
03.05.2026
கிருஷ்ணகிரி – போத்தசந்திரம்: சாதி மறுப்பு மணம் புரிந்த பெண்ணை கொடுமைப்படுத்தும் பெற்றோர்!
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவரும் இதற்கடுத்த கிராமமான குந்துமாரனபள்ளி பகுதியைச் சேர்ந்த தேஜாஸ்ரீ என்பவரும் பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர். தீபக் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதனால் தேஜாஸ்ரீ பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்ப்பை மீறி கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்து பெற்றோர்கள் உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு தீபத்தின் வீட்டிலிருந்த தேஜாஸ்ரீயை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். கணவர் இறந்தால் செய்யும் சடங்குகளை செல்லும் வழியில் தீபக் இறந்து விட்டதாக நினைத்துக் கொள்ளக் கூறி தேஜாஸ்ரீக்கு மொட்டை அடித்து வளையல்களை உடைத்து சடங்குகள் செய்து வைத்துள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேஜஸ்ரீக்கு கருத்தடை மாத்திரை கொடுத்துள்ளனர். இதனால் அவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் தப்பித்து கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார் தேஜாஸ்ரீ. இதை அறிந்த தேஜஸ்ரீயின் பெற்றோர்கள் ஓசூர் டவுன் போலீஸ் நிலையம், எஸ்.பி அலுவலகம், ஐ.ஜி, டி.ஐ.ஜி, தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையில் தேஜாஸ்ரீயை, மிரட்டியதாக ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தேஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் தந்தை வெங்கடேஷ், தாய் சத்யபிரியா மற்றும் உறவினர்கள் மூன்று பேர் என ஐந்து பேர் மீது டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதில் இரண்டு பேரைக் கைது செய்தனர்.
தேஜஸ்ரீ, தனது கணவர் தீபக் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரான போத்தசந்திரத்தில் வசித்து வரும் நிலையில், கடந்த 23ஆம் தேதி தேர்தலில் வாக்கு செலுத்த போத்தசந்திரம் கிராமத்திற்குச் சென்ற தேஜஶ்ரீயின் பெற்றோர் அங்கிருந்த தேஜஸ்ரீ மற்றும் தீபக் ஆகிய இருவரையும் நேரில் பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளனர்.
அடுத்த நாள் பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களிடம் தனது மகள் தேஜஸ்ரீயை சிலர் கடத்திச் சென்றதாகவும், தங்களிடம் ஒப்படைக்கப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேஜஸ்ரீ மற்றும் கணவர் தீபக் ஆகியோர் ஏப்ரல் 27 அன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில், கணவர் தீபக் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் தன்னை நிம்மதி இல்லாமல் மன உளைச்சலில் இருக்கவே பெற்றோர்கள் இவ்வாறு செயல்படுவதாகவும், மேலும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் தேஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.
“சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்கிற பண்பாட்டுப் பெருவிழாவின் முழக்கத்தின் அடிப்படையில் எமது கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தில் பொதுமக்களிடத்தில் பரப்புரை செய்த போது, சாதி மத மறுப்பு மணங்கள் அதிகரித்து வருவதையும் அதனை உழைக்கும் மக்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டு வருவதையும் உணர்ந்தோம்.
அதேசமயம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிவெறி தாக்குதல்களும் சாதி மறுப்பு இணையர்கள் மீதான சமூகப் புறக்கணிப்பும் அதிகரித்து வருகின்றன. தேஜாஸ்ரீயின் பெற்றோர்கள் சிறைக்குச் சென்று வந்த நிலையிலும் தனது ஆதிக்கச் சாதி வெறி மனநிலையிலிருந்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவது என்பது பிற்போக்கு சிந்தனைகள் எஞ்சியுள்ளதை வெளிப்படுத்துகின்றன. இது போன்ற பிற்போக்கு சிந்தனைகளைத் தூக்கிப்பிடித்து தனது ஆதிக்கத்தை நிலவ துடித்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வும்.
ஆகையால் சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஒரு பண்பாட்டுப் போரைத் தொடுக்க ஜனநாயக சக்திகளும் புரட்சிகர சக்திகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தவிர, தேஜாஸ்ரீ மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோருக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தேஜாஸ்ரீ யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
அதேசமயம் சாதி மறுப்பு திருமணங்களை அரசே முன்னின்று நடத்த வேண்டும் எனவும் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களில் இரண்டாவது தீர்மானத்தைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





