படுத்திருந்தோம் காலையில் எழுந்து மீண்டும் தேடுவோம் என இருந்தோம்.
“அதிகாலை நேரத்தில் யாரோ நடந்து வருவது போன்று சத்தம் கேட்டது. நான் எழுந்து பாறையின் மீது இருந்து குதித்தேன். உடனே வனத்துறையினர் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். நான் தப்பி ஓடி வந்து விட்டேன். எனக்கு வயிற்றிலும் உடலிலும் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. என்னுடன் படுத்திருந்த மூன்று பேரையும் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கேட்டும் ஊர்மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய மக்களை போலீசு கடுமையாகத் தாக்கியது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தற்போதைய நிலையில், கர்நாடக அரசு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நடவடிக்கைகள் கண்துடைப்பு நடவடிக்கைகளாக முடிந்துவிடவே வாய்ப்புகள் அதிகம். போலீசைக் காப்பாற்றுவதற்கே அதிகார வர்க்கம் முயலும். கடந்த காலங்களின் அனுபவங்கள் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான சட்ட மற்றும் களப் போராட்டங்களின் ஊடாகத்தான் நீதி பெறுவதைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதே எதார்த்த நிலைமை.
கர்நாடக அரசே!
- கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம் அனூர் தாலுகா பகுதியில் 3 தமிழர் படுகொலைக்குக் காரணமான வனத்துறை அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்! கைது செய்!
- கொல்லப்பட்ட மூன்று பேரின் குடும்பங்களுக்கும் தலா இரண்டு கோடி இழப்பீடு வழங்கு!
- மீண்டும் இது போன்ற துயர சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்!
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





